Pages - Menu

Pages

அக்டோபர் 05, 2025

- அன்பின் ஊற்று -

இன்று ஆசிரியை விக்னேஸ்வரி மணியத்தை சந்தித்தேன்.
'அன்பின் ஊற்று' எனும் அவரது முதல் கவிதை தொகுப்பினைக் கொடுத்தார்.
இயல் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

புத்தகங்கள் பரிசாகக் கொடுப்பதைக் குறித்து ஒருமுறை பேசும்போது, நான் பலருக்கு புத்தகங்களைப் பரிசாக கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு புத்தகங்கள் அரிதாகவே பரிசாக கிடைக்கும் என்றேன். உடனே அவர் ஒரு புத்தகத்தைப் பரிசாக கொடுப்பதாகச் சொன்னார்.

அது அவரது முதல் கவிதை தொகுப்பாக அமைந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சி. நமக்கு புத்தகத்தை பரிசளித்தவரை எப்படி
வெறும்கையுடன் அனுப்புவது?

அதுதான், எப்போதும் எனக்கு பிடித்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பனை அலைகள்' என்னும் உலக இலக்கியக் கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்தேன்.

எழுத ஆர்வம் உள்ளவர்கள், தனது முன்னோடிகளின் வாழ்வைக் குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆசிரியைக்கு நிச்சயம் உதவும் புத்தகமாக இது அமையும்.

அவரின் குடும்பத்துடன் சந்தித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. பல சமயங்கள் எழுத்தாளர்கள் குடும்பத்தில் இருந்து அந்நியர்களாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எழுதுவது குடும்பத்திற்கு பிடிக்கவில்லையா அல்லது எழுதுகிறவருக்கு தன் குடும்பத்தைப் பிடிக்கவில்லையா என தெரியவில்லை.

எழுத்தாளர் விக்னேஸ்வரி மணியத்தின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

கிடைத்த கொஞ்ச நேரத்தில், முதல் புத்தகத்தில் தொடங்கி அவரின் சொந்த அனுபவங்கள் அதில் மறைந்திருக்கும் கதைகள் என எங்கள் உரையாடல் பல்வேறு தளங்களுக்குச் சென்றது.



குறிப்பாக அவர், தன் தாத்தாவைப் பற்றி சொன்னது நிச்சயம் சிறுகதைகளாக பரிணமிக்க வேண்டியவை. அம்மாக்களும் அப்பாக்களுமே குழந்தைகளிடம் இருந்து அந்நியமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் தாத்தாவுடன் எத்தனைக் குழந்தைகள் நெருக்கமாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்கு உட்பட்டதுதானே. இவரின் தாத்தாவுடனான, அதுவும் வாழும் இறுதி காலம்வரை புத்தகங்களுடனே நேரத்தை செலவிட்ட ஒரு வாசகருடனான அவரின் தாத்தாவிற்கும் அவருக்குமான அந்தக் கதைகளை இந்தத் தலைமுறைக்கு அவர் எழுதிக் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு அவரின் நேரத்திற்கு 'நேரம் கூடட்டும்'.

முகநூல் தோழியான, நமது புத்தகச்சிதகுகள் புத்தகக்கடையின் ஆதரவாளரான விக்னேஸ்வரி மணியத்தை இன்றுதான் முதன் முதலாக சந்தித்தேன். எந்தத் தயக்கமும் இன்றி எங்கள் உரையாடல் நடக்க நாங்கள் நம்பும் இந்த எழுத்துகள்தான் காரணம்.

மீண்டும் ஒருமுறை எழுத்தாளர்,கவிஞர் விக்னேஸ்வரி மணியத்திற்கு வாழ்த்துகள் கூறிக்கொள்வதோடு 'தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் மனத்தடையின்றி உரையாடுங்கள்' என்று வழக்கமான நிறைவோடு விடைபெற்றோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக