"இளவரசு... இளவரசு..."
அந்தக் குரல் மெல்ல கேட்டது. ஆனால் யாரை அழைக்கிறார்கள் என தெரியவில்லை. தன்னை பீட்டர் என்றே அழைக்க வேண்டும் என்கிற உத்தரவு வந்த பிறகும் யார் இப்படி விளையாடுவது என தெரியவில்லை.
தீராத வயிற்று வலிக்கு தான் கொடுத்த முதல் விலை அந்தப் பெயர் மாற்றம். தப்பித்தால் போதும் பிழைத்தால் போதும் என்றான போது பெயரில் என்ன இருக்கிறது.
"இளவரசு... இளவரசு.."
மெல்ல அருகில் வந்த உருவம். அவன் தலையை வருடியது. உள்ளுக்குள் ஏதோ ஊடுருவுவதாக உணர்ந்தான். இதுவரை இல்லாத உற்சாகம் உடலில் குடியேறியது. தூய்மையான ஒளிர்ந்த வெண்ணிற ஆடையில் இருந்து ஏதோ ஒன்று அவன் மீதும் பிரகாசத்தைப் பரவவிட்டது.
உடலில் இருந்து கொஞ்ச நஞ்ச வலியும், மனதில் இருந்த குழப்பமும் மெல்ல சீராகிக்கொண்டிருக்க, வந்தவர் கிளம்பலானார்.
"யார் நீங்கள் ?"
அவர் நகரந்து கொண்டெ தன் கையை உயர்த்தினார். செக்கச்சிவந்திருந்த உள்ளங்கையில் ஓட்டை தெரிந்தது.
"நீங்கள்... நீங்கள்..." அவனுக்கு வார்த்தை வரவில்லை. அவர் மெல்ல மறையலானார்.
"இளவரசு.. இளவரசு..." அப்பெயர் மட்டும் அறை முழுக்க நிறைந்தது. தான் பீட்டர் அல்ல இளவரசுதான் என புரியத்தொடங்கினான். பெயரில் என்ன இருக்கிறது.
வந்தவர் பீட்டர்களுக்கு மட்டுமா வருகிறார், இளவரசுகளுக்கும் வந்து கொண்டுதானே இருக்கிறார்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக