Pages - Menu

Pages

நவம்பர் 03, 2021

- தீபாவளி முதல் நாள் -

 



 விடியற்காலை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இம்முறை 5 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை ஆனது. பழையபடி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை. இடையிடையில் மழைத்தூறலும் பல நினைவுகளும் வந்து சென்றதில் பயணம் தாமதமாகிக் கொண்டே இருந்தது.

  அதிகாலை அரைத்தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பிவிட்டேன். அம்மா வயதானது போல் இருந்தார். அப்பா எப்போதுமே அப்படித்தான் தெரிவதால் அம்மா மீதுதான் கவனம் போனது.

 அம்மாவின் கையால் 'தேத்தண்ணி' குடித்து உறங்குவதற்கு முன் என்னை உற்சாகப்படுத்த நினைத்தேன். ஒன்றுக்கு பலமுறை குடிக்க என்ன கலக்கட்டுமென அம்மா கேட்கும் போதே சூதாரித்திருக்க வேண்டும்.

  குவலை நிறைய நெஸ்காபியை அம்மா கலக்கிக்கொண்டு வந்தார். நான்காண்டுகள் கழித்துதான் அம்மாவின் கையால் நெஸ்காபியைக் குடிக்க ஆயுத்தமானேன்.

  வெதுவெது சூட்டில் கிளாஸை இறுக்கப் பற்றிக்கொண்டேன். பல மணிநேர பயண களைப்பையும் குளிரில் உறையத் தயாரகிவிட்ட உள்ளங்கைக்கும் இதமாக இருந்தது.

  ஒரு மடக்கு குடித்ததுதான் உச்சி மண்டையில் மணி அடித்தது. சீனியில் நெஸ்காபியை கொஞ்சமாக போட்டிருந்தார் அம்மா.

  எத்தனை கரண்டி சீனி என்றேன். சீனி போட கரண்டியைப் பயன்படுத்து வதில்லை என்ற அம்மா, சின்னதாய் ஒரு மூடியை எடுத்து வந்து காட்டினார்.  அது நான் காபி குடித்த குவலையில் பாதி அளவிலாவது இருக்கும்.

  இனிப்போடு ஆரம்பிக்கலாம், இனிப்பே முடிவாகிவிடக்கூடாது என்று சொல்லி குடித்தவரை போதுமென்று மேலும் ஒரு குவலை சுடுதண்ணியைக் குடித்துக் கொண்டேன்.

  வேறு எதுவும் வேணுமாவென அம்மா கேட்டார். அம்மாவிற்கு இப்போது தூக்கம் அவசியம் என சொல்லி எல்லோரையும் உறங்க அனுப்பினேன்.

  எனக்கு தூக்கம் வரவில்லை. தாய் மண்ணில் இருந்து கோலாலும்பூருக்கு. சென்ற என்னை ஒரு முறை நினவுக்கூர்ந்தேன். அதில் ஒட்டிக் கொண்டிருப்பது உதட்டோர புன்னகை மட்டுமே என நினைக்கையில் சுருக்கென்றது. அதை எந்த சமயத்திலும் இழக்கக்கூடாது என்று நினைப்பிலேயே மெல்ல மெல்ல கரைந்து இரவுக்குள் என்னைத் தொலைக்கலானேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக