புத்தகவாசிப்பு_2021
‘இரண்டாம் லெப்ரினன்ட்’
தலைப்பு
–‘இரண்டாம் லெப்ரினன்ட்’
வகை
– சிறுகதை தொகுப்பு
எழுத்து
– அகரமுதல்வன்
வெளியீடு
– நூல் வனம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
இதுவரை படித்திருந்த ஈழத்துச்
சிறுகதைகளில் என்னை பெரிதும் பாதித்த சிறுகதை தொகுப்பு. மிகுந்த மன உளைச்சலிலேயே ஒவ்வொரு
கதையையும் வாசிக்கலானேன். சொல்லப்போனால் ஒவ்வொரு கதையை வாசித்து முடித்ததும் நீண்ட
மௌனமானேன். தொகுப்பு கையில் இருந்த நாட்களில் கவனம் வேறெங்கும் செல்லவில்லை. வீட்டில்
கூட அந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்தார்கள். ஏதோ ஆகிவிட்டது என ஆளுக்கு ஆள் அக்கறை
காட்டினார்கள். வாசிக்கையில் என் காதுகளுக்கு மிக அருகில் துப்பாக்கிச் சூடு கேட்டது.
ஆயுதம் ஏந்தியவன் போல கைகள் வலித்தன. கண்முன்னே சாவை பார்த்துவிட்டவன் போல பீதிக்குள்ளானேன்.
புத்தக வாசிப்பிற்கு செல்வதற்கு
முன்பாக சிலவற்றை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு பதின்ம வயது இருக்கும். நாங்கள்
வாழ்ந்த தோட்டத்தில் எங்கள் வீடு உட்பட சில வீடுகளுக்கே வீடியோ கேசட் வசதி இருக்கும்.
யாரிடமாவது சினிமா பட வீடியோ கேசட் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். எல்லோரும்
பார்ப்போம்.
அப்போது, அப்பாவின் நண்பர் ஒருவர்
அப்பாவுடன் வங்திருந்தார். அவர் கையில் சில கேசட்டுகள் இருந்தன. கறுப்பு பையில் அவற்றை
மறைத்திருந்தார். எங்களுக்கு ஒரு கேசட்டைக் கொடுத்துவிட்டு அப்பாவிடம் கொஞ்ச நேரம்
பேசினார். பின் இன்ன பிறருக்கு வீடியோ கேசட்டுகளைக் கொடுக்க சென்றார்.
கேசட்டை வாங்கிய அப்பா ஏதோ கையில்
கொலை செய்து கொடுத்த துப்பாக்கியை மறைப்பது போல பதற்ற முகத்துடன் வீட்டிற்கு வந்தார்.
அவர் வந்தவுடன் எங்கள் வீட்டு வரிசையில் உள்ள சிலரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்பா
கதவை மூடினார். நானும் என் நண்பனும் அருகில் அமர்ந்துக் கொண்டோம். எங்களுக்கு நடப்பது
புரியவில்லை. பெரியவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
வீடியோ கேசட்டை போட்டார். தொலைக்காட்சியில்
ஒலி அளவை குறைத்து வைத்தார். அழுகுரலோடு யாரோ பாடலானார்கள். ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன.
துப்பாக்கியால் ஒருத்தரை ஒருத்தர் சுடுகிறார்கள். பெண்கள் கதறியபடி எங்கோ ஓடுகிறார்கள்.
கையில் உயிரிழந்த பிள்ளையை சுமந்தபடி ஒரு மனிதர் கீழே விழுகிறார். எனக்கும் நண்பனுக்கும்
ஒன்னும் புரியவில்லை.
அப்பாவும் வங்திருந்த அவரது நண்பர்களும்
கண்கள் சுருங்கிட பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோவப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மாவும்
அவரது தோழிகளும் அழுகிறார்கள். தன் முன்னே தங்கள் பிள்ளைகள் இறந்த துக்கம் போல ஒருவர்
வாயை பொத்திக்கொண்டு தேம்ப ஆரம்பித்துவிட்டார். அரைமணி நேரம் கூட அந்த வீடியோயை யாராலும்
பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியை மூடிவிட்டோம்.
அழுபவர்கள் அழுதுக் கொண்டிருந்தார்கள்.
சிலர் கோவத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் ஓசை
கேட்டது அப்பா ஜன்னலின் வழியே பார்த்தார்.
வீட்டில் உள்ளவர்களிடம் கையில்
இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டார். கேசட்டை எடுத்துக் கொண்டு வெளியில் காத்திருப்பவரிடம்
கொடுத்தார். கேசட்டையும் பணத்தை பெற்றுக்கொண்டவர் அப்பாவிடமும் அவரது நண்பர்களிடம்
எதையோ தீவிரமாக பேசலானார்.
வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும்
இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.
மூளையில் ஏதோ ஒரு மூலையில் இருந்த
பழைய நினைவுகளை ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ புத்தகம் கிளறிவிட்டது. அன்று அம்மா அழுவதை
புரியாமல் பார்த்தவன் இன்று அவரின் மனநிலையில் அழுகிறேன். அவர் அழுததின் காரணம் புரிந்தது.
இதுவரை வாசித்த ஈழத்துச் சிறுகதைகளில்
கதைகள் இருந்தன. அகரமுதல்வனின் கதையில் உயிர் இருக்கின்றது என எனக்கு நானே சொல்லிக்
கொள்கிறேன். இது சரியா தவறா என கேட்பதற்கு நேரமில்லாதபடி அந்த மனதர்களின் அழுகை என்
காதில் கேட்கின்றன.
கதைகள் என்ன செய்யும் என்கிற
கேள்விக்கு ; அவை உன் நிம்மதியை கெடுக்கும் என சொல்லத் தோன்றுகிறது. இதுவரையில் எழுத்தாளர்
அகரமுதல்வனை கேள்விபட்டதோடு சரி, அவரது படைப்புகளை வாசித்திருக்கவில்லை. முதல் வாசிப்பிலேயே
மனதை கலங்கடித்துவிட்டார்.
தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள்.
பல கதைகள் பெண்களே மையமாக இருக்கிறார்கள். கதைச்சொல்லி கதையை சொல்லும் விதம் நம்மையும்
கதைக்குள் இழுத்துவிடுகிறார்.
இலங்கை யுத்தம் மட்டுமல்ல, உலகில்
நடக்கும் எந்த போரையும் ஊடகம் வழி (திருட்டுத்தனமாகவும்)நாம் செய்திகளாக தகவல்களாக
அறிந்துக் கொள்கிறோம். ஆனால் புனைவாக வாசிக்கும் பொழுது நம்மால் அத்தனை எளிதாக எடுத்துக்
கொள்ள முடிவதில்லை அதற்கு இச்சிறுகதைகள் உதாரணம்.
யுத்த காலத்தையும் யுத்த காலத்திற்கு
பிறகான காலத்தையும் கண்முன்னே கதைகளாக்கி புனைந்திருக்கிறார் ஆசிரியர். சொல்லப்போனால்
யுத்த காலத்தைவிடவும் யுத்தத்திற்கு பிறகான காலமே கொடுங்காலமாக சாத்தான்களில் கைப்பிடியில்
இருக்கிறது.
‘கரும்புலி’ என்னும் கதை. நம்மால் கற்பனையும்
செய்துவிட முடியாத கொடுமையை அனுபவிக்கிறார் முன்னால் பெண் போராளி. அவர் மட்டுமல்ல அப்பாவி
மக்களும் சிக்கியப்பின் விதிவிலக்கல்ல என காட்டுகிறது கதை. ‘இரும்புக் கதவு திறக்கும்
சத்தம் கேட்டால், ஏதோவொரு மூலையில் எனது பிறப்புறுப்பை கைகளால் மூடிக்கொண்டு இருப்பேன்’
என சொல்லும் பெண் போராளி சாதக் ஹசன் மாண்டோவின் ‘திற’ சிறுகதையை நினைக்க வைக்கிறார்.
அக்கதையைக் காட்டிலும் ‘கரும்புலி’ அதிக வலியைக் கொடுக்கச் செய்கிறது. ரகசிய அறையில்
அடைக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு மத்தியில் நம்மையும் வைத்துவிடுகிறார். ரத்த வாடை
இல்லாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.
‘சாம்பவிகளுக்கான
விடுதலை’ என்னும்
கதை, மழையை ஆராதிக்கும் சாம்பவியிடம் இருந்து தொடங்குகிறது. யுத்தம் குழந்தைகளையும்
விட்டுவைப்பதில்லை என சொல்லும் கதை. அது குழந்தைகளை விகாரமாக்குவதோடு இல்லாமலாக்குவதையும்
சொல்கிறது. இது ஒரு சிறுமியின் கதை மட்டுமல்ல. இராணுவத்தில் சிக்கிய ஒவ்வொரு சிறுவர்களின்
நிலை. அவர்களின் மரணம் மட்டுமே எல்லாவற்றிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கொடுக்கிறது.
‘மோன்’ என்னும் மூன்றாவது கதை. ஒரு
படைப்பாளி தன் படைப்பை எவ்வாறு அணுக வேண்டும் என காட்ட தவறவில்லை. போராளிகளின் பாடுகளை
சொல்லும் அதே வேலையில் இயக்கத்தின் மீதான விமர்சனத்தை வைக்கிறது. ஆசிரியர் அதனை தவிர்த்திருக்கலாம்.
அப்படியும் பலர் ஒரு தரப்பில் இருந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் அகரமுதல்வனின் கதையில்
அவர் காட்டும் உண்மை புனைவுகளை கவனிக்க வைக்கிறது. தன் மகனை இயக்கத்தார்தான் துரோகி
என மரத்தில் கட்டு, சுடப்பட்டு விறகால் எரிக்கப்பட்டபின்னரும் கூட இயக்கதினருக்கு உணவு
போடும் அம்மா. இந்த மனிதர்களை எப்படி புரிந்துக் கொள்வது.
‘எனக்கு ஒன்றுமட்டும் தெரியுது
தம்பி உண்மையா சண்டை இன்னும் முடியேல்லை, அது எங்கட உடம்புகளில் நடந்து கொண்டிருக்கு….’
என சொல்லும் ‘குணமகள்’ தொகுப்பில் நான்காவது
சிறுகதை.
யுத்தங்கள் சாகடிப்பதுமட்டுமல்ல,
உயிரை வைத்துக் கொண்டே இருக்கும். அதற்கு பதில் சாகடித்திருக்கலாம் என காலில் விழுந்து
கதறச்செய்யும். ‘நாவல்மரம்’ தொகுப்பில்
ஐந்தாவது கதை. காதல் கதை. ஆனால் காதலை கொன்று காதலை உயிருடன் கொல்லும் கதை. எப்படியாவது
சேர்ந்திட வேண்டும் என நம்மையும் பிரார்த்திக்க வைத்து; உடைந்து அழ வைக்கிறது. தடுப்பு
முகாமில் காவலில் இருக்கும் இராணுவத்தின் கைபேசியில் தினம் தினம் ஒலிக்கும் தமிழ்ப்பெண்களில்
கதறலில் ஒரு நாள் தான் தேடி அழைந்த காதலியின் கடைசி குரல் கேட்பது எவ்வளவு பெரிய சாபம்.
இந்த பாவங்கள் யாரைப் போய் சேரும்.
ஆறாவது கதை; ‘இரண்டாம் லெப்ரினன்ட்’. விரும்பியும் கட்டாயத்தின்
பேரிலும் இயக்கத்தில் ஆள் சேர்க்கிறார்கள். அப்படி சென்றவன் பிணமாய் வருகிறான். அந்த
சூழலை கண்முன்னே காட்டும் கதை.
ஏழாவது கதை, ‘பைத்தியத்தின் தம்பி’, என்னை இப்போது வரை
அழ வைத்திருக்கும் கதை. பைத்தியம் என்கிற பெயரை சுமந்துக் கொண்டு எல்லாவித வன்முறையையும்
உடலில் சுமக்கிறார் வான்மகள். கதைச்சொல்லியிடம் வான்மகள் ஒரேயொரு முறைதான் பேசுகிறார்.
ஆனால் நம்மை அழ வைப்பதும் அங்குதான்.
எட்டாவது கதை கானகி. தன் நிலத்திற்காக ஏங்கும் மனிதர்கள்.
ஒன்பதாவது கதை, ‘விசாரணை’. கைது செய்யப்பட்ட போராளிகளுக்கும்
சரணடைந்த போராளிகளுக்கும் விசாரணை, புனர்வாழ்வு, விடுதலை என்பதற்குள் பாலாத்காரமும்
உண்டு என சொல்லும் கதை. தொகுப்பில் ஆணை மையப்படுத்திய கதை இது. அந்த போராளி சந்திக்கும்
விசாரணை நம்மையும் பதைபதைக்க வைக்கிறது.
பத்தாவது சிறுகதை ‘சாகாள்’. அகப்பட்டம் பெண் போராளிகளுக்கு
ஏற்படும் கொடுமையை ஆவணம் செய்திருக்கும் கதை. தொகுப்பில் சற்றே நீண்ட கதை. பெண் போராளிகளுக்கான
வதை முகாமின் மனித மிருகங்கள் தங்களை முழுமையாக மிருகங்கள் என காட்டுகின்றன. ‘யுத்தத்தை
வென்ற அதிகாரம் தனது மமதையை தோல்யுற்ற யோனிகளிலேயே நிகழ்த்தும்’ என சொல்கிறார். அதற்கான
காரணம்தான் கதை. எளிதல் வாசித்து கடக்க முடியாத கதையும்.
‘பரணி’,’அம்மாவும்
அமெரிக்காவும்’
தொகுப்பின் கடைசி இரண்டு கதைகள்.
போர் குறித்து ஓரளவேனும் அறிந்த
நமக்கு, போருக்கு பின்னரான சூழலை காட்டும் கதைகள் இவை. எங்கே மனிதன் மண்ணுக்காக சாகிறானோ
அங்கேதான் மனிதான் பிறந்த மிருகங்களும் நடமாடுகின்றன. பிடிபட்ட போராளிகளை புனர்வாழ்வுக்கு
அனுப்புவதற்கு முன் என்ன நடக்கின்றது என்பதனை கண்கள் கலங்க மனம் வருந்த எழுதியிருகின்றார்
எழுத்தாளர். இது சிறுகதையா, அதன் கட்டமைப்பு உள்ளதா, இல்லை வெறும் சம்பவங்களா என்கிற
எந்த கேள்விக்கும் இடம் கொடுக்காத கொடுக்கவும் முடியாத எழுத்தாக்கம் இது. எத்தனை பேரால்
அழாமல் இக்கதைகளை வாசிக்க முடியுமோ தெரியவில்லை. ஆனால் அழுதாலும் சரி, ஒரு முறையேனும்
இக்கதைகளை வாசித்துவிடுங்கள். இனி அகரமுதல்வனின் எந்த கதையையும் தவறவிடக்கூடாது என்பதே
அவருக்கு நான் சொல்லும் நன்றி.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக