புத்தகவாசிப்பு_2021 ‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’
தலைப்பு –‘பேனாவுக்குள்
அலையாடும் கடல்’
வகை – கவிதை
எழுத்து –
கவிஞர் கலாப்ரியா
வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள்
புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
கவிதைகளில் என்ன கிடைத்துவிட
போகின்றது?, என்கிற கேள்விகளை எதிர்க்கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. ஒரே கேள்வியை
யாரும் கேட்கலாம். கேள்வியில் மாற்றம் இருக்காது. ஆனால் இதற்கான பதில் ஆளுக்கு ஆள்
மாறுபடும். ஆச்சர்யம் என்னவெனில் எந்த பதிலுமே தவறான பதிலில்லை என்பதுதான். ஒருவருக்கு
கவிதை; காதல். ஒருவருக்கு கவிதை;கண்ணீர். ஒருவருக்கு கவிதை;துரோகம். ஒருவருக்கு கவிதை;தாய்மை.
இப்படி ஆளுக்கொன்று கிடைத்துவிடுகின்றது கவிதைகளில்.
இப்படி கிடைக்கும் ஒவ்வொரு பதில்களையும்
ஒருசேர கவிதைகளில் காட்டிவிட சில கவிஞர்களால் மட்டுமே முடிகின்றது. அத்தகைய கவிஞர்களில்
ஒருவர் கவிஞர் கலாப்ரியா. முன்னமே இவரது ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ என்கிற
கவிதை தொகுப்பு குறித்த வாசித்து அனுபவத்தை எழுதியுள்ளேன். அதில் கவிஞர் குறித்த அறிமுகத்தையும்
எழுதியிருந்தேன். ஆக, இம்முறை நேராக இக்கவிதை தொகுப்பிற்கு செல்வோம்.
கலாப்ரியாவின் கவிதைகளில் குழந்தைகள்
எப்படியாவது நுழைந்துவிடுகின்றார்கள். கவிஞர் குழந்தையாகவே மாறிவிடுகின்றார். நம்மையும்
மாற்றிவிடுகின்றார். இந்த தொகுப்பிலும் அப்படியாக சில கவிதைகள் இடம்பெறுகின்றன.
‘புத்தக மூட்டையுடன்’ (பக்கம்
29) என ஒரு கவிதை. அம்மாவிடம் திட்டு வாங்கி புத்தக மூட்டையுடன்
பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏறுகின்றன. அங்கிருந்து அம்மாவுக்கு கையசைக்கும் குழந்தைகள்,
நடந்த எதனையும் நினைத்திருக்கவில்லை என்கிறார். அதோடு நிற்கவில்லை. அந்த நொடியில் இருந்து
நடந்த எல்லாவற்றையும் அம்மா சுமக்க ஆரம்பிப்பதாக சொல்கிறார். உண்மைதானே. குழந்தைகளால்
நடந்தவற்றை நொடியில் மறந்துவிட முடிவதுதான் எத்தனை பாக்கியம். ஏறக்குறைய இதே மனநிலையில்
இன்னொரு கவிதையைச் சொல்கிறார்.
‘அவசரமாகப்
பென்சில்
சீவுகையில்
ஆழமாக
வெட்டியிருப்பது
குழந்தை
பள்ளிக்குப்
போன
பிறகே
வலிக்கிறது அம்மைக்கு’ (பக்கம் 53)
குழந்தைகள் அருகில் இருக்கும்
பொழுது நம்மையும் அந்த நொடியில் வாழ வைத்து விடுகின்றார்கள். ஆழமான காயம் பட்டும் அம்மைக்கு
வலிக்கவில்லை. ஏனெனில் அவள் வெட்டுபட்டதும் வேதனை கொண்டதும் குழந்தைக்காகதானே. அந்த
வேதனை குழந்தையைத் தாக்கிவிடுவதை அம்மாக்கள் விரும்புவதில்லையே.
வாழ்வின் அன்றாடங்களில் நாம்
தவறவிட்ட தருணங்களை திரும்பவும் நமக்கே கொடுக்கின்றார். அவற்றை கவிதையாக்கி கொடுப்பதில்
கவிஞர் கைத்தேர்ந்தவராக இருக்கின்றார்.
‘உன்னையடைந்து
உன்னைப்
பாதிக்கும்
கவிதை
வரிகளில்
நீயறியாமல்
உன்
பெயர்
எழுதப்பட்டிருக்கிறது’ (பக்கம் 56)
ஏதாவது ஒரு வகையில் நாம் ஏமாற்றப்படுகின்றோம்.
நம்பிப்பழகியவர்கள்தான் நம்மை அத்தனை எளிதாக ஏமாற்றிவிட்டு போகிறார்கள். யாரும் இதற்கு
விதிவிலக்கல்ல. அவரவர் நிலைக்கு ஏற்றார் போல நாம் அதனை கடந்துவிட முயல்கிறோம். சமயங்களின்
அழுதும் விழுகின்றோம். ஆனால் கவிஞர், ஏமாந்தவர்களின் மனநிலையில் அதற்கான காரணத்தை கவிதைகளில்
கண்டறிய முயல்கின்றார்.
காலகாலமாய்
காகங்களுக்குத்
தெரிவதே
இல்லை
நரிகளின் பாஷை (பக்கம் 20)
கற்கள்
பொறுக்கிப்
போட்டது
காகம்
ஆந்தை
வந்து
நீரருந்திப்
போயிற்று (பக்கம் 25)
பெண்களை புரிந்துக் கொள்வது சுலபமா
என்ன? கவிஞன் அதை விளையாட்டாய் கடந்து போக நினைப்பவன். அதனை கண்டறிய முயல்பவன். இத்தொகுப்பில்
கவிஞரும் அவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளார்.
தரவும்
மாட்டாள்
விடவும்
மாட்டாள்
எல்லாம்
தெரியும்
எதுவும் தெரியாமல் இருப்பாள் (பக்கம் 32)
இவ்வாறாக
தனது கண்டுபிடிப்புகளை அடுத்த பக்கங்களிலும் அடுக்கிக்கொண்டே போகின்றார்.
புகழ் போதை மனிதனை பீடித்துக்
கொண்டால் விடுவது சுலபமில்லை. கிடைத்துவிட்ட புகழை பாதுகாக்கவே பல இழப்புகளை சந்திக்க
வேண்டிவரும். அது பயணத்திற்கு தடைபோட்டுவிடுகிறது. அத்தகைய புகழ் போதைக்கும் ஒரு கவிதை சொல்லியுள்ளார்.
வெளிச்சம்
உன் மீதே
விழுந்து
கொண்டிருந்தால்
கருகிப்
போய்விடுவாய்
காட்சிகளை மாற அனுமதி (பக்கம் 39)
இத்தொகுப்பில் கூடுதல் கவனத்தை
ஈர்ப்பது குரு சிஷ்யன் பற்றிய கவிதைகள். மெல்லிய பகடியை அக்கவிதைகள் பேசினாலும் அதிலிருந்து
வேறொரு பரிணாமத்திற்கு நம்மை அழைக்கின்றது.
அவர்
கரையேறிய பின்
ஆற்றில்
நீந்திக் களிக்கும்
சீடர்களை
அதிசயமாகப் பார்க்கிறார்
அது தெரியாத குருநாதர் (பக்கம் 63)
பாருங்கள். இக்கவிதையில் இருக்கும்
பகடி, சிரிக்க மட்டுமா வைக்கிறது. இங்கு யாருக்கு யார் குரு என கேட்கவும் வைக்கின்றது.
இப்படியாக பல கவிதைகள் அடங்கியுள்ளன.
வாசகர்களின் நினைவுகளுடன் விளையாடும் கவிதைகள்
கொண்ட தொகுப்பு. வாசிக்க வாசிக்க நாமும் நம் அன்றாடங்களில் மறைந்திருக்கும் கவிதைகளைக்
கண்டுகொள்ள உதவும் புத்தகம். இவ்வளவுதானா கவிதைகள் என சத்தமாக கேட்கவும் வைக்கின்றன,
இந்த கவிதையை ஏன் கண்டுகொள்ளாமல் போனோம் என்கிற சுய பரிசோதனைக்கு நம்மை அழைத்தும் செல்கின்றன.
கவிஞருக்கும் நன்றியும் அன்பும்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக