அம்மா அப்படித்தான் சொன்னார். எனக்கு கோவம் வந்துவிட்டது. இதுவெல்லாம் ஒரு பேச்சா. காதலித்துதான் கல்யாணம் செய்துக்கொண்டோம். அதற்காக இப்படியா பேசுவது. யாருக்குத்தான் சபலமில்லையாம்!! புருஷன் போக்கு சரியில்லைன்னு சொன்னா பெத்த அம்மா புள்ளை கிட்டயே இப்படியா பேசுவாங்க?
ஆனாலும் என்னால் அம்மா மீது முழு கோவத்தையும் காட்ட முடியாது. அம்மா பாவம். உண்மையிலே அம்மா பாவம்தான். ஒரு கால் இல்லாத அப்பாவை வைத்துக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எங்களை வளர்த்தார். அப்பா கம்பீரமாக நடந்து பார்த்த நினைவுகள் எனக்கு மங்கலாகத்தான் இருக்கிறது. எனக்குக்கூட அப்பாவை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. எத்துணை வருடங்களாக அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஒருவேளை அப்பா அப்படி இருப்பதால்தான் அம்மாவிற்கு என் வலி புரியவில்லை என நினைக்கிறேன். நினைத்ததோடு சும்மா இருந்திருக்கலாம். முடியவில்லை. வார்த்தையை விட்டுவிட்டேன்.
யாருக்குத்தான் சபலமில்லையேன்னு கேட்கறியே மா... எங்க அப்பா அப்படி இருந்திருந்தாதான் உனக்கு என்னோட வலி தெரியும்னு சொல்லிட்டேன்.
ஆச்சரியம். அம்மா கோவப்படவில்லை. எழுந்தார். நேராக என்னருகில் வந்தார். "யாருக்குத்தான் சபலமில்ல... ஆமா உங்க அப்பா காலை யாரு உடைச்சான்னு என்னிக்காவது அவர்கிட்ட கேட்டுறிக்கியா நீ...." என்று கேட்டுவிட்டு பழையபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக