இம்முறை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் எற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை காலை 9க்கு தொடங்கிய கதை சொல்லும் அங்கம் பிற்பகல் மணி 12க்கு நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ம.நவீன், இளம் எழுத்தாளர் அரவின், எழுத்தாளர் விஸ்வநாதனுடன் நானும் சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமையே நாங்கள் புறப்பட்டோம். எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சனிக்கிழமை காலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி வாசுகியை சந்தித்தோம். அன்பாகவும் உற்சாகமாகவும் எங்களை வரவேற்றவர் பள்ளிக்கூடம் குறித்தும் மாணவர்கள் குறித்தும் நேர்மறையானவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரின் உற்சாகம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.
எனக்கு தெரிந்து, மாணவர்களுக்கு எழுத்தாளர்களை அழைத்து வந்து கதை சொல்லும் நிகழ்ச்சியை ம.நவீன் தொடங்கினார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னமே அவர் இந்த (திட்டத்தை) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் நான் கதை சொல்லியாக சென்றிருந்தேன்.
இன்றைய நிகழ்ச்சியில் எங்கள் ஒவ்வொருவரையும் சிறப்பாகவே மாணவர்களுக்கு, ஆசிரியர் ஒருவர் அறிமுகமும் அறிவிப்பும் செய்தார். தலைமையாசிரியரும் இன்றைய நிகழ்ச்சி குறித்து பேசினார். அவர்களை தொடந்து ம.நவீன் தான் இத்திட்டத்தை தொடங்கியதின் நோக்கத்தை தெளிவாகவே விளக்கினார்.
கதை சொல்லிகளாகச் சென்ற எங்கள் நால்வருக்கும் ஒருவருக்கு ஏறக்குறைய 15 முதல் 20 மாணவர்கள் என வழங்கப்பட்டார்கள். மாணவர்களுடன் எங்களுக்கான இடத்திற்கு நாங்கள் சென்றோம்.
எங்கள் நால்வருமே வெவ்வேறு விதமான கதை சொல்லிகள். நான்கு குழுவிலும் இருக்கும் மாணவர்கள் அவர்கள் எங்களிடம் கேட்ட கதைகளை இன்னொரு மாணவருக்கு சொல்லும்போது அது அவர்களுக்கு புலப்படும்.
தொடக்கமாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் சொல்லப்படுகின்றன? ஏன் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள் என்ற அடிப்படையில் இருந்து என் பேச்சை தொடங்கினேன்.
என் முன் தயாரிப்பில் 25 கதைகளை எழுதி வைத்திருந்தேன். அதைத் தவிர்த்து மேற்கொண்டு ஐந்து கதைகளை பேசுவதற்கு மனதளவிலும் தயாராய் இருந்தேன்.
கதை கேட்க உற்சாகமாக இருக்கும் மாணவர்களிடம் 25 எண்களில் ஒரு எண்ணை தேர்தெடுக்க சொல்லி அந்தக் கதையை அவர்களுக்கு கூறினேன். அது மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது; மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த எண்ணில் என்ன கதை இருக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமானார்கள்.
ஒன்றின் பின் ஒன்றாக, நான் சிறுவயதில் வாசித்த கதைகள் முதல் இன்று எழுதப்படும் சிறுவர்களுக்கான கதைகளில் இருந்து ஒவ்வொரு கதைகளாக பேசினேன்.
ஒரு கதையை நான் சொல்ல ஆரம்பிக்க மாணவர்கள் அடுத்த என்ன நடக்கும் என யூகிக்கலானார்கள். அதில் அவர்களே நாயகனாகவும் நாயகியாவகும் இருக்க விரும்பினார்கள். இந்தக் கதைகள் எல்லாமே அவர்களின் நூல்நிலையத்தில் நிச்சயம் இருக்கும் என்றும் அந்தக் கதைகளை வாசிப்பதில் இருந்து நம்மால் எதை கற்றுக்கொள்ள முடியும் எனவும் விளக்கினேன்.
சினிமாவிலோ, ஓவியத்திலோ நாம் பார்க்கும் பெரிய கோட்டையும் அதன் வாசல் கதவும், நாம் வாசிக்கும் போது எவ்வாறு நம்மால் கட்ட முடிகிறது என்றும் அந்தக் கோட்டை சுவரையும் நம் நம் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி மாற்றலாம் என்று பேசி; மாணவ பருவத்தில் கற்பனை திறனை நமது கல்விக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் பேசினேன்.
மாணவர்களின் பங்கெடுப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு பின்னால் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாணவி என்னையும் பார்த்து என்னால் பின்னால் அடுக்கியிருந்த புத்தகங்களையும் பார்த்து கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தேன். அங்குள்ள ஒரு புத்தகத்தைக் காட்டி அந்தப் புத்தகத்தை எழுதியது நான் தானே என கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்பள்ளிக்கு இனிமேல்தான் என் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் அதற்குள் என் புத்தகம் இங்கு எப்படி வந்திருக்கும் என திரும்பி பார்த்தேன். அங்கு பரமஹம் யோகானந்தரின் புத்தகம் இருந்தது. புத்தக முகப்பில் அவரின் முகம் பளிச்சிட்டு கொண்டிருந்தது. அந்த முகப்பிற்கும் என் முகத்திற்கும் ஒரே மாதிரியான சிகை அலங்காரம் ! இருந்தது. மாணவியின் சந்தேகத்திற்கான காரணம் புரிந்தது.
கதைகளின் இடையிடையில் கேள்வி கேட்டேன். பதில் சொன்ன அனைவருக்கும் சிறுசிறு பரிசுகளைக் கொடுத்தேன்.
வாசித்த கதைகள் மட்டுமல்லாது உண்மையில் நடந்த கதைகள், சிறைச்சாலையில் நான் பேட்டி கண்டவர்களின் என நான் சொன்ன கதைகள் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என நம்பினேன். கதை சொல்லி முடித்ததும் மாணவர்கள் பிடிவாதமாய் என்னிடம் கையொப்பம் வாங்கினார்கள்.
மீண்டும் எங்கள் நால்வரையும் அழைத்து சான்றிதழ் வழங்கி நன்றியுரை ஆற்றினார்கள்.
வழக்கம் போல இந்தப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கும் நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய கவிதைத் தொகுப்பையும் அன்பளிப்பாக கொடுத்தேன்.
கதைகளை கேட்கும் மாணவர்களின் அடுத்த கட்டம் தாங்களும் அந்தக் கதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன். அதுவே அவர்கள் கதை எழுதுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். இதற்கு ஆசிரியர்களுடன் பெற்றோருமே இணைந்து செயல்படவேண்டும்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக