பணக்காரராவது உங்களது உரிமை புத்தாண்டை தொடக்கி வைத்த புத்தகம். டாக்டர் ஜோசப்
மர்ஃபியின் ‘பணக்காரராவது உங்களது உரிமை’. ‘Riches are Your Rights’, புத்தகத்தைத்
தமிழாக்கத்தில் ‘பணக்காரராவது……’ என குறிப்பிட்டிருந்தாலும் புத்தகத்தில் பணத்தைக்
குறித்து தெரிந்து கொள்வதை விடவும் செல்வ செழிப்பைக் குறித்து அறிந்து கொள்ள
முடிகிறது. இந்நூலில் மேலும் இரண்டு நூல்களின் இணைப்புகள் உள்ளன. அவை ‘வளமடைவது
எப்படி’, ‘வெற்றிக்கான மூன்று வழிகள்’ ஆகும்.
டாக்டர் ஜோசப் மர்ஃபியை முதன் முதலாக
நான் அறிந்து கொண்டது ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ (The Power of Subconscious Mind)
என்ற புத்தகத்தின் மூலமாகத்தான். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது,
மனைவியிடம் வாசிக்க புத்தகத்தை எடுத்து வர சொல்லியிருந்தேன். என் புத்தக அலமாரியில்
இருந்து அவர் கைக்கு எட்டிய புத்தகமாக அந்த புத்தகத்தை எடுத்து வந்தார். சரி
வாசிக்கலாமே என ஆரம்பித்தேன். அப்போதைய என் மன நிலையிலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட
சிக்கலைப் போக்குவதற்கு அந்நூல் பெரிதும் உதவியாக அமைந்தது. இன்னொரு நாள் அந்நூலைக்
குறித்து கட்டாயம் எழுதுகிறேன்.
இப்போது ‘பணக்காரராவது உங்கள் உரிமை’
புத்தகத்திற்கு வருவோம். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறையில் இருந்து தனிமனிதனின்
வாழ்வில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் இந்நூலை
எழுதியிருக்கிறார். பல வேத வசனங்களை மையமாகக் கொண்டு அதிலிருந்து சமகாலத்தில்
எப்படி நம் பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வது. நம் வேண்டுதல்களை எப்படி முறையிடுவது
என்ற வகையில் மிகத்தெளிவாக இந்நூலை எழுதியிருக்கிறார்.
அப்படியெனில் இது மதத்தைப்
பிரச்சாரம் செய்யும் நூலா என்கிற கேள்வி எழுவதை புரிந்துகொள்ள முடிகிறது. முதல் சில
பக்கங்களில் எனக்கும் அவ்வாறு தோன்றியது. ஆனால் அப்படியில்லை என அடுத்தடுத்தப்
பக்கங்களின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.
பைபிளை வாசிக்கும் கிறிஸ்துவர்களுக்கு
அவர்களின் ஸ்தோத்திரங்கள்/பிரார்த்தனைகள் எப்படி அமைகிறது எப்படி செயல்படுகிறது என
அறியலாம். ஆனால் எனக்கு தெரிந்த சில கிறிஸ்துவ நண்பர்களிடம் இந்நூலைக் குறித்து
பேசும் போது, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே
அமையவில்லை. அதோடில்லாமல் இலக்கியம் மீது பெரிய ஈடுபாடோ மதிப்போ உள்ளதாகவும்
தெரியவில்லை. டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயொவஸ்கி போன்ற பெரும் ஆளுமைகளைக் குறித்து
பேசிப்பார்த்தாலும் அதனால் என்ன? என்கிற கேள்வியே எஞ்சியிருந்தது.
ஆனால் இன்னொரு
கிறிஸ்துவ நண்பரிடம் இந்நூல் குறித்து பேசும்போது அவரும் உற்சாகம் ஆகிவிட்டார்,
அவர் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஏறக்குறைய அது
எப்படி நடந்தது, நடக்கிறது என்பதற்கு இந்நூல் சில உதாரணங்களைக் கொடுக்கிறது. இந்த
வழிமுறையைத்தான் பல தன்முனைப்பாளர்கள் பேச்சாகவும் எழுத்தாகவும் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் ‘ரோண்டா பைர்ன்’ எழுதிய ‘ரகசியம்’ தொகுதி
புத்தகங்கள் இவ்வழிமுறைகளின் நீட்சியாக பார்க்க முடிகிறது.
மதம் ஒரு சிக்கலாக
ஆகிவிடாது என்கிற தெளிவு உள்ளவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயன் தரும். தன்னுடைய
அன்றாட வாழ்க்கை பிரார்த்தனையில் தங்களின் வேண்டுதல்களை/பிரார்த்தனைகளை இயற்கையின்
மீதோ பிரபஞ்சத்தின் மீதோ இறைவன் மீதோ முன் வைக்கலாம்.
- தயாஜி
(இந்நூலை வாங்க
விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு
அழைக்கலாம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக