ஒவ்வொரு முறையும் அவளை ஏதாவது ஒரு மரத்தின் அருகில் பார்க்கலாம். ஒரு நாள் பூங்காவில் உள்ள மரத்தில், ஒரு நாள் வாசலில் இருக்கும் மரத்தில், ஒரு நாள் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில்.
நாங்கள் இந்தப் புதியக் குடியிருப்பிற்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. என்னைப்போல பலரும் அவளை அவ்வப்போது பார்த்திருக்கிறார்கள். அவளிடம் பேச யாரும் முயன்றதில்லை. அவளும் அதற்கு ஏதும் மெனக்கெடுவதாகத் தெரியவில்லை.
ஏன் எப்பொழுதும் ஏதாவது மரத்தின் அருகில் நின்று ஏதோ செய்துக்கொண்டிருக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்டவளோ. ஆனால் எப்படி சரியான மணிக்கு தென்படுகிறாள்.
சிலர் அவள் பற்றி ஏதோ புகார் கொடுத்திருக்கிறார்கள். குடியிருப்பு காவலாளிகளிடம் இனி அவளை உள்ளே அனுமதிக்க கூடாது என்று முறையிட்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்பதுதானே அவர்களின் வேலை. அப்படியே செய்தார்கள்.
இன்றோடு ஒரு மாதகாலம் ஆயிற்று, அவளைப் பார்த்து. அப்படியொருத்தி அவ்வப்போது இங்கே நடமாடினாள் என்பதையே இங்கு பலரும் மறந்துவிட்டார்கள். நானும்தான்.
இன்று அவளை நினைக்க ஒரு காரணம் கிடைத்தது. அவள் வந்து போகும் வரை செழிப்பாக இருந்த மரங்கள் ஒவ்வொன்றும் பட்டுபோய் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வேரோடு பிடுங்கி விழலாம் என்கிற நிலையில் இருக்கின்றன.
இது, காட்டை அழித்து கட்டியக் குடியிருப்பு என்பதற்கும் இங்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று ஞாயிற்று கிழமை சந்திப்பில் மேனேஜர் ஒரு பேசிக்கொண்டிருக்கிறார். அதோ அங்கொரு மரம் வேறோடு விழுகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக