Pages - Menu

Pages

அக்டோபர் 17, 2023

ஈரம்

 

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும்  வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும் கொல்வது தர்மமாகாது.

ஆனால் வேறு வழியில்லை. யுத்தம் அதன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. அதிகாரியின் அறையிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் ஒலிபெருக்கி அதிரத்தொடங்கியது.

"அப்பாவி மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் இது யுத்தம் இரு தரப்புகளுக்குமே இழப்புகள் இருக்கும். உங்களுக்கு இன்னும் 6 மணிநேரம் அவகாசம் கொடுக்கிறோம். உடனே இவ்விட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்.   உங்கள் நிலைமை எங்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தில் நாங்கள் ஜெயித்த பின் உங்களுக்கான சிறந்த வாழ்வை நாங்களே உங்களுக்கு அமைப்போம். அதுவரை ஊர் எல்லையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் நீங்கள் தஞ்சம் புகுங்கள். "

அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிச்சமிருந்த உயிரையும் மிச்சமே இல்லாத உடமைகளின் எச்சங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊரே இப்போது மயானமாக இருந்தது. சின்ன வித்தியாசம் முன்பு நடமாடும் பிணங்கள் இருந்தார்கள். இப்போது நடமாடாத பிணங்கள் இருக்கின்றன.

சரியாக ஆறு மணிநேரம் முடிந்தது. அதிகாரி தன் அறையில் யாருடனோ பேசுகிறார்.

"உன்னிடம் இன்னும் எத்தனை குண்டுகள் மிச்சமுள்ளன..?"

"200"

"அதில்  180 குண்டுகளை நீ மிச்சப்படுத்து, மற்றதை பயன்படுத்து..... குண்டுகள் நமக்கு முக்கியம்.... வீணாக்காதே...."

பேசி முடித்ததும், மக்கள் நுழைந்த மருத்துவமனை வெடித்து மனித உடல் சிதறி விழுகின்றன.

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அது முழுக்க முழுக்க அப்பாவி மக்களின் செங்குருதியினால் நனைந்திருந்தது...


- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக