ஒலிபெருக்கியில் சத்தமிட்டபடி இராணுவ வாகனங்கள் குடியிருப்பில் நுழைந்தன. எஞ்சி இருக்கும் கட்டிட இடிபாடுகளில் ஒழிந்திருக்கும் சிலருக்கு இன்னமும் பயம் இருக்கவே செய்கிறது. யாரை நம்புவோம். யாரால் சாவோம் என்பதே மிகப்பெரியக் கேள்விக்குறியானது.
தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டிலும் கையெறி குண்டு வெடிப்பிலும் சிலர் மட்டுமே உயிர் தப்பினர். அனைவரும் பொதுமக்கள். கையில் துப்பாக்கியை ஒரு முறை கூட தொட்டுப்பார்க்காதவர்கள்.
யாருக்கு யாருடன் யுத்தம். எங்கள் நாட்டிற்கு அவர்கள் ஏன் வருகிறார்கள். நாங்கள் நன்றாகத்தானே வாழ்கிறோம். ஏன் எங்களைக் காப்பாற்றுவதாக சொல்கிறார்கள் என இப்போதுவரை ஒருவருக்கும் புரியவில்லை.
இனியும் மறைந்திருக்க வேண்டாம். நமக்காக அவர்கள் வந்துவிட்டார்கள். பயமின்றி ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்கள் தத்தம் கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடியேதான் வெளியில் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இராணுவத்தினர் அவர்களைப் பெரியவர் முதல் சிறுவர்கள் என வரிசையில் நிறுத்தினார்கள். கைகளைக் கீழிறக்கச் சொல்லிவிட்டார்கள். பெருமூச்சு விட்டபடி அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
உணவுக்கு தயாரானவர்களாய் ஒவ்வொருவரும் காத்திருக்க, அவர்களை நோக்கி அது திரும்பியது. அதன் மீது அமர்ந்திருந்தவனின் பிடி இறுகியது. இரு கட்டை விரல்களும் விசையை அழுத்த அதிநவீன துப்பாக்கியின் தோட்டாக்கள் ஒவ்வொருவரையும் பல முறை துளைத்து மறுபக்கம் வெளியேறி சுவரையும் துளைத்தன.
வரிசையில் நின்றிருந்த சிறுவர்களும் விதிவிலக்கல்ல. உலகின் எந்த யுத்தத்திலும் சிறுவர்களும் குழந்தைகளும் எதிரிகளாகவேதானே பார்க்கப்படுகிறார்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக