என் தொடர் வாசிப்பிற்கு எழுத்தாளர் எஸ்.ராவின் பங்கு மிக முக்கியமானது. தொடக்க கால வாசிப்பில் ‘என்ன வாசிக்கலாம்?’ என்கிற அடிப்படை சிக்கலை எதிர்க்கொள்ள எஸ்.ராவின் எழுத்துகள் பெரிதும் உதவின. பல படைப்புகளை அறிமுகமும் செய்தன.
அவர் எழுதுகிறார் நான் வாசிக்கிறேன் என்பதைத்தாண்டி; எனக்காக அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடும் அளவிற்கு அவரின் எழுத்துகள் என்னை வாசிக்க வைத்தன. ஈர்த்துவிட்டன. அவரின் அனுபவ கட்டுரைகள் பெரும்பாலும் என் நினைவை விட்டு நீங்காதவை.
இரண்டாவது முறையாக எஸ்.ராவை சுங்கை கோப், பிரம்மவித்யாரண்யத்தில் சந்தித்தேன். ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் பேசினார். அவரின் எழுத்தை போலவே அவரது குரலிலும் எனக்கான செய்தி இருப்பதாக உணர்கிறேன். அதிகம் அதிராத நிதானமான குரல். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடைவெளியை புன்னகையாய் நிரப்புவார்.
எஸ்.ராவை முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் மலேசியாவிலேயே சந்தித்தேன். (அந்தச் சந்திப்பையும் பதிவாக எழுதியிருப்பேன்.) சிறுகதைப் பட்டறையை வழிநடத்த வந்திருந்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரை அழைத்திருந்தார்கள். அதன் பிறகு தமிழகத்தில் நடக்கும் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன். மூன்றாவது முறையாக மீண்டும் மலேசியாவிலேயே சந்திக்கிறேன்.
நாம் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் நம் பெயரை நினைவில் வைத்திருப்பது நமக்கு கிடைத்திருக்கும் அன்பு என நம்புகிறேன். நிகழ்ச்சிக்கு முன்பாக என்னைச் சந்தித்ததும் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார்.
எஸ்.ராவின் ‘கர்னலின் நாற்காலி’ என்னும் குறுங்கதை புத்தகத்தில் பல பெயர்களுக்கு மத்தியில் என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருப்பார். நான் கொஞ்சமும் எதிர்ப்பாராத ஒன்று.
மனம் சஞ்சலமடையும் சமயங்களில் நான் எடுத்துப் புரட்டிப்பார்க்கும் புத்தகங்களில் எஸ்,ராவின் புத்தகங்களுக்கு முதலிடம் உண்டு. அவர் அறிமுகம் செய்த புத்தகங்களை குறித்து வைத்து எனது வாசிப்பு பட்டியலில் இணைத்தும் வாசித்தும் வருகின்றேன்.
எனது மூன்றாவது புத்தகமான ‘குறுங்கதை எழுதுவது எப்படி? – 108 குறுங்கதைகள் என்னும் குறுங்கதைத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.
அவரைச் சந்தித்த இந்த நேரத்தில் நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். சமர்ப்பணம் செய்திருக்கும் பக்கத்தை அவரிடம் திறந்து காட்டினேன். வழக்கமான புன்னகையைப் பரிசளித்தார்.
இன்றைய சொற்பொழிவை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தொடங்கி வைத்தார். எனது பதின்ம வயதில் இருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும் அதே முகத்துடனே சுவாமி இப்போதும் இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் தனிப்பட்ட முறையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் முக்கியமான தருணமாக அந்த நேரம் அமைந்தது.
ஆசிரமத்தில் இருக்கும் நூல் நிலையத்திற்கு எனது புத்தகங்களில் சில பிரதிகளைக் கொடுத்து, அடுத்தடுத்த் திட்டங்களுக்கு சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தகங்களையும் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பையும் சுவாமி கொடுத்து உதவினார். அவருக்கும் என் நன்றி.
அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கோ.புண்ணியவான் எஸ்.ராவை அறிமுகம் செய்தார். அவரை வாசிக்காதவர்களுக்கும் அவரின் எழுத்துகளைத் தேட வைக்கும்படிக்கு அந்த அறிமுகம் இருந்தது. நிகழ்ச்சியை எழுத்தாளர் கே.பாலமுருகன் வழிநடத்தினார்.
‘ஆசை முகம் மறந்து போச்சே தோழி’, ‘எத்தனைக்கோடி இன்பங்கள்!’ போன்ற வார்த்தைகளின் பின்னணியை இன்றைய தலைப்பில் தன் பேச்சைத் தொடங்கினார். மகிழ்ச்சியின் உச்சமாகவும் , துயரத்தின் உச்சமாகவும் கண்ணிரே இருப்பதையும் உதாரணங்களோடு பேசினார். காந்தியின் வாழ்க்கையில் இருந்து காஃப்காவின் உருமாற்றம் நாவல்வரை வந்த அவரின் பேச்சு அரங்கில் இருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்தது.
கோலாலும்பூரில் இருந்து நானும், இளம் எழுத்தாளர் பிருத்விராஜூம் அவரைவிட இளம் எழுத்தாளரான! ஶ்ரீகாந்தனும் சென்றிருந்தோம். ஆசிரமத்திலேயே ஒருநாள் நாங்கள் தங்கினோம். எங்களோடு எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் அ.பாண்டியனும் தங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் வழி பல எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என் பெயர் அச்சிடப்பட்ட புத்தகத்தை எஸ்.ரா அவர் கையில் இறுக்க பிடித்திருந்ததைப் பார்க்கையில் கொஞ்சம் சிலிர்க்கவும் செய்தது. ஒவ்வொரு தருணத்தையும் எழுத்தாளர் பிருத்விராஜு புகைப்படங்களாக ஆவணப்படுத்தினார், இச்சமயத்தில் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக