மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் சிறுதை 'போதும்' 18/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************
எல்லோருக்குள்ளும் ஒரு காதல் கதை இருக்கும். வெற்றியோ தோல்வியோ எப்போதும் மறக்க முடியாத ஒரு காதல் கதையை நம் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்போம்.
என்றாவது ஒரு நாள், மனதின் ஆழம் வரை நீந்தி புதைந்திருக்கும் காதலை மெல்ல மெல்ல வருடியும் கடப்பாரை கொண்டு குத்தியும் வெளியில் எடுத்து பார்த்து இரசிப்போம்.
ஆனால், அந்தக் காதல் இன்னமுமே இயல்பாகத்தான் இருக்கிறது. பிறகுதான் நமக்கு புலப்படுகிறது; நாம் வருடியதும் நம்மைத்தான், நாம் கடப்பாரை எடுத்து குத்தியதும் நம்மைத்தான்.
காதல் பசுமரத்தாணியாய் நினைவில் இருப்பதற்கு காரணமே எல்லா ஆணிகளையும் வாங்கி கொண்டிருப்பது நம் மனம் என்பதால்தால்.
காதலை தன் சிறுகதைகளில் எழுதும் எழுத்தாளர் பல சமயங்களில் நம் இளமையில் நம் இயலாமையில் நாம் மறைப்பதில் நாம் மறக்காமல் இருப்பதில் இருந்து நம் அனுபவத்தை எந்த அனுமதியும் இன்று எடுத்துக்கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
'பெருமாள்முருகன் காதல் கதைகள்' என்றொரு தொகுப்பு வரவேண்டும் எனறு அவரது காதல் கதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது.
அவரது மலேசிய வருகையை முன்னிட்டு தினம் ஒரு சிறுகதையை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று 18வது நாள்; 18வது சிறுகதை.
ஓர் எழுத்தாளரை சந்திக்கும் முன் அவரது படைப்புகளை வாசித்தும் அது குறித்து எழுதியும் இருப்பது எனக்குமே உற்சாகத்தைக் கொடுக்கிறது.
பெருமாள்முருகன் சிறுகதை 'போதும்' 18/20.
காதல் தோல்வி பற்றிய கதைக்கரு. ஆனால் அந்தக் காதல் எங்கு தொடங்கி எங்கு சிக்குகிறது என்பதுதான் கதை. இன்னொன்றையும் சொல்லலாம்; காதல் தோல்விகளுக்கு பின்னால் நண்பர்களின் ஆதரவு மனதை எவ்வளவு ஆற்றுப்படுத்துகிறது. அதற்காகவாவது நண்பர்கள் தேவைதான் போல.
ஒவ்வொரு கதையிலும் இந்தச் சமுகத்தின் மீது தன் விமர்சனத்தை வைக்க எழுத்தாளர் தவறுவதில்லை.
இந்தக் கதையிலும் உண்டு.
' காதலிப்பவர்களைக் கொலை செய்யும் திருப்பணி புரியும் சாதியிடம் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது....' என்று காதலித்த பெண் நினைக்கிறாள் என காதலன் யூகிக்கிறான்.
நாயகனின் காதல் பிஞ்சில் முளைத்திருந்தாலும் அவள் நெஞ்சில் அவன் இன்னும் நண்பனாகவேதான் இருக்கிறான். போதாக்குறை அந்தப் பெண்ணின் குடும்பச் சூழல் வேறு.
அவள் அவனை வீட்டில் பேசத்தான் அழைக்கிறாள். அவனோ அவளது கல்யாணத்திற்கு சென்று மணமக்களோடு சாப்பிட்டு திரும்புகிறான். என்னதான் காதலில் தோல்வி கண்டிருந்தாலும் தன் காதலியின் நினைவொன்றை நண்பன் மூலம் பெற்றுக்கொள்கிறான்.
நண்பன் அப்படி எதைக் கொடுத்தான். அதுவே தனக்கு போதுமென்று நாயகனும் ஏன் சொல்கிறான் என்பதை பெருமாள்முருகனின் 'போதும்' சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
அப்படி வாசிக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் மறைத்திருக்கும் காதல் அதன் வேலையைக் காட்டி உங்களை சங்கடப்படுத்திவிட போகிறது.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக