Pages - Menu

Pages

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’

 புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’

தலைப்பு –‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’
வகை – கவிதை தொகுப்பு
எழுத்து – கவிஞர் சுபா செந்தில்குமார்
வெளியீடு – யாவரும் பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)



            கவிதை வாசித்தல் என்பது மனநிலையைத் தன்நிலை மறக்கச் செய்யும் வழிமுறை. வைரம் தன் மீது படும் காட்சியை ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு வடிவமாக காட்டுவது போல கவிதைகள் வாசிக்கும் பொழுது அது ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கின்றது. நான் வாசித்த கவிதையிலும் நீங்கள் வாசித்த கவிதையிலும் இருவேறு அனுபவங்களும் பயணங்களும் நமக்கு அமைந்திருக்கும். அது கவிதையின் வித்தையா அல்ல நம் மனநிலையில் வெளிப்பாடா என்பது தேடிக் கண்டறிய வேண்டியக் கேள்வி. கவிதை வாசிக்கும் மனநிலைக்கு ஒப்பானதுதான் அதனை வரிசைப்படுத்தி எழுதுவதும். வாசிக்கும் போது கண்ட திறப்பும், அதனை எழுதும் போது காணும் திறப்பும் சமயங்களில் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அது சென்றடையும் இடம் ஒன்றாக இருக்கும்.

            சமீபத்தில் வாசித்து முடித்த கவிதை தொகுப்பு ‘கடனெலும் வசீகர மீன் தொட்டி’. கவிஞர் சுபா செந்தில்குமார் எழுதியுள்ளார். தலைப்பைப் போலவே உள்ளிருக்கும் கவிதைகளும் வசீகரிக்கவேச் செய்தன.


            புத்தகத்தை எடுத்ததும், தலைப்பில் கொஞ்ச நேரம் மனதை அலையவிட்டேன். கடலை எப்படி மீன் தொட்டியாக்குவது? மீன் தொட்டியை எப்படி வசீகரிக்க வைப்பது? இந்தக் கவிஞர், உண்மையில் கடலை கண்ணாடி மீன் தொட்டியில் பார்க்கிறாரா அல்லது கண்ணாடி மீன் தொட்டியைக் கடலாகப் பார்க்கிறாரா?

            ஏழு முதன்மை தலைப்புகளில் மொத்தம் 64 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏழு கவிதைத் தொகுப்புகளை வாசித்தது போன்ற வெவ்வேறான அனுபவத்தை இக்கவிதைத் தொகுப்பு கொடுக்கின்றது. சில இடங்களில் முதன்மைத் தலைப்புகளுக்கு ஏற்றதாய் கவிதைகள் ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது. சில இடங்களில் வழி மாறிய கவிதைகள் அம்முதன்மைத் தலைப்பில் அமைந்துவிட்டதாகவும் தோன்றுகின்றது.

            அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது ‘மனமுதிர் காலம்’ (ப-13). அம்மாக்களை இழந்த நாட்களை அப்பாக்கள் கழிப்பது மிகவும் துயரமானது. மீண்டும் அவர்கள் குழந்தையாகின்றார்களாக மனம் உடைந்து பித்து பிடித்துவிடுகின்றதா என்கிற கேள்வி எழவைக்கும் அவர்களின் நகரும் நாட்களை ஆழமாக கவிதையில் பதிவு செய்துள்ளார் கவிஞர். பூரான் கடித்துவிட்டதால் திண்டு திண்டாய் தெரியும் அப்பாவின் கால்களில் அம்மாதான் பூத்திருப்பதாக அப்பா சொல்லிச் சிரிப்பதை வேறெப்படிச் சொல்வது.

            கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, அவர்களின் இயல்பு குணம் மாறாது. இதனை மீண்டும் நினைக்க வைக்கும் கவிதை, ‘ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம்’ (ப-14). தன் அப்பா ஊற்றுக்கண்ணைக் கட்டெடுத்தக் கதையை கிணற்று நீர் எடுக்கவரும் எல்லோரிடமும் சொல்லும் அம்மா இன்று தண்ணீர் சுமந்து வரும் அரசாங்கக் குழாய்க்காக காத்திருக்கின்றார். அப்போதும் அவர் வெயிலில் ஓய்வெடுக்கும் ஊழியர்களின் தாகத்தை இளநீர் கொடுத்து தீர்க்கின்றார். தான் யார் என்று முழுமையாக உணர்ந்தவர்கள் எல்லா நேரத்திலும் அவர்களாகவே இருப்பார்கள். இக்கவிதையில் வரும் அம்மாவை அப்படியாகத்தான் பார்க்கின்றேன். தான் இழந்துவிட்டது குறித்த வருத்தம் இருந்தாலும், இதுநாள் வரை தான் வைத்திருந்ததின் பெருமிதத்தை அதிகமாகவே அம்மா சுமந்துக் கொண்டிருக்கின்றார்.

‘பரிட்சயம் இல்லாத ஆட்டுக்குட்டி போல
தபால்காரரிடம் முகம் உயர்த்தும் என்னிடம்….’

            என்கிற வரி ‘விலாசம் தொலைந்த வீடுகள்’ (ப-16) என்கிற கவிதையில் வருகின்றது. வார்த்தைகள் ஒரே பாய்ச்சலாக காட்சிகளாவதாக நான் உணர்ந்தேன். இங்கு மட்டுமல்ல தொகுப்பில் பல இடங்களில் வார்த்தைகள் சில அடிகளில் காட்சிகளாக பரிணாமம் பெற்று கண்முன்னே நிழலாடுகின்றன. இக்கவிதை வீடு என்பது பிறருக்கு என்னவாக தெரிகின்றது என ஆரம்பமாகின்றது. ஒரு வீடு யாருக்கு எப்படியாக இருக்கிறது என்பது சாதாரணம்தான். ஆனால் அதனை கவிதையாக்கி, அக்கவிதையை இன்னொரு இடத்திற்கு கவிஞர் எடுத்துச் செல்கிறார்.

            ‘பொன்மஞ்சள் வாசம்’ என்னும் கவிதை (ப-17) அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது. அம்மா இருக்கும் வரை வீட்டில் யாராக இருந்தார் என்பது அவர் இல்லாத போதுதான் தெரிகிறது.

            எல்லோரும் ஒரு காட்சியைப் பார்க்கிறார்கள். ஆனால் பார்ப்பவர் யாராக இருந்துப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து அக்காட்சி தன்னை விரிவு செய்துக் கொள்கிறது. ‘தினசரி’ (ப-18) என்னும் கவிதையில் வீடுகளுக்கு நாளிதழ் போடும் சிறுவனைப் பேசுகின்றது. எத்தனை வகையான மனிதர்கள் எத்தனை வகையாக அச்சிறுவனை அணுகுகின்றார்கள் என சொல்லும் கவிதையில் நாம் இதில் யாராக இருக்கின்றோம் என்கிற கேள்வியைக் கேட்கிறது.

            ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ என்னும் தலைப்பிலான கவிதைபக்கம் 20-ல் உள்ளது. இங்கு வசீகரமானதாக இருப்பது கடலா அல்லது மீன் தொட்டியா என்கிற எனது தொடக்கக் கேள்விக்கு பதில் சொல்லும் கவிதை. இரு வேறு தேசத்தில் வசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கையை அந்த வசீகர மீன் தொட்டியாக கவிஞர் சொல்லியுள்ளது வசீகரிக்கச் செய்யும் அதே வேலையில் வருந்தவும் வைக்கின்றது. இக்கவிதை ‘கடலைச் சேராத நதிகள்’ என்கிற முதன்மைத் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறே ‘நிலம் பூத்த நதி’, ‘பெருள்வயுற் பிரிதல்’, ‘சரளைக் கற்கள் விளையும் வயல்’, போன்ற கவிதைகள் புலம் பெயர்ந்து, நாடுவிட்டு நாடு சென்றவர்கள், சொந்த நிலத்தை காப்ரெட் கரங்களுக்கு தாரை வார்த்தவர்களைப் பேசுகிறது.

            தன்னைப் போன்றே துன்பத்தில் துவண்டிருக்கும் மனிதனைக் காணும் இன்னொரு மனிதன் என்ன செய்வான். நாம் என்ன செய்வோம். இக்கேள்வியை எழவைக்கும் கவிதையாக ‘பியானோ என்பதொரு நீண்ட சவப்பெட்டி’ (ப-31). பியானோ எப்படி சவப்பெட்டியாகிறது என்பதுதான் கவிதை. ஆனால் அதனிலும் இசை வாசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.

            வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது. இங்கு எது நியாயம் எது அநியாயம் என யார் முடிவெடுக்கின்றார்கள். இக்கேள்விக்கு என்ன பதில் கொடுத்தாலும் அதற்கு ஈடாக இன்னொரு கேள்வியை நம்மால் கேட்க முடியும். ‘மழைக்கரம்’ (பக்கம்-45) என்னும் கவிதை இப்படியாக வருகிறது;

ஆதரிக்கப்படாத
சாலை ஓவியமொன்றை
தன் நிறமற்ற விரல்கள் நீட்டி
வழித்துச் சேகரிக்கிறது மழை

            சாலை ஓவியத்தை அழித்ததற்காக மழை மீது கோவம் வருகின்றது. ஆதரிக்கப்படாத சாலை ஓவியம் தானே என சமாதானம் ஆகிறது. மழை நீருக்கு நிறமில்லாததால்தான் ஓவியத்தின் அருமை தெரியவில்லை என சொல்லலாம். ஆனால் தனக்கு நிறமில்லாவிட்டாலும் சாலை ஓவியத்தை வழித்து தன்னகத்தே சேகரிக்கும் மழையை எப்படி திட்டுவது. இப்படி பல கேள்விகளையும் பல பதில்களையும் சுழற்கின்னம் போல சுற்றி வர வைக்கிறது கவிதை. இதில் எந்த ஒரு வார்த்தையை எடுத்தாலும் கவிதை அதன் இயல்பை இழந்துவிடும் என்பதுதான் இக்கவிதை தரும் ஆச்சர்யம்.

            ‘வளர்சிதை’ (ப-55) பாலியல் வன்கொடுமைக்கு பலியான மகளைச் சொல்லும் கவிதை. கண்களைக் கலங்க வைக்கிறது.


            ‘பேராண்மையின் பலன்’ (ப-54) என்னும் கவிதை சமகால சமூக அவலத்தைப் பேசுகின்றது. ‘பொன்னகரம்’ சிறுகதையின் கடைசி வரிகளின் வருவது போல; ஆண்மை ஆண் என் பீத்திக்கொள்கிறாயே இதுதானடா உன் பேராண்மையின் பலன் என்பதுபோல முகத்தில் அறைகிறது.

            ‘வேறு வழி இல்லை. காலம் முழுக்க இச்சுமையை நான் தான் சுமக்க வேண்டும்’ சொல்லி ஏதோ ஒன்றை தன் வாழ்நாள் முழுக்க சுமப்பவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. அப்படியான மனிதர்கள் பற்றி கவிதையாக ‘உயிர்த்தெழல்’ (ப-60) என்கிற கவிதையைப் பார்க்கின்றேன்.

சிலுவை சுமப்பவர்க்கெல்லாம்
சாத்தியமில்லை
மூன்றாம் நாள்
உயிர்த்தெழல்

            இக்கவிதை நம்பிக்கையை சிதைக்கின்றதா அல்லது உயிர்த்தெழுத்து மீண்டும் வதைபடுவதை விட உயிர்த்தெழாமல் இருந்துவிடு என அன்பு செய்கிறதா?

            இன்னும் பல கவிதைகள் , அதன் வழி பல பார்வைகளுக்கு வழி சொல்லும் அனுபவங்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. மீண்டும் மீண்டும் வாசித்து வெவ்வேறான அனுபவங்களைப் பெறலாம்.

            சொல்லப்போனால் கவிஞரின் கவிதைகளில், ஒரு கவிதை மூன்று கவிதைகளாக பிரிந்து பின் பிரிந்த மூன்றும் ஒரு கோட்டில் வந்து சேர்கின்றது. சில கவிதைகளில் வேண்டுமென்றே கவிஞர் நம்மை குழப்புகின்றாரா என தோன்றுகிறது. அதற்கு பதில் மறூவாசிப்பிலோ அல்லது அதற்கான உரையாடல் வழியாகவோ நமக்கு கிடைக்கலாம். சில இடங்களில் வழிந்து சில சம்பங்களைச் சேர்த்திருப்பது போல தோன்றினாலும் கவிதை தரும் அனுபவத்தில் அவ்வரிகள் காணாமல் போய்விடுகின்றன.

            சமீபத்தில் நான் வாசித்து எனக்கு பிடித்தமான கவிதை புத்தகமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக