குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது
செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
குறுங்கதை எழுதுவதில் இருக்கும் சுதந்திரம் குறித்தும் அதிலிருந்து அடுத்த படைப்பாக்கத்திற்கு எப்படி நகர்வது எனவும் கலந்து பேசினோம். ஒவ்வொருவரும் அவர்களின் எழுதும் திறனை குறுங்கதை எழுதுவதில் இருந்து கண்டுகொண்டார்கள்.
ஏற்கனவே நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துகளும் அவர்களில் பகிர்தலும் வகுப்பிற்கு பயனாக அமைந்தது.
தொடக்கமாக குறுங்கதைகள் குறித்த அறிமுகம் வழக்கப்பட்டது. அதன் பின் பயிற்சிகளும் இடுபணிகளும் வழங்கப்பட்டன. பங்கெடுத்தவர்கள் தங்களின் திறமைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
கதைகளை எழுத கண்ணுக்கு எட்டிய காட்சிகள் கூட போதும்; அதிலிருந்து பல கதைகளுக்கான கருக்களை நாம் கண்டுகொள்ளலாம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.
இவ்வகுப்பில் கொடுக்கப்பட்ட இடுபணிகளில் இருந்து மொத்தமாக 20க்கும் அதிகமான குறுங்கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கதையும் நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் கதையாக அமைந்திருக்கின்றது.
விரைவில் இக்கதைகளை குறுங்கதைத் தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
குடும்ப மாதுவின் சுதந்திரம் நோக்கிய குரலாய் ஒலிக்கும் கதைகள், திருவள்ளுவரின் கடைசி குறள் குறித்த கதை, அபலநகைச்சுவையை மையப்படுத்திய கதைகள், மக்களால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மறுபக்கம், பேய்கள் என்பவை இருக்கிறதா என நம்மையே கேட்க வைக்கும் கதை, சினிமாவின் தாக்கம் மாணவச்சமூகத்தில் எந்த விளைவுகளைக் கொடுக்கின்றன, பூமியை தூய்மைப்படுத்த சொல்லி விண்வெளியை வீணாக்கும் அறிவியலில் கதை, கனவையும் நினைவையும் ஒரே மாதிரி அணுகும் கதை, மனமுறிவுகளால் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பு என பலவேறுபட்ட கதைக்களன்களையும் ஓரளவிற்கு மாறுபட்ட கதைச்சொல்லும் யுக்தியையும் பயன்படுத்தி இக்கதைகளை இவர்கள் எழுதியிருந்தார்கள்.
அவர்களின் அனுமதியுடன் அக்கதைகளை விரைவில் உங்களோடு பகிர்கிறேன்.
இவ்வாறு எங்களின் முதல் குறுங்கதை எழுதும் வகுப்பு நிறைவடைந்தது. நவம்பரில் இரண்டாம் வகுப்பை தொடங்குகின்றோம்.
உங்களுக்கும் குறுங்கதைகள் எழுத ஆர்வம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்.
குறுங்கதைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து உங்களுள் மறைந்திருக்கும் எழுத்தாற்றலை நீங்க கண்டுபிடித்து எழுதலாம்.
எழுதுவோம்…
அதுதான் இரகசியம்…
அதுவேதான் தியானம்…
அன்புடன் தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக