கோலாலும்பூர், மெத்தடிஷ் ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் அழைத்திருந்தார்கள். மாணவர்களுக்கு சிறுகதை பட்டறையை நடத்தவேண்டும். சென்றேன். பட்டறையை வழிநடத்தினேன்.
மாணவர்களுக்கு பரிட்சையில் ஒரு தேர்வாக சிறுகதை எழுதுவதும் இருப்பது பாராட்டத்தக்கது. நான் பரிட்சை எழுதிய காலக்கட்டத்தில் இருந்து பெரும்பாலும் சிறுகதை அல்லது கற்பனை கட்டுரையையே தேர்வு செய்து எழுதியுள்ளேன். சிலமுறை ஆசிரியரால் பாராட்டும் வாங்கியுள்ளேன். சில முறை திட்டும் வாங்கியுள்ளேன். இதில் ருசிகரமான நிகழ்வு என்னெவெனின் அப்போது எந்தக் கதை பாராட்டு வாங்கியதோ அக்கதையின் கருவைக் கொண்டு ஒரு கதையை பின்னர் எழுதினேன். அவ்வளவாக கண்டுக்கொள்ளப்படவில்லை. ஆனால் என்னை திட்டு வாங்க வைத்த கதைக்கருவை வைத்து ஒரு கதையை எழுதினேன். அது பரவலாக வாசிக்கப்பட்டு பலரின் கவனத்திற்கு சென்றது.
மாணவர்களிடம் பேச என்னை அழைக்கும் ஒவ்வொருமுறையும் எந்த வயது மாணவர்கள் என்ன பேச வேண்டும் என முன்னமே தெளிவாகப் பேசிக்கொள்வேன். ஏனெனில் பங்குபெறும் மாணவர்களுக்கு சில பரிசுகளைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். சிறுகதை பட்டறை என்றாலும்; மாணவர்களின் நோக்கமும் ஆசிரியர்களின் நோக்கம் பரிட்சைக்கு எடுக்கவிருக்கும் புள்ளிகள் மீது இருக்கும். அது நியாயமும் கூட.
என்னால் ஒரு ஆசிரியர் போல முழுமையாக பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுடன் பேச முடியாது. ஏனெனில் அதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைவிடவா நான் சொல்லிக்கொடுத்துவிடப்போகிறேன்.
அதேசமயம்; ஏன் எழுத வேண்டும், சிறுகதையைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் என்னென்ன நன்மைகளை மாணவர்கள் அடைகிறார்கள். சிறுகதையை எழுதும் மனநிலையில் மாணவர்கள் இதர பாடங்களில் எப்படி கவனத்தைச் செலுத்தலாம் போன்றவற்றின் மூலமாக வெளியில் இருந்து பாடத்திட்டத்திற்குள் நுழைவேன். அது மாணவர்களை கவரவும் செய்யும். சம்பத்தப்பட்ட ஆசிரியர்களிடம் முன்னமே அதைப்பற்றி சிறு உரையாடலை நடத்துவதால் அவர்களிடமிருந்தும் பல வகைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இம்முறை, பட்டறைக்கு வரவிருக்கும் மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் தலைப்பில் ஒரு கதையை எழுதி வாங்க யோசித்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியை சுலோச்சனா மகாலிங்கம் எனக்கு உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்தார். சிரத்தை எடுத்து மாணவர்களை கதைகளை எழுத வைத்த,. அதனை சேமித்து. என்னிடம் சேர்த்தார். பட்டறைக்கு முன்னமே மாணவர்களின் கணிசமான கதைகள் வாசிக்க கிடைத்தன. வாசித்தேன்.
முன்னமே நாம் கேள்விப்பட்ட கதைகளை நன்னெறிக்கதைகளை நகைச்சுவைக்கதைகளை சில மாணவர்கள் திரும்ப எழுதியிருந்தார்கள். கோவிட் காலக்கட்டத்தைப் பற்றியும் கதைகள் இருந்தன. அதில் சில மாணவர்கள், கதைகளை உள்வாங்கி அவர்களின் பாணியில் அக்கதைகளைக் கொடுத்தார்கள். சில கதைகள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. அனைத்திற்கும் குறிப்புகளை எடுத்துக்கொண்டேன். நானும் மாணவர்களைச் சந்திக்க தயாரானேன்.
சிறுகதை பட்டறை ஆரம்பமானது. வழக்கம் போல முதலில் மாணவர்களின் கவனம் என் மீது திரும்புவதற்கு சிலவற்றைப் பேசினேன். அதன் மூழம் அவர்கள் நெருங்கினார்கள். இனி நாம் பேசுவதை அவர்கள் கவனிப்பார்கள் என தெரிந்த பின் சிறுகதைக்குள் சென்றேன்.
மாணவர்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. சில மாணவர்களிடம் இயல்பாகவே எதை எழுதலாம் என்ற புரிதல் இருந்தது. உதாரணமாக ஒரு மாணவனின் கதையில் இருந்ததைப் பகிர்கிறேன்;
‘எனக்கு சின்னவனாகத்தான் இருப்பான். முப்பத்தைந்து இருந்தால் அதிகம். ஆண் பிள்ளைக்கு கொஞ்சம் குட்டை. நல்ல நிறம். தடித்த உதடுகள். கறுப்பு மீசை. மைனஸ் இரண்டு என்று சொல்லும் கண்ணாடி’
மாணவனிடம் இப்படி ஒரு பத்தியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. கதைச்சொல்லியின் குரலில் கதை நகர்கிறது. ஒரு மனிதனின் அழகை நேர்த்தியைச் சொல்லிச்செல்கிறார் கதைச்சொல்லி. ஆனால் அம்மனிதன் கண்ணாடி போட்டிருப்பதை இதுவரையில் இருந்த அழகிலும் நேர்த்தியிலும் இரண்டு புள்ளிகள்ௐ மைனசாகப் பார்க்கிறார் கதைச்சொல்லி. அழகானப் பார்வையாக இதனைப் பார்க்கிறேன். இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினான் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் நிச்சயம் உருவாவார்கள்.
ஏறக்குறைய நான்கு மணிநேரம் இப்பட்டறையை வழிநடத்தினேன். ஒவ்வொரு மாணவரிடமும் பேசினேன். சிலருக்கு கதைகள் எழுதுவதிலும் கதைகளைச் சொல்வதிலும் ஆர்வம் இருந்தது. அப்போதே அவர்களை ஆசிரியர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டேன்.
நிகழ்ச்சி முடியும் தறுவாயில் பள்ளிக்கூடத்தின் சார்பாம எனக்கு நினைவுப்பரிசு கொடுத்தார்கள். பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு நான் எழுதிய புத்தகங்களின் சில பிரதிகளை அன்பளிப்பாகத் தந்தேன். நல்லதொரு பொழுதாகஅ அன்றைய தினம் அமைந்தது.
நிறைவாக; அவ்வாசிரியர் மீண்டும் அழைத்திருந்தார். மாணவர்கள் எனது புத்தகங்களை நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வாசித்து முடித்துவிட்டதாகக் கூறினார். அவர்களும் அடுத்தடுத்த சில கதைகளை எழுதியுள்ளதாகக் கூறினார். பட்டறையில் கலந்து கொண்ட இரு மாணவர்கள் போட்டிக்கு சென்றுள்ளதாகவும் கூறினார். அம்மாணவர்களுக்கு இம்முறை வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ நமக்கு எழுத்தாளர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்பதில் எனக்கும் ஆசிரியருக்கும் ஏன் உங்களுக்கும்தான் மகிழ்ச்சிதானே.
எழுதுவோம்..💙
அதுதான் ரகசியம்…💙
அதுவேதான் தியானம்..💙
அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக