#குறுங்கதை 2021 - 6
- கடவுளின் குரல் -
"இன்று பலி கொடுத்துவிடுவேன்" என உறுதியாகச் சொன்னார் அம்மா.
"ஆம். இன்றுதான் அதற்கான நாள். இனி நீ கேட்டது எல்லாம் உனக்கு கிடைக்கப் போகிறது. இனி நீதான் ஆள்வாய். நீதான் பேரழகியாய் திகழ்வாய்.. நீதான் நிரந்தரமானவள்... தயாராகு... தயாராகு... பலி கொடுக்கத் தயாராகு..." அந்த அசரீரி அடங்கியது.
அம்மா கண்ணாடியைப் பார்த்து சிரிக்கலானார். இனி அவர் நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது. கடவுளே பேசி விட்டதால் அவளால் மறுக்க முடியவில்லை. அதற்கான ஒரு பிள்ளையை என்ன, எத்தனை பிள்ளைகளையும் பலி கொடுக்கலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்
முதல் அசசீரி கேட்கும் போது அம்மா பயந்துதான் போனார். நாளாக நாளாக கடவுளே தன்னிடம் பேசுவதை கண்டறிந்தார். கணவன் இல்லாமல் , ஒரு மகளுடன் வாழ்வை கழித்தவளுக்கு நிச்சயம் இது வரம்தான்.
அதற்காக மகளையா பலி கொடுப்பார்கள். கேட்டது கடவுளாச்சே மறுக்க முடியுமா என்ன..?
அந்த அசரீரி அம்மாவின் மனதை தன் வசம் இழுத்திருந்தது. அம்மா தன் நிலை மறந்து ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்.
இன்றோடு மகளுக்கு 10 வயது பூர்த்தியாகிறது. பலி கொடுக்க சரியான நாள். எல்லாம் தயார்.
அறை முழுக்க சாம்பராணி புகையும் புதுவித நறுமணமும் சூழ்ந்திருந்தது. ஆள் உயர நிலைக்கண்ணாடி முன்பு அம்மா மகளை அமர வைத்தார். மகளும் ஏதோ மயக்கத்திற்கு ஆட்பட்டவள் போல கண்களில் பாதி மயக்கத்தில் இருந்தாள். அப்படியே கண்களை மூடினாள்.
அந்த அசசீரி மீண்டும் ஒலித்தது. அம்மா கையில் கத்தியை எடுத்தார். மகளின் கழுத்தில் ஒரு முறை வைத்துப் பார்த்தார். குரல்வளையில் குறி சரியாக இருக்கிறது.
பலி கொடுப்பதற்கு முன் , அம்மா கண்களை மூடி அசரீரியின் ஒப்புதலைக் கேட்கலானார்.
கண்களை திறந்த மகள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அம்மாவில் வயிற்றில் குத்திக்கிழித்தாள். அம்மா அதிர்ச்சியில் அப்படியே சரிந்தார்.
"ஏன்மா.. கடவுள் உன் கிட்ட மட்டும்தான் பேசுவாறா...? என்கிட்டயும்தான் பேசுவார்..." என்று மகள் சிரிக்கலானாள்.
#தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக