சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.
ஒரே வாரத்தில் இவ்வளவு மாற்றங்கள். அவ்வபோது வானில் பறக்கும் விமானங்கள், உடைந்தும் உடையாமலும் இருக்கும் கட்டிடடங்களை அதிரச்செய்கின்றன.
ஆங்காங்கு கைவிடப்பட்டிருக்கும், தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கிகளைச் சில சிறுவர்கள், தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை கொடுத்தால் தின்பதற்கு யாரோ ஒருவர் ரொண்டி துண்டுகளைக் கொடுப்பதாக சொல்லியுள்ளார்கள். அவசரத்தில் எங்காவது ஓடிவிடவும் மறைந்து கொள்வதும் சிறுவர்களுக்கு சிரமமில்லை.
குடும்பத்தில் ஒரு சிறுவன் இப்படி செய்ய தயாராகிறான். சில குடும்பத்தில் வெறும் சிறுவர்களைத் தவிர யாருமில்லை. உடன் வாழ்ந்தோர் உடல்களைக் கூட அவர்களால் முழுமையாகப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் கதறுகிறார்கள். எல்லோரும் ஓடுகிறார்கள். எல்லோரும் சிதறுகிறார்கள். எல்லோரும் சிதைகிறார்கள். எல்லோரும் சாகிறார்கள். ஒரு சிலரே தப்பிக்கிறார்கள்.
தப்பித்தவர்களும் சிலருக்கு பயன்படுகிறார்கள். தப்பித்தால் தொடர்ந்து அவர்கள் பயன்படுவார்கள். காலி துப்பாக்கிகள் கிடந்த இடத்தில்தான் அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்தது.
வீட்டில் தனியாக இருக்கும் தங்கைக்குக் கொடுக்கலாம். அப்பா அம்மாவை இழந்து அழுதுக்கொண்டிருப்பவளுக்கு இந்தப் பொம்மை ஆறுதலைக் கொடுக்கட்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் அந்தப் பொம்மையையும் எடுத்தான்.
தங்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். சில அடிகள் எடுத்து வைக்கவும் பொம்மை அதிரவும், அது வெடித்து அவனும் சிதறவும் சரியாக இருந்தது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக