Pages - Menu

Pages

டிசம்பர் 03, 2022

தாய்மடியாகும் தாய்மாமன் மடி

- தாய்மடியாகும் தாய்மாமன் மடி -

ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று  இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நினைவுகளின் ஆதாரம் எங்கிருந்தாவது நம் மனதை தொட்டுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை; அதனை முன்கூட்டியே நம்மால் கண்டறியவும் முடிவதில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்தகம் சென்றிருந்தேன். தங்கை மகளுக்கு காதணி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். உடல் நிலை பழையபடி இல்லாததாலும் தலைநகரில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததாலும் ஒரு நாள் பயணமாக அமைத்துக் கொண்டேன்.

எப்படியும் சொந்த மண்ணுக்கு சென்றால் உடனே திரும்பி வர மனமிருக்காது. ஆனால் இம்முறை என்னை நானே கட்டுப்படித்திக் கொள்ளும்படி ஆனது. அம்மாவும் தங்கையும் கட்டாயம் வர சொல்லியிருந்தார்கள். இல்லாளும் உறவு முறைகளின் சரியாக இருக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். தாய்மாமன் உறவு ரொம்ப முக்கியமானது அது அந்த குழந்தைக்கு இன்னொரு தொப்புள்கொடி உறவு என்றார். சொல்லப்போனால் குழந்தைக்கு இன்னொரு தாய் என்றெல்லாம் பேசிப்பேசி என் மனதை புறப்படுவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இல்லாள் அவர் வசமாக்கிக்கொண்டார்.

என் தங்கை மகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்கள் இன்றைய தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் வாரிசு என்பதாலும் அவள் பிறந்த பிறகு என் வாழ்விலும் நான் பல மாற்றங்களைக் கண்டேன் என்பதாலும் இருக்கலாம்.

இன்று அக்குழந்தையை என் மடியில் வைத்து காது குத்தி அழகு பார்த்தோம். அக்குழந்தை கண்களில் கண்ணீரே வராமல் அழுவதையும் நாங்கள் பார்த்தோம்.

எனக்கும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போதுதான் தலைநகருக்கு வேலைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தங்கை கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு அன்று பிரசவம். அவளுக்கு அருகில் கட்டிலில் இருந்த கர்ப்பவதிகள் எல்லாம் ஒவ்வொருவராக பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்கைக்கு இன்னும் வலி வரவில்லை என்றும் உடலில் மருந்தை ஏற்றுவதற்கும் வழியில்லை என்பதையும் அம்மா அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மாவிற்கு எப்படி தைரியம் சொல்வது என தெரியவில்லை. உடனே என்னால் அங்கு செல்லவும் முடியாத சூழல். அம்மாவிற்கு ஏதேதோ தைரியம் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

அம்மாவின் குரலில் இருந்த நடுக்கம் என் உடலில் இப்போது தொற்றிக்கொண்டது. என் தைரியத்தைக் காணவில்லை. என்னைச் சுற்றிலும் இருள் சூழ்வதாகப்பட்டது.

என்னால் தங்கையின் முகத்தைக்கூட நினைவில் கொண்டுவர முடியவில்லை. திக்குத்தெரியாதவன் ஆனேன். கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

அப்போது தமிழகத்தில் இருந்தேன். பழனி முருகன் கோவில். அப்போதே ஒரு வேண்டுதலைப் போட்டேன்.  திக்கற்று நிற்பவருக்கு தெய்வம்தானே எப்போதும் துணை. கண்களை மூடியவாறு கைகளை கூப்பி, “முருகா… தங்கையும் அவளது குழந்தையும் தாயும் சேயும் நலமாக வரவேண்டும்… நான் உனக்கு மொட்டை போட்டுக்கறேன்” என வேண்டிக்கொண்டேன்.

ஆட்கள் அதிகம் இல்லாததால், சீக்கிரத்தில் முடி கணிக்கை முடிந்து அர்ச்சனை செய்து கோவிலை விட்டு வெளியேறினேன் மனதில் இருந்த பயமும் பாரமும் குறைந்தது. அப்போது  அம்மா மீண்டும் அழைக்கவும் சரியாக இருந்தது. என் வேண்டுதல் பலித்துவிட்டதை அம்மாவின் மூலம் அறிந்துகொண்டேன்.

என் வேண்டுதலுக்கு அப்பன் முருகனே வந்திருக்க வேண்டும் ஆனால் அவனுக்கு பதிலாக தேவதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறான். குறும்புக்கார குமரனுக்கு என்னை நன்றாக தெரியும். அதனால்தான் தேவதைக்கு தாய்மாமனாகும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்துவிட்டான் போல.

அந்த ஆண்டு தைபூசத்தின் போது என் வேண்டுதலை நிறைவேற்றினேன்.
இன்று அந்த தேவதையை மடியில் அமர்த்திய சில நிமிடங்களில், அன்று நடந்தவை மீண்டும் மனக்கண்ணில் நடந்தேரியது.

தன் தாய்மாமா ஓர் எழுத்தாளர் என்பதை அந்தத் தேவதை தெரிந்து கொள்ளும் வயதில் இதனை அவள் வாசிக்க வேண்டும்.

அது அவள் வாழ்வின் மீதான மாபெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக