நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்ப பாவம்ங்க...' என மனைவிதான் சொன்னாள். புருஷனைத் தவிர மற்ற எல்லாமும் அவளுக்கு பாவம்தான்.
காரை அந்த வயதான அம்மாவின் அருகில் நிறுத்தினேன். கையில் துணிப்பையுடன் ஒரு குடை கூட இல்லாமல் போகும் வரும் வாகனங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். விசாரித்ததில் உண்மையிலேயே பாவமாக இருந்தது. அதிகாலையில் மகன் இங்கு இறக்கிவிட்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு போனவன் தான். வரவேயில்லை. அம்மாவிடம் கைப்பேசியோ அடையாள அட்டையோ எதும் இல்லை. எல்லாவற்றையும் மருமகள் வாங்கி பத்திரமாக வைத்துவிட்டாளாம்.
எனக்கும் மனைவிக்கும் புரிந்துவிட்டது. மகன் மனைவியின் பேச்சைக் கேட்டு அம்மாவை இங்கு இறக்கிவிட்டிருக்க வேண்டும். கொலை செய்வதற்கு ஈடான காரியம் என மனம் கலங்கியது. அம்மாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். மகிழ்ந்தார். ஆனால் ஒரு முறையாவது மகனையும் மருமகளையும் பார்க்க வேண்டுமே என்றார். ஆயிரம் இருந்தாலும் அம்மா இல்லையா.
வீட்டை விசாரித்தேன். ஏதேதோ இடம் சொல்லி ஒரு கடையைச் சொன்னார். அது முகநூல் பிரபலம் பெற்ற கடை என்பதால் தெரிந்தது. அங்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அம்மா வீட்டிற்கு வழி காட்டினார்.
வீட்டு வாசலில் கார் நின்றது. அம்மா ஏனோ கீழிறங்க தயங்கினார். அவரின் மனம் எங்களுக்கு புரிந்தது. நானும் மனைவியும் இறங்கினோம். மகனிடம் கொஞ்சம் பேசி அம்மாவை ஏதாவது ஆசிரமத்திலோ அல்லது எங்கள் வீட்டிலோ அழைத்துப்போக நினைத்தோம். அதற்கு அவரிடம் சம்மதம் வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சட்டச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவோம்.
வீட்டுக்கதவைத் தட்டினேன். மகன்தான் வந்தார். விபரத்தைச் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. முகம் பீதியடைந்தது. மூச்சு வாங்கியது. அவர் அம்மாவை அங்கு இறக்கிவிட்டது உண்மைதான் ஆனால், அது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். இப்போதுவரை அம்மா அங்கு எப்படி இருக்க முடிந்தது என குழம்பினார்.
அவர் ஏதோ உளறுவதாகப்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் காருக்கு வந்தோம். அம்மா அங்கில்லை. காணவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம்.
திடீரென அவர் வீட்டில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்து அவரது மனைவி ஏனோ அலறினாள். மகன் உள்ளே ஓடுகிறார்.
என் கையைப் பிடித்த என் மனைவி "அந்தம்மா வந்த வேலையை ஆரம்பிச்சிட்டாங்க வாங்க நாம கிளம்புவோம்" என்று இயல்பாகச் சொல்கிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக