#குறுங்கதை 2021 - 12
- ஊதா நிற பட்டாம்பூச்சிகள் -
எங்கிருந்து வந்தன என யோசிக்க முடியவில்லை. அத்தனை பட்டாம்பூச்சிகளை ஒரு சேர பார்த்தப்பின் வேறெதை யோசிப்பது. சின்ன வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க செல்லும் சிறுவர்களின் மனநிலைக்கு ஆளாகிவிட்டோம். ஒவ்வொருவரும் குதித்து குதூகலம் அடைந்தார்கள்.
ஒவ்வொருவர் மீதும் பல பட்டாம்பூச்சிகள் அமர்ந்துவிட்டு சிறகசைக்கின்றன. கட்டைவிரல் அளவு பட்டாம்பூச்சிகள். ஊதா நிற சிறகை படபடக்கும் போது மேலும் அழகாகின்றன.
என் கைவிரலில் கூட ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்தது. சில நொடி தாமதத்தில் பல பட்டாம்பூச்சிகள் என் மீது வந்தமர்ந்தன. உடல் முழுக்க ஊதா சிறகு முளைத்தவன் போல மிதக்கின்றேன். கனவாக இருக்குமோ என யோசிக்கவும் செய்தேன். சுற்றிலும் மனிதர்கள் ஊதா சிறகை அசைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
மெல்ல மெல்ல வித்தியாசமான வாசனையை உணர்ந்தேன். உணர்ந்தோம். ஏதோ விபரீதம் ஏற்படப்போவதாக உணர்ந்தேன். உணர்ந்தோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் பேச முயன்றோம். யாருக்கும் எதுவும் கேட்கவில்லை. பேச முடியவில்லை. நாக்கில் ஏதோ ஒட்டிக்கொண்டது. வாய் திறக்க முடியவில்லை.
உடல் பலமிழந்தது. கால்கள் தரையில் படவில்லை என உணர்ந்த சமயம். கட்டைவிரல் அளவு சுருங்கினோம். மிதக்க ஆரம்பித்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊதா நிற மேகம் சூழ்ந்தது போல தெரிகின்றது.
எல்லோரும் ஊதா நிற சிறகை அசைத்துக் கொண்டே அடுத்த இலக்கை நோக்கி படபடக்கலானோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக