Pages - Menu

Pages

ஆகஸ்ட் 26, 2022

தகப்பன்சாமி

ஆச்சர்யம்தான். அவர் ஏகே ரமேஷ். தோழர் பொன்கோகிலம் மூலம் அறிமுகமானார். சமயத்தில் ஈடுபாடும், சமயம் சார்ந்த பல முன்னெடுப்புகளையும் செய்து வருபவர் என்பதே எனக்கான அவரின் அறிமுகம். வழக்கமாக பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதியிருந்த சர்ச்சைக்குள்ளான கதையின் வழி பலரும் என்னை அறிந்திருந்தனர். பலர் அங்கிருந்த நகர்ந்திருந்தாலும் சிலர் அங்கேயே நின்றுகொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஏகே ரமேஷ் உடனான அடுத்த சந்திப்பில் அசோகமித்திரனின் பயணம் சிறுகதைப் பற்றி பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. கதைகள் குறித்து பேசுவது எனக்கு விருப்பமான ஒன்றென்பதால் பேசிக்கொண்டே போவேன். அன்றும் அப்படித்தான் என் பேச்சு வளர்ந்தது. அருகில் இருந்தவர்களைவிடவும் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த ஏகே ரமேஷ் என் பேச்சை ஆழமாக கவனித்தார். கதையில் இருந்து சில கேள்விகளையும் கேட்க எங்கள் உரையாடல் வளர்ந்தது. அவர் எழுதிய கதைகள் பக்கம் எங்கள் உரையாடல் நீண்டது. அதில் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தன. மாற்றுக்கருத்துகள் என்பதை விடவும், இன்னும் மெருகூட்ட வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன்.
அடுத்ததாய்த் தான் எழுதவிரும்பும் கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் எழுதிய கதைகளைவிட இனி எழுதப்போகும் கதைக்களன் மீது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. சமயம் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதாலும் சில சிக்கலுள்ள மனிதர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புள்ளதாலும் அதுவே அவருக்கான கதைகளின் கச்சா பொருளாக அமைந்துள்ளது புரிந்தது. அன்றைய உரையாடல் அழகாய் முடிந்தது. ஏனெனில் இங்கு பெரும்பாலான இலக்கிய உடையாடல் யாரோ ஒருவரின் தோல்வியில்தான் முடிந்துகொண்டிருக்கிறது.
அதன் பிறகு இயல் குழுமத்தில் கதைகள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் பேச்சு குறித்தும் என் கதைகள் மீதான பார்வை குறித்து அவர் சிலாகிக்கலானார். அது அவருக்குள் இருக்கும் கதைகளையும் உசுப்பியிருக்க வேண்டும் அல்லது இனியும் பொறுமை கூடாது என நினைத்திருக்கக்கூடும். ஆர்வமானார்.

அடுத்த நிகழ்ச்சியில் இயல் குழுமத்தினர் எழுதியிருந்த கதைகளைப் பற்றி பேசினேன். அப்போது இவரது ஒரு சிறுகதை கிடைத்தது. ‘முத்ததானம்’ என்கிற தலைப்பில் சிறுகதையை எழுதியிருந்தார். ஆளுக்கும் கதையில் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லையே என்கிற மனநிலையில் வாசிக்க ஆரம்பித்த கதை, மன நிறைவை கொடுத்தது. கோவிட் போன்ற பெருந்தொற்று காலக்கட்டம் ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்கிற வழக்கமான கதையில் அவரவர் நியாயங்களை அழகாகச் சொன்னார். கதை வாசித்து முடித்தது எனக்கு சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஏனெனில் யாரும் கெட்டவர்கள் அல்ல, யாரும் நல்லவர்கள் அல்ல. முத்ததானம் சிறுகதையில் அந்தச் சூழலே காரண கர்த்தாவாக இருந்தது. 

அது அவரிடம் என்னை அதிகமாய் நெருங்க வைத்தது. இயல் குழுகம் பின்னர் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமாக பரிணாமம் அடைந்தது. அதன் வழி பல எழுத்தாளர்களை அறியும், சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்துக் கொண்டும் இருக்கிறது. 

பின்னர் மலேசியத் தமிழ் இயல் மன்றத்தின் ஏற்பாட்டில்  குறுங்கதை பயிற்றுனராக  நிகழ்ச்சிகளை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்க பத்து நிமிட இடவெளியில் ஒரு குறுங்கதையை மின்னஞ்சல் செய்து, தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டு வாய்ப்பிருந்தால் படிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இயல்பாகவே நான் கடைசி நேரத்தில் எதனையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவசரமான வாசிப்பு கதையை சிதைத்துவிடக்கூடும் அல்லது நமது முன்னேற்பாடுகளை குழப்பிவிடக்கூடும்.

முன்னமே ஒரு கதையின் வழி நம்பிக்கையைப் பெற்றவர் என்பதால், வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அக்கதையை தவறவிட்டிருந்தால் எனக்குத்தான் இழப்பு என்று எண்ணும்படியானது.
‘சகதி’ என்னும் குறுங்கதை, தன்னார்வளர்களின் மனப்போக்கைக் காட்டுவதாகவும் தொண்டு செய்கிறேன் என புறப்படுபவர்களின் மன அழுக்குகளையும் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்தது. அக்குறுங்கதை எனக்கு பிடித்தற்கான காரணம் அது எழுப்பும் கேள்வி. தொண்டு செய்வதாக களம் இறங்கியவர்கள் குறை சொல்பவர்களாக இருக்கும் போது அவர்கள் கையில் எடுத்திருக்கும் தொண்டு முழுமையடையாமல் நிற்பதை அழகாக காட்டியிருப்பார். 
கவனிக்க வேண்டிய எழுத்தாளராக, குறைந்தது கவனிக்கத்தக்க கதைகளைக் கொடுக்கக்கூடியவராக அவர் வருவார் என்ற நம்பிக்கை தோன்றியது. அப்படி தோன்ற வைக்கும் யாரையும் அப்படியே விடுவதில் எனக்கு உடன்பாடில்லை ஆகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகள் குறித்தும் எழுதுச்சொல்லியும் பேசினேன். சில சமயங்களில் அப்படி பேசுவதற்கே நேரத்தை ஏற்படுத்திக்கொண்டேன். 

சந்திக்கும் போதெல்லாம் கதைகள் குறித்தே எங்கள் உரையாடல் இருந்தது. முக்கியமாக சமயம் சார்ந்து இங்கு அதிகம் எழுதப்படதில்லை. இவர் அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும், அவரும் எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டேன். மலேசியத் தமிழ் இயல் மன்ற நிறுவனரும் இயல் பதிப்பக நிறுவனருமான தோழர் பொன்கோகிலம் அவர்கள் அதனையே வழிமொழிந்தார்.

இயல் பதிக்கத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் முதல் புத்தகம் இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. அதற்கான பெரிய திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கும் தோழர் பொன்கோகிலத்துடன் அச்சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தை பின்னர் எழுதுகிறேன்.
ஏகே ரகேஷ் அவர்களின் முதல் புத்தகத்திற்கான சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது எங்களின் உரையாடல் இம்முறை எழுத்தில் இருந்து சமயம் நோக்கி சென்றது.

என்னுடைய சமய நம்பிக்கையும் என் வழிபாடும் கொஞ்சம் வித்தியாசமானது. அதனை புரிந்துகொள்வது சிரமம். அன்பை ஆதாரமாக வைத்து என் கடவுளை நான் அணுக நினைக்கிறேன்.

ஆனால், எனது 10 அல்லது 11 வயதில் நான் சென்ற மூன்று நாள் சமய வகுப்பு குறித்து பேசினேன். இன்றும் என் நினைவுகளில் அந்த நாட்கள் கொஞ்சமேனும் இருக்கிறது. அங்கு எங்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள், விளையாட்டுகள், இந்து சமயப்பாடல்கள் போன்றவற்றை பேசினேன். அங்கு எங்களுக்கு சமய வகுப்பு நடத்திய நான்கு ஐந்து இளைஞர்களில் ஒருவர் சொன்ன கதையை இங்கும் பகிர்ந்தேன். ஒரு ராமர் கோவில் இடிக்கப்படுகிறது, அதன் கோபுரத்தில் உள்ள கொடி கீழே விழுகிறது. எங்கிருந்தோ ஓடி வந்த குரங்கொன்று அந்தக் கொடியை தூக்கிக்கொண்டு மீண்டும் உடக்கப்படும் கோவிலில் மேலே ஏறுகிறது. அப்போது இந்தக்கதையை கேட்க எங்களுக்கு உடல் சிலிர்ந்தது. கதையும் கதை சொன்ன விதமும் அப்படித்தான் இருந்தது.

நான் இதனைச் சொல்லி முடிக்கவும், தோழர் பொன்கோகிலமும் ஏகே ரமேஷ் அவர்களும் என்னை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது. அந்த வயதில் எங்களுக்கு சமய வகுப்பு நடத்தி இந்தக் கதையை சொன்னவரே ஏகே ரமேஷ்தான் என்று.

எனக்கும் அது இன்ப அதிர்ச்சியாய் அமைந்துவிட்டது. இத்தனை நாட்களாய் பார்த்துப்பேசி பழகியவர் எனது சின்ன வயது சமய ஆசிரியர். இன்றளவும் அவர் தொடர்ந்து சமயப்பணியில் இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நாம் ஒருவரோடு பழகுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பது உண்மைதான் போல. அன்று எனக்கு சமய வகுப்பு/பட்டறை நடத்தியவரிடமே இன்று சமயம் சார்த்து எழுத சொல்லும் இடம் என்னை நெகிழ வைக்கிறது. யோசிக்கையில் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைத்துக்கொண்டேன்.

அவர் குறித்து இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்து, இன்று தெரிவதற்கு காரணமாக அமைந்ததும் ஏகே ரமேஷ் எழுதியிருந்த சிறுகதையின் வழிதான். அச்சிறுகதையின் பெயர் ‘தீக்ஷா’. விரைவில் வெளிவரவிருக்கும் அவரது சிறுகதைத் தொகுப்பில் அச்சிறுகதையை நீங்கள் வாசிக்கலாம்.   

இதுவரை வாசித்த உங்களுக்காக ஒரு ரகசியம் அந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பும் அதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக