முகநூல் விளையாட்டில் நானும் பங்கெடுத்தேன். நம்மிடம் யாரும் கேள்வி கேட்கலாம். தனிப்பட்ட முறையில் வரும் கேள்விகளை நாம் விரும்பினால் பொதுவில் பகிரலாம்.
நண்பர்களிடமிருந்து கிண்டல்கள் நிறைந்த கேள்விகளும் சிலரிடமிருந்து என் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளும் வந்தன. வழக்கமானதுதான். ஆனால் ஒரு கேள்வி மட்டும் என் கைப்பேசி எண்ணுக்கு வந்தது. புதிய எண்.
ஒரே கைப்பேசி எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். பழகிய நண்பரில் யாரோதான் விளையாடுகிறார்கள் என யூகித்தேன். அடுத்த நொடியில் அது யாரோ அல்ல என புரிந்துகொண்டேன்.
'நல்லாத்தான இருந்தோம் என்ன ஆச்சி நமக்கு...'
மீண்டும் மீண்டும் அதையே வாசிக்கிறேன். குற்றத்தை என்மீது மட்டும் போடாமல் இருவருக்கும் சமமாக அதை பிரித்துக்காட்டியது அந்தக் கேள்வி.
ஏதேதோ நம்பிக்கை முளைக்கிறது. ஏனோ அதுவே மறைகிறது. யாரோ ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு முகத்தைப் பார்த்துக்கொண்டே கடைசிவரை வாழ நினைக்கிறோம். அதே கையை உதரிவிட்டு, அந்த முகத்தை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்கிறோம்.
வாழ்க்கை நம்மை எங்கோ அழைக்கிறது. நாமும் செல்கிறோம். எவருடன் பயணம் எதுவரை பயணம் என்ற கேள்விக்கு வாழ்க்கையிடமும் பதிலில்லை வாழ்பவர்களிடமும் பதிலில்லை.
நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். நடப்பது எதுவாகினும் அதில் சம பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்ள வேண்டும்.
'என்ன ஆனாலும் நல்லாத்தானே இருக்கிறோம்' என்ற பதிலை அனுப்பிவிட்டேன்.
அருமை அண்ணே😌
பதிலளிநீக்கு