Pages - Menu

Pages

ஏப்ரல் 10, 2021

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

தலைப்பு – ஆரண்யம்

வகை – கவிதை 

எழுத்து – கவிஞர் கயல்


   சமீபத்தில் வாசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம். எழுத்து கவிஞர் கயல். மிகவும் ரசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம் என்றால் வனம். காடு. இந்த புத்தகத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. வாசிக்கையில் கவிஞர் நம் கையைப் பற்றிக்கொண்டு வனத்திற்கு அழைத்துச் செல்வதாகவே தோன்றியது.

   எல்லோருக்கும் தங்களின் பால்யம் குறித்த நீங்காத நினைவுகள் இருக்கவே செய்யும். அதில் காடும் காடு சார்ந்த அனுபவங்களும் குறைவின்றியே இருக்கும். இக்கவிதைகள் காடு மீதான எனது நினைவுகளை மீள் செய்துள்ளது. காடு என்பது வெறும் காடு அல்ல என திரும்பத் திரும்பச் சொல்கிறது.

   கவிஞர் வனத்தை தாய்மை கொண்டு அணுகுகின்றார். குழந்தைபோல ரசிக்கிறார். தன்னை வண்ணத்துப்பூச்சியாக்குகிறார். தன்னை நதியாக்குகிறார். தன்னை மரமாக்குகிறார். நிறைவாக தன்னையே வனமாக மாற்றிக் காட்டுகின்றார்.

   அது வனம் மட்டுமல்ல நம் வாழ்வு. இயற்கையின் அன்னை. அதுவே இறைவன். இறைவனுக்கும் காதலுக்கும் இடைபட்ட இடைவெளியை வனம் நிரப்புவதை எழுதுகின்றார்.

   வனத்தைச் சொல்லும் போது யானையை மறக்க முடியுமா? இத்தெகுப்பில் யானை பற்றிய கவிதைகள் சில உள்ளன.

தன்னை அண்ணாந்து

பார்க்கும் சிறுமி,

தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட

சுரக்கும் பால் மடி கனக்கத்

தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்

கோயில் யானை

   என்ற கவிதையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியவில்லை. எனக்கு யானை பிடிக்கும் என்பதால் மட்டுமல்ல. யானையை கவிஞர் காட்டிய தருணத்தினால். நமக்கு தெரிந்ததெல்லாம் யானை மட்டுமே. அது யானைமட்டுமல்ல அதுவும் தாய்தான்.  

   எத்தனை பறவைகளின் பெயர்களை மறந்துவிட்டோம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. கவிஞர் சொல்லும் ஒவ்வொரு பறவையின் பெயரும் குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது.

சாவுக்குருவி,

சாத்தான் குருவியென

வசவுகள் வாங்கி

சகுனத்துக்கு

ஏவல் பலிக்குப்

போக எஞ்சியவை மட்டுமே

வாழ்கிறோமென

நள்ளிரவில்

கதறும் ஆந்தைக் குரலை

உற்றுக் கேட்கையில்

ஒலிக்குமொரு கேள்வி

“இதில் , யார்

சாத்தான்?” என்று.

   இனி ஆந்தையின் அலறல் சத்தம் அபசகுணமாய் அல்ல நம் மனசாட்சியின் குரலாகவே ஒலிக்க வைக்கிறார் கவிஞர்.

   மனிதனின் சுயநலம் எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இலாபம் கிடைக்க தான் முன்னேறி நடக்க எதனையும் செய்ய துணிந்துவிட்ட மனிதனிடம் இல்லாத குற்றவுணர்ச்சியை தேடவைக்கும் கவிதையாகவே,

தளும்பிச் சிரிக்கும் ஆறு

கிறங்கி நீந்தும் கூழாங்கற்கள்

வரவேற்கும் மரங்கள்

வனத்தின் குரலாய்ப்

புள்ளினத்தின் பாடல்

என

இருந்தன காடுகள்

மனிதன் கோடரி

செய்யக் கற்கும் வரை

   என்கிற கவிதையைச் சொல்லலாம். இக்கவிதைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இன்னொரு கவிதையும் உண்டு. அது மனிதனின் சுயநலத்தில் தனக்கும் பங்குண்டு என மரங்கள் அழும் கவிதை. அது;

ஆதிக் கோடரிக்

கிளையொன்றின்

பாவந்த் தீர்க்க

இன்னும் எத்தனை

சிலுவை

எனக் கேவியழுகிறது

ஒவ்வொரு மரமும்

வெட்டுருகையில்.

போதும்….

   தன்னை முழுவதுமாய் இன்னொன்றாய் ஆக்கிவிட மனிதர்களால் முடிகிறது.  ஆனால் கவிஞர்களால் மட்டுமே அதனை முழு உணர்வுப்பிரக்ஞையுடன் செய்ய  முடிகிறது. தன்னை மரமாக மாற்றிக் காட்டும் கவிஞர் அதன்  வலியை இப்படிச் சொல்கிறார்.

என் உயிரைக் கொல்கிறது

நம்பிக்கையில்லாத் தீர்மானமாய்

எம் பக்கத்து மரங்களிலெல்லாம் பறவைகள்

வந்தமராதிருப்பது…

   மரத்திற்கு மட்டுமல்ல நமக்கும் கூட புறக்கணிப்பின் வலியை இக்கவிதை நினைவுப்படுத்துகிறது.

   மேலும் ஒரு கவிதையில் மரத்தைப் பற்றி சொல்கிறார் ஆறு வரி கவிதையில் ஆறுவரிகளுமே கவிதைகளாக பரிணமிக்கும் அதிசயத்தை காண முடிகின்றது, அது

-மரம்-

இறைமகளின் தரைச் சிங்காதனம்

தாக வேரின் மழைத் தூது

வனமங்கை இடையாடும் மரகதச் சீலை

எவர் அடியும் பணியாத் தலை

புவியில் பொன்வண்ணப் பூ விசிறி

பறவை ஒலியில் பேசுந் தெய்வம்

   மீண்டும் ஒரு முறை இந்த ஒவ்வொரு வரியும் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. ஒரு புகைப்படம் போல, ஒரு அமானுஷ்யம் போல, ஒரு தேவதை போல, ஒரு வரம் போல.

   இத்தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதிதான உலகை நமக்கு காட்ட முற்படுகின்றது. ஆனால் அவ்வுலகில்தான் நாம் வாடகை கட்டாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நியாபகப்படுத்துகின்றது.

எதிர்ப்பட்ட பின்

கடப்பது கடினம்

காதல்,

கடவுள்,

காடு

   என்னும் இக்கவிதை, இத்தொகுப்பை சுருக்கிச் சொல்வதாகவேப் படுகிறது. ஒரு முறை இக்கவிதைகளை வாசித்த பின், அது கொடுக்கும் நினைவலைகளை சாதாரணமாய் கடந்துவிட முடியாது. அவ்வகையில் கவிஞருக்கு என் நன்றியும் அன்பும்….

அன்புடன் #தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக