Pages - Menu

Pages

அக்டோபர் 13, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 4)

 

வசுமதியின் சிறகுகள் - 1


 செப்டம்பரில் குறுங்கதை எழுதும் வகுப்பைத் தொடங்கினோம். இரு மாத வகுப்பாக அதனை கட்டமைத்தோம். இம்மாத இறுதியில் அவ்வகுப்பு நிறைவடைகிறது.

முதல் மாத வகுப்புகளில் குறுங்கதைகள் குறித்து விரிவாகவே பேசினேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வகுப்பில் நடந்தவற்றைக் குறித்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரவும் செய்தேன். வகுப்பு முடிந்த பின்னரும் கூட பங்கேற்பாளர்களுக்கு மீள்பார்வை செய்ய உதவும் வகையிலேயே அவற்றை எழுதியிருந்தேன். செப்டம்பர் மாத கடைசி குறுங்கதை வகுப்பை கேள்வி பதில்களாக அமைத்தோம். பலவிதமான கேள்விகள் வந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை சற்று விரிவாகவே அலசினோம்.

இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம் ‘வாசிக்கவும் எழுதவும் வைப்பது’ என்பதால் வாசிக்க வேண்டிய கதைகளைப் பகிரும் அதே சமயம்; முக்கியமான எழுத்தாளர்களின் குறுங்கதைகளை வாசித்து அதுபற்றிய பார்வையை ஒவ்வொருவரும் பகிர்ந்தார்கள். குறுங்கதைகளைப் பொறுத்தவரை எழுதுகின்றவர்களுக்கு இணையாகவே வாசிப்பவர்களும் கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. எழுத்தாளர் சொன்ன இடத்திலிருந்து அவர் சொல்லாத இடத்தை வாசகன் தானே பயணித்து கண்டறிவது அவ்வளவு எளிதல்லவே.

முதல் மாத வகுப்பிலிருந்து இரண்டாம் மாத வகுப்பிற்கு அக்டோபரில் நுழைந்தோம். இம்மாதம் பங்கேற்பாளர்களை எழுத வைக்க வேண்டும். ஒரு குறிப்புச்சொல்லைக் கொடுத்து எழுதச் சொன்னோம்.

‘நான் கண்ட கனவு’ என்கிற குறிப்புச்சொல்தான் அது. ரொம்ப சாதாரணமாகத்தானே தெரிகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்தோம். இச்சொல்லை தலைப்பிலோ , கதையின் நடுவிலோ அல்லது கதையின் முடிவிலோ ஏதாவது ஓரிடத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தலைப்பில் பயன்படுத்தினால் ஐந்து புள்ளிகள் கூடுதலாகவும் , கதை நடுவில் பயன்படுத்தினால் பத்து புள்ளிகளும் கதை முடிவில் பயன்படுத்தினால் ஒரே ஒரு புள்ளிதான் கூடுதலாகக் கிடைக்கும் படி செய்திருந்தோம்.

மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் குறுங்கதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு மாத கால வகுப்பு பயனாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமான கூகுள் வகுப்பில் கதைகளை எழுதிய எழுத்தாளர்களோடு கதைகளைக் குறித்து பேசினேன். அதிலிருந்து சில கதைகளைச் சொல்ல வேண்டும்.

ராஜலெட்சுமி; துணை என்கிற தலைப்பில் குறுங்கதை எழுதியிருந்தார். தான் கண்ட கனவு பலித்தே விடுகிறது என்பதுதான் இக்கதையின் ஆதாரம். அதனை திறன்பட சொல்லியிருந்தார். அதே போல தனக்கொரு சம்பவம் நடந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

மோஹனா; மயக்கம் என்னும் குறுங்கதையை எழுதியிருந்தார். உறவினர் ஒருவர் பொதுவில் மயங்கி விழுந்ததைப் பார்த்த நாயகி தன் வாழ்நாளில் இப்படி மயங்கி யார் முன்னும் விழக்கூடாது என்று முடிவெடுக்கின்றார். ஆனால் அது அவருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. எதிர்ப்பார்த்த கதை முடிவில் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றை இணைத்திருந்தார்.

பிருத்விராஜு; ‘பிரபஞ்ச நாயகன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். நடிகனின்  மகன் இன்னொரு நடிகனுக்கு பரம விசிரியாக இருப்பதால் ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதை. இதனை சிறுகதையாக கூட விரிவாக்கன் செய்து எழுதலாம்.

தேவி; ‘நான் கண்ட கனவு’ என்ற தலைப்பிலேயே குறுங்கதையை எழுதியிருந்தார். லாவகமாக  கதையின் நடுவில் குறிப்புச்சொல் சினிமா பாடலில் வருவதாக எழுதியிருந்தார். கணவன் தான் இல்லாத சூழலில் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கு வழியமைக்கிறார். அவர் நினைத்தபடியே அவர் இல்லாமலாகிறார். ஆனால் அவரின் எண்ணம் மனைவியை தனித்து வாழ பழக்கிவிட்டது என்ற கருவில் எழுதியிருந்தார்.

கிரேஸ்; ‘மனிதருக்கு புரியுமா’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பூமி மாசு படுகிறது என கவலைப்படும் யாரும் விண்வெளி எப்படியெல்லாம் மாசு பட்டுக்கொண்டிருக்கிறது என யோசிப்பதில்லை என்ற அடிப்படையில் ராக்கெட்டை வைத்து அதுவே தன்னைக் குறித்து சொல்வதாக எழுதியிருந்தார்.

மு.பா.செல்வா; மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பள்ளி மாணவனின் காதல் கதையாக தொடங்கி நகைச்சுவை கதையாக மாறி நம்மை சிந்திக்க வைக்கும் கதையாக அமைந்தது. அது நடந்த சம்பவம் எனவும் தெரியப்படுத்தினார்.

கிடைத்த கதைகளில் சிலவற்றை குறித்து எழுதியுள்ளேன். இதில் ஒருவரான வசுமதி எழுதிய கதை எனக்கு ரொம்பவும் பிடித்த கதையாக அமைந்தது. சிறகுகள் என்ற தலைப்பில் இல்லத்தரசிகள் எதிர்நோக்கும் மனச்சிக்களையும் மன அழுத்தத்தையும் எழுதியிருந்தார். குடும்பச் சூழலில் ஒரு பெண் ஏன் கனவு காண்கிறாள் எது அவளுக்கு கனவாக வருகிறது என்பதுதான் ஆதார கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதில் தேட முயன்றாலே நமக்கு பல கதைகள் கிடைத்துவிடும். ஒரு கனவில் விட்டதை மறுகனவில் பிடிப்பேன் என கதாநாயகி நினைக்கிறார். அந்த நினைப்பே இக்குறுங்கதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது. அவள் சுதந்திரமாக அவள் விரும்பியதை செய்வது அவளுக்கு வாய்த்த கனவில்தான் என்று கதையை நாம் புரிந்து கொண்ட அடுத்த நொடி; தூக்கம்தான் இவளுக்கு நிம்மதியென்றால் அந்தத் தூக்கமே கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே என்று யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமெனின் கதையின் தலைப்பிற்கும் கதையின் நாயகி காணும் கனவிற்கும் கதையின் முடிவிற்கும் ஓர் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. சிறகுகள், ஆகாயத்தில் இருந்து குதித்து பறத்தல், உறக்கமே சுதந்திரமாக கனவு காண வழியமைக்கிறது, என்கிற மூன்றும் இக்குறுங்கதையின் ஒரு வரிசையில் வந்தமைகிறது.

 விரைவில் எங்கள் வெள்ளைரோஜா பதிப்பகம் வெளியிடவிருக்கும் குறுங்கதைத் தொகுப்பு நூலில் வசுமதியின் ‘சிறகுகள்’ குறுங்கதையும் இடம்பெறும் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

சிறகுகள் குறுங்கதையை அடுத்த பதிவில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்துப்பாருங்கள். நான் சொன்னதைவிடவும் அதிகம் பேசுவதற்கு ஏற்ற கதைதான் இக்குறுங்தை.

நிறைவாக; மீண்டும் அடுத்த மாதம் அடுத்த குறுங்கதை எழுதும் வகுப்பை தொடங்குகின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக