Pages - Menu

Pages

ஏப்ரல் 13, 2023

பெயர் தெரியாத பறவை


'பெயர் தெரியாத பறவை'

கொஞ்ச வருசத்துக்கு  முன்ன நடந்த சம்பவம். நம்ம குமாரு இருக்கானே குமாரு.. அவனுக்குத்தான் நடந்தது.  காட்டுக்கு போய்ருக்கான். அங்க நரி ஒரு பறவகிட்ட சண்டை பிடிச்சிகிட்டு இருந்ததாம். இவனைப் பார்த்ததும் அந்த நரி ஓடிப்போச்சாம். அந்த பறவயும் நரிகிட்ட அடியும் கடியும் வாங்கி பறக்க முடியாம கிடந்துச்சாம்.

பாவம் பார்த்து நம்ம குமாருதான் அந்தப் பறவயை எடுத்து வந்தான். வீட்டுல வச்சி கைவைத்தியம்லாம் செஞ்சான். அதும் கொஞ்ச நாள்ல குணமாச்சி.

எது என்ன நினைச்சதோ தெரியல அதோட குமாரு கூடவே இருந்துச்சி. அந்தப் பறவக்கு என்ன பேருன்னும் தெரியல என்னதா தீனின்னும் தெரியல. குமாரு எதை சாப்டறானோ அதையே அந்தப் பறவயும் சாப்டுக்கும்.

எங்ககூடயும் நல்லா விளையாடும். ஆனா யாராச்சும் குமாரு மேல கை வைச்சாங்கன்னு வைங்க பயங்கரமா கத்தி பயம்காட்டும். நல்ல பறவதான் எங்க யாரையும் கொத்தாது. அப்படியே நாலஞ்சி வருசமா குமாரு கூடவே ஒன்னுமன்னா இருந்தது.

போனவாரம் பாருங்க. திடீர்னு யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல. சில அதிகாரிங்க வந்தாங்க. இது ஆபத்தான பறவையாம். வீட்டுல வச்சிருக்க கூடாதாம். பெரிய குத்தமாம். கைது செய்து தண்டம் போடவும் முடியுமாம்.

குமாரும் நாங்களும் அந்தப் பறவயைப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னோம். அதிகாரிங்க கேட்கவேயில்ல.

பாவம் குமாரும் அந்தப் பறவையும்தான். கடைசியா குமாரு அழறான், அந்தப் பறவயும் கத்திகிட்டே ஆளுக்கு ஒரு திசைல நிக்கறாங்க.

அந்த ஆபத்தானப் பறவயை அதிகாரிங்க அவங்க பாதுகாப்புல வைக்க போறாங்களாம். தேவைப்பட்டா குமாரும் நாங்களும் கடிதம் போட்டு அனுமதி வாங்கிட்டு எப்ப வேணும்னாலும் அந்தப் பறவயைப் பாக்கலாம்னு சொன்னாங்க.

குமாரு சரியா சாப்டு ரெண்டு நாளாச்சி. அவனால அந்தப் பறவ இல்லாம இருக்க முடியல. அந்தப் பறவைக்கும் அப்படித்தானே இருக்கும். எத்தினி வருஷம் ஒன்னா இருந்தாங்க.

எங்களால குமாரை அப்படி பாக்க முடியல. சரி அதிகாரிங்க சொன்னது போல கடிதம் போட்டு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்னா, யாரைப் பாக்கனும் எப்படி எழுதனும் யார்கிட்ட கொடுக்கனும்னு எதுவுமே தெரியல.

நல்ல வேளையா ஒரே வாரத்துல அதிகாரிங்க எங்களைப் பாக்க வந்தாங்க. அந்த பறவ ரொம்ப ஏங்கியிருக்கும் போல.

வந்தவங்க நம்ம குமாரை கைது செய்துட்டாங்க. என்னடா இதுன்னு எங்களுக்கும் ஒன்னும் புரியல.  விசாரிச்சாதான் தெரியிது அந்தப் பறவ செத்துப்போச்சாம். குமாருதான் காரணமாம்.

ஏங்க இத்தினி வருசமா குமாருதான பார்த்துகிட்டான். இப்படி ஒரு வாரத்துல கூட்டிட்டு போய் சாகடிச்சிட்டு குமார் மேல குத்தம் சொன்னா நியாயமான்னு கேட்டா...

ஆபத்தான பறவையை வைச்சிருந்தது முதல் குத்தம்.
அதுக்கு சோறு போட்டது ரெண்டாவது குத்தம்.
அதை வீட்டுல வச்சது அடுத்த குத்தம்னு அடுக்கிட்டே போறாங்க.

இதையெல்லாம் பார்த்த குமாருக்கு மூளை கலங்கிடுச்சி போல. அதிகாரிங்கட்ட போய்ட்டு அந்தப் பறவக்கு என்ன பேருன்னு கேட்கறான்.

அதுக்கு ஒர் அதிகாரி சொல்றாரு, "அது ஆபத்தான பறவை...." 

ஏங்க நீங்களே சொல்லுங்க அந்தப் பறவயா ஆபத்தானது?

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக