Pages - Menu

Pages

பிப்ரவரி 10, 2025

- இதுவும் கடந்து போகும் -

 

- இதுவும் கடந்து போகும் -

இந்த நெடுஞ்சாலையில்தான்
எத்தனை
நான்கு சக்கர வண்டிகள்
அவ்வளவும் பணக்காரத் திமிர்

ஏன் இரு சக்கர வாகனங்களில்
இவர்களின் இருக்கை
இருக்காதா

பொது பேருந்துகளில்
போவதென்றால்
அத்தனை இளக்காரமா

இவர்களால்தான் இவ்வளவு
தாமதம்
இவர்களால்தான் இவ்வளவு
விபத்துகள்
இவர்களுக்குத்தான் எவ்வளவு
ஆணவம்

என நான்
ஒருபோதும் நினைக்கமாட்டேன்

அப்படியான வண்டி
ஒருவனின் குடும்பத்தின்
முதல் வண்டியாக இருக்கலாம்
அப்படியான வண்டி
ஒருவனின் ஊனமுற்ற
கைக்கு ஏற்றதாக இருக்கலாம்

அப்படியான வண்டி
வாழ்நாள் முழுக்க வேலை செய்பவன் அவனுக்கு பிடித்த பாடலைக் கேட்குமிடமாக இருக்கலாம்
அப்படியான வண்டியில்
ஒருவனின் தாயோ தந்தையோ
சக்கர நாற்காலியுடன் பயணிக்கலாம்

அப்படியான வண்டியில்
ஒருவன் கர்ப்பிணிக்கு ஏற்ற பொருள்களை வைத்திருக்கலாம்
அப்படியான வண்டியில்
ஒருவன் அவனுக்கு நெருக்கமானவர் இனி ஒருபோதும் அமரவே முடியாத
இருக்கையை வைத்திருக்கலாம்

அப்படியான வண்டிகளில்
'ஒருவன்தான்' இருப்பார்களா என்ன?

இருக்கிறார்கள்
அப்படியான வண்டியில்தான்
ஒருத்தி முதன் முதலில்
தனிமையை உணர்த்திருப்பாள்
அப்படியான வண்டியில்
ஒருத்தி யாரும் கட்டளையிடாமல்
தானே பயணிக்கிறாள்

அப்படியான வண்டியில்
ஒருத்தி தன் மொத்த குடும்பத்திற்கும்
சம்பாதிக்கிறாள்
அப்படியான வண்டியில்
ஒருத்திக்கு காதல் பூக்கிறது
அப்படியான ஒரு வண்டியில்
ஒருத்திக்கு மனமுறிவு கைகூடுகிறது

அப்படியான ஒரு
நான்கு சக்கர வாகனத்தில்தான்
நான் தினமும் செல்கிறேன்

வெளிப்படையாக சொல்வதென்றால்
காருக்குள் கதறி அழுதால்
சீக்கிரத்தில் யாருக்கும் தெரியாது
அழுது முடிக்கும்வரை
நம் கண்ணீர் முழுதும்  வடியும்வரை
போய்க்கொண்டே இருக்கலாம்

பினாங்கு பாலத்தில்
காரோடு கடலில்
குதித்து சாவதைக் காட்டிலும்
கண்ணீர் வற்றும்வரை
காரில் பயணிக்கலாம்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கதை
ஒவ்வொரு கதைக்கும்
வெவ்வேறு மனிதர்கள்
வெவ்வேறு மனிதர்களுக்கும்
ஒரேமாதிரி கண்ணீர்
ஒரேமாதிரி கண்ணீருக்கு
ஒரே வார்த்தைதான் ஆறுதல்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக