நள்ளிரவு. தூக்கம் வரவில்லை. ஏதாவது வாசிக்கலாமென வரவேற்பறையில் அமர்ந்தேன். எப்போதும் பால்கனியைப் பார்த்தவண்ணம் அமர்ந்து புத்தகம் வாசிப்பேன். இப்போதும் அப்படித்தான்.
வாசிப்பதற்கென்றே மெல்லிய ஒளி தரும் விளக்கையும் சொடுக்கிவிட்டேன். வாசிக்கலானேன். 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல' என்ற புத்தகம், எல்லாமே குறுங்கதைகளாம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி சுவாரஸ்யமாக இருப்பதாக சொன்னதால், வாங்கினேன்.
உண்மையில் அப்படித்தான் இருந்தன. பல குறுங்கதைகளின் முடிவை யூகிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு பேய்க்கதைகளையும் சேர்த்திருக்கிறார் எழுத்தாளர். அவரசப்பட்டு இந்த நேரத்தில் இதை வாசிக்க ஆரம்பித்தது மனதில் லேசான அச்சத்தைக் கொடுத்தது. ஆனாலும் நான் தைரியசாலி என்பதால் நெற்றியில் கொஞ்சமாக விபூதியைப் பூசிக்கொண்டேன். மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். சொல்லி வைத்தார்ப்போல இப்போதும் பேய்க்கதைதான் வந்தது.
வாசிப்பதை நிறுத்திவிட்டேன். ஏதோ ஒன்று பின்னால் இருப்பதை உணர்ந்தேன். என்னால் அசைய முடியவில்லை. இதயம் வேகமாக துடிக்கலானது. மெல்ல அதன் அசைவு தெரிந்தது. எந்தக் கடவுளைக் காப்பாற்ற அழைப்பது என முடிவெடுப்பதற்குள் உஷ்ணக்காற்று என் மேல் படர்ந்தது. முதன் முறையாக இதை அனுபவிக்கிறேன். எழுந்து ஓட நினைத்தேன். முடிய்வில்லை. கால்களை யாரோ பற்றிக்கொண்டார்கள்.
நல்லவேளையாக என் அறைக்கதவு திறந்தது. மனைவிதான். "என்னங்க இன்னும் தூங்கலயா..? மணி என்ன ஆச்சி.. வாங்க... வந்து தூங்குங்க..."
சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள். இதயம் இயல்பானது. கை கால்களை அசைக்க முடிகிறது. புத்தகத்தை மூடிவிட்டு உடனே எழுந்தேன். அறைக்கு விரைந்தேன். நல்ல வேளையாக மனைவி காப்பாற்றிவிட்டாள்.
என்னது மனைவியா..? எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே...!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக