Pages - Menu

Pages

ஜனவரி 19, 2022

பொறுத்திரு; பிரியாதிரு

பொறுத்திரு; பிரியாதிரு

என்னால் அவரின் அடி உதைகளைத் தாங்க முடியவில்லை. தாலி கட்டிக்கொண்டேன் என்பதற்காக எவ்வளவு நாள் வாழ்வேன். முடிந்த மட்டும் முயன்றேன். வார்த்தைகளின் வேதனையையும் வாய்த்துவிட்ட வலியினையும் தாங்கிக்கொண்டேன். இனி உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. பிரிந்துவிடலாம். அவரின் வாழ்வை அவர் வாழட்டும் என் வாழ்வை நான் வாழ்ந்து கொள்கிறேன் என்றேன்.

அம்மா, உன்னிடம்தான் முதலில் என் முடிவைச் சொன்னேன். மாப்பிள்ளையை விட என் அப்பா ஆரம்பத்தில் செய்த கொடுமைகள் அதிகம் என்றாய். பூமாதேவி போல பொறுத்துக்கொண்டேன் என்றாய். கொஞ்ச நாளில் எல்லாமே சரியானது என்றாய். என் மகனுக்காக பொறுத்துக்கச் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

அப்பா உங்களிடம் இரண்டாவதாய்ச் சொன்னேன். ஆப்பளைங்கன்னா அப்படித்தான் என்றீர். தன்மையாக கணவனை திருத்து என்றீர். துணையில்லாமல் வாழ்வது பிழையே என்றீர். என் பிள்ளைக்காக யோசி என்றீர். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரனே உனக்கும் சொன்னேன். கணவனை திருத்துவது மனைவியில் கடமை என்றாய். அம்மாவைப் பார் அக்காவைப் பார் என்றாய். அண்ணியையும் நீ அடித்திருப்பதாய் சொன்னாய். இதெல்லாம் சகஜம்தான் என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரியே உனக்கும் சொன்னேன். உன் தழும்புகளுக்கு நீ தடவும் மருத்து பாட்டில்களைத் தந்தாய். தகுந்த நேரம் பார்த்து தடவிக்கொள் என்றாய். கணவனை எப்படி திருத்துவது என்கிற பாடத்தை கற்கச் சொன்னாய். நீயே கற்றுக்கொடுப்பதாய் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழி உன்னிடமும் சொன்னேன். தனியான சூழலில் வாழ்வது சிரமம் என்றாய். ஆனாலும் சமாளிக்கலாம். கொஞ்சம் அவகாசம் எடுக்க சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழா உன்னிடமும் சொன்னேன். வீட்டில் வந்து பேசுவதாகச் சொன்னாய். நேரம் பார்த்துதான் வரவேண்டும் என்றாய். அதற்குள் உனக்கும் ஆயிரம் சிக்கல்கள். வீட்டில் வந்து பேசும் வரை காத்திரு என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

பொறுத்திரு; பிரியாதிரு என அறிவு புகட்டியவர்களுக்கு நன்றி. புரிந்து கொண்டேன். உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டேன். நான் பொறுத்துக்கொள்கிறேன் நான் பிரியாதிருக்கிறேன். ஆனால் என் உடலில் பேச்சை என் உயிர் கேட்கவில்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக