Pages - Menu

Pages

ஜனவரி 23, 2023

'தண்ணீர்ச் சிறகுகள்' புத்தகவாசிப்பு 2 (2023)


தலைப்பு – தண்ணீர்ச் சிறகுகள்
எழுத்து – கலாப்ரியா
வகை – கவிதை
வெளியீடு – சந்தியா பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)

இவ்வாண்டில் வாசித்து முடித்த இரண்டாவது புத்தகம். முதல் கவிதை புத்தகமும் கூட. கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’

கவிதை வாசிப்பை நான் கால இயந்திரத்துடன் ஒப்பிட்டே பேசுவேன். அது ஒரு டைம் மிஷின்; சொல்லப்போனால் காலக்கடத்தியும் கூட. கவிதை எந்தக் காலத்தைக் குறித்து எழுதியிருந்தாலும் அது தன்னை நிகழ்காலத்திலேயே நிறுத்தியிருக்கும். அப்படியே, கவிதைகள் தன்னை வாசிக்கின்றவர்களை காலத்தின் முன்னோக்கியும் பின்னோக்கியும் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டிவிடும். எத்துணை நகைமுரண் இது.

இப்புத்தகத் தொடக்கத்தில் கவிஞர் கலாப்ரியா சில கவிதைகள் பிறந்த கதையைச் சொல்லியிருப்பார். அவரின் அனுபவங்களுடன் அக்கவிதைகளை வாசிக்கும் போதும், பின் ஒவ்வொரு கவிதைகளாக வாசிக்கும் போதும் வாசகர்களுக்கு இருவேறு பரிணாமங்களை அவை கொடுக்கின்றன. அதனால்தான் என்னவோ கவிஞர்கள் ஏதோ ஒன்றை கவிதையாக்குகிறார்கள் வாசகர்கள் அதில் தங்களுக்கான ஏதேதே இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

மானின் ரத்தம்
புலி மடுவில்ப்
பாலாய்

என்கிற கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்கின்றேன். மூன்றே வரிகள்தான். ஆனால் அது தன்னகத்தே சுமந்திருக்கும் மாயத்திற்கு நாம் பக்கம் பக்கமாக எழுதலாம். பாவத்தையும் புண்ணியத்தையும் கவிஞர் ஒரே கோட்டில் இணைத்துவிட்டார். இரண்டுக்குமே சம பங்கையும் கொடுத்துவிட்டார். இதில் ஒன்றைக்கூட்டி மற்றொன்றைக் குறைத்தால்; என்ன குறைத்தால்? அப்படி குறைக்கவே முடியாது என்பதுதானே  கவிஞர் போட்டிருக்கும் கோடு. அது அப்படியேத்தான் இருக்கும். அது இயற்கை. அந்தச் சுழல் அப்படித்தான் இயங்க வெண்டியுள்ளது.

உன் நினைவை
மீட்டுக் கொடுத்தான்
உன் காதலன்

என்கிறார். காதலன் என்று முடியும் இடத்தில் காதலி என்று மாற்றி வாசிக்கும் சுதந்திரத்தை அதன் முதல் இரண்டு வரிகளே ஒப்புதல் கொடுக்கின்றன. இதில் ஒரு காவியச் சோகம் தெரியவில்லையா. உண்மையில் நினைவுகள் என்பது வலி நிவாரணியும் வலியில் காரண கர்த்தாவாகவும் ஆகிவிடுகின்றன. அவள் நினைவையோ அவன் நினைவையோ மீட்டுக்கொள்கிறோம் என்பதுவரை மனம் லேசாகிறது. நினைவுகள் இனிக்கின்றன. ஆனால் யார் மூலம் அது சாத்தியமாகிறது என தெரிந்து கொள்ளும் இடத்தில் மனம் கனக்கிறது, கூடவே நினைவுகள் கசக்கச் செய்கின்றன.

குழந்தைகள் குறித்த நம் கவிஞரின் கவிதைகள் எப்போதும் கவனிக்கத்தக்கவை. இத்தொகுப்பிலும் அவ்வாறு சில கவிதைகள் இருக்கின்றன. அதிலொன்று;

குழந்தை 
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது

எத்தனை அழகாக ஆழமானப் பார்வை. வானத்தை எப்படி வரைவது. ஒரு பக்கத்தாளில் நீலமடித்து வானம் வரையலாம்தான். பெரியவர்கள் அப்படித்தானே யோசிக்கிறோம். நீலம் நிறைந்திருந்தால்தான் அது வானம். குழந்தைகள் அப்படி நினைப்பதில்லை. வெள்ளைக் காகிதத்தில் இரு வாளைந்த கோடுகளை இணைத்து அவற்றைப் பறக்கும் பறவைகள் ஆக்கிவிடுகிறார்கள். பிறகென்ன வானம் தானாக உருவாகிவிடுகிறது. குழந்தைகள் மனம் அத்தகையதுதானே.

ஒரு குழந்தை இப்படியென்றால் இன்னொரு குழந்தை மீன் நீந்த தண்ணீரை வரைகிறது அவசர அவசரமாக,

மீன் வரைந்ததும்
முனையொடிந்த
பென்சிலை அவசரமாய்ச்
சீவுகிறது குழந்தை
தண்ணீர்க் கோடுகள்
தீற்ற

இப்படி குழந்தைகளின் இருவேறு மனநிலைகளைக் கவிஞனால்தானே உள்வாங்க முடிகிறது. கோடு போட்டு வானம் காட்டிய குழந்தையால் மீனை வரைந்து அது கடலென்று காட்ட முடியாதா என்ன?

பல சமயங்களில் கவிஞனின் கேள்வியில் இருந்தும் கவிதைகள் பிறக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் கவிஞரின்;

கனவுகள் ஏதும்
வந்ததா
கண்ணப்ப நாயனாருக்கு
கண் மூடிக்
கண் தோண்டிக்
கண் தைக்கும் 
நேரத்தில்

அற்புதங்களும் அதிசயங்களும் எப்போதும் யாருக்கும் நடக்கலாம் என்பதைத்தான் காட்டுகிறாரோ ?

தன் குறிப்பின்
அழகான கையெழுத்தைத்
தானே வியந்து
தள்ளி வைத்தான்
தற்கொலையை

தள்ளி வைத்தத் தற்கொலை இனி அவனுக்கு தேவையிருக்காது என்றே கவிஞர் நம்ப வைக்கிறார். இப்படி ஏதாவது ஒரு அதியத்தை நாம் கண்டுபிடிக்கத்தான் வேண்டும் வாழ்வதற்கு, அது வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே இருக்கலாம். பாலோ கொயிலோவின் ரசவாதி நாவலின் நாயகன் புதையல் தேடி தேசம் கடந்து பயணம் போவான். பல அனுபவங்களைப் பெறுவான். கடைசியில் அவன் தேடி வந்த புதையல் அவன் பயணம் தொடங்கிய இடத்தின் காலுக்கு அடியில்தான் இருக்கும். காலுக்கு அடையில் இருந்தாலும் அதனை அடைய அதற்கான அனுபவம் தேவையென்று எழுதியிருந்தால் அவன் என்ன  செய்வான்; பாவம். இக்கவிதை எனக்கு அந்நாவலின் நாயகன் சாண்டியாகோவை நினைக்க வைக்கிறது.

கவிஞரின் பார்வை எப்படி ஒன்றைப் பார்க்கிறது என்பது கவிதையை மேலும் அழகூட்டுவதாக அமைந்துவிடுவிறது. அதற்கு சான்றாக கவிஞரின் இன்னொரு கவிதை;

தன்னைப் பற்றியும்
பாடச் சொல்லி
தண்ணீர் முத்துக்கள்
சூடியிருக்கிறது
தாமரையிலை

தன்னிடம் அதிகாரம் இருப்பதையே இங்கு பலர் விரும்புகிறோம். எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தாலும் அன்பு பாராட்டினாலும் உள்ளுக்குள்ளே உள்ளத்தின் ஓரத்தில் பிறர் மீது அதிகாரம் செலுத்தவே பலரும் பிரயாசைப் படுகின்றோம். ஒருவேளை இதைத்தான் கவிஞர்,

சின்னவளைச் சேர்த்து
விளையாடு என்றால்
பெரியவள் தேர்ந்தெடுப்பது
டீச்சர் விளையாட்டு

விளையாடவும் வேண்டும் தன் கையில் அதிகாரமும் வேண்டும் என ஆசைப்படும் அந்தப் பெரியவளை நாம் எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்.

தவம் செய்கிற புத்தனைப்
பார்த்துப் பார்த்துப்
பயந்தபடியே
உண்ணுகிறது
ஒரு கனிந்த
அரசம் பழத்தை
அணில் ஒன்று

என்கிறார் கவிஞர். எனக்கென்னவோ, அந்த அணில் புத்தனைப் பார்த்து பயப்படவில்லை. புத்தனின் பெயரிலும் அவனது போர்வையிலும் மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டே அணில் அஞ்சியதாகப் படுகிறது. அணில் மட்டுமா அஞ்சுகிறது. நீங்களும் நானும்தானே அஞ்ச ஆரம்பித்திருக்கிறோம்.

கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுடன் உரையாடும் போதெல்லாம் கவிதைகளையும் வாசிக்க வழியுறுத்துவேன். அது அவர்களுக்கு வார்த்தைகள் வழியாகவும் கவிஞனின் பார்வை வழியாகவும் உதவக்கூடும் என சொல்லுவேன். ஒரு கவிதை ஒரு சிறுகதைக்கான பொறியையும் போட்டுவிடக்கூடியது.

திடீரெனப்
பெயர் அழைக்கப்பட்டுத்
திரும்ப நேரும் போதெல்லாம்
கண்களில்
ஏன் இவ்வளவு
இறந்த காலம்

இக்கவிதையை வாசித்து முடிக்கவும் சிறுகதைக்கான அழகான தொடக்கமும் மனதில் தொற்றிக்கொண்டது. கவிஞரின் கேள்விக்கு பதில் தேடி தொடர்ந்தால் ஓர் அழகான சிறுகதையை எழுதிவிடலாம்.

கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச் சிறகுகள்’ கவிதைத் தொகுப்பினைக் குறித்தும் இக்கவிதைகள் குறித்தும் இன்னும் எழுதவே தோன்றுகிறது. அதற்கான அத்தனைக் கவிதைகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறதுதான். எல்லாவற்றையும் சொல்லிவிடுவதை விட சொல்லாமல் விட்டவைதான் இதன் மீது அதிக ஈர்ப்பு கொடுக்கும் என்பதால் கவிஞரின் கவிதையொன்றையே நிறைவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.

நல்ல நடன நிகழ்ச்சி
பார்த்து விட்டு வருகையில்
களவி முடித்த
களைப்பு

- கவிஞர் கலாப்ரியா (தண்ணீர்ச் சிறகுகள்)

#தயாஜி

1 கருத்து: