- அறிந்தும் அறியாமலும் -
"சொன்னதை செய்.."
"இல்லங்க அது..."
"சொன்னதை மட்டும் செய். இங்க நீ புருஷனா இல்ல நான் புருஷனா...?"
ஏதும் பேச முடியாமல். சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள். ஆனாலும் அவருக்கு கோவம் குறையவில்லை. ஏதாவது செய்ய நினைத்தார்.
"ஏய்... இங்க வா... காபி ஆறிப்போச்சி.! எடுத்துட்டுப் போ... வேற காபி சுடச்சுட போட்டு கொண்டுவா..."
சில நிமிடங்களில் காபி வந்துவிட்டது. அவசரத்தில் எடுக்கவும் அவரது கையை சுட்டுவிட்டது.
"கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. குடிக்கற மாதிரியா கொடுக்கற.. கொதிக்க கொதிக்க கொடுத்திருக்க... எடுத்துட்டு போ கொஞ்சம் ஆறவச்சி கொண்டு வா...."
"நீங்கதான...." அவளால் முடிக்க முடியவில்லை. அவர் அதை விடுவதும் இல்லை.
"எக்ஸ்ராவா பேசாத... சொன்னதை மட்டும் செய்......"
அவள் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. காபியை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
அவரது கைபேசி பாடியது. முதலாளி அழைக்கிறார். உடனே எடுத்து பேசலானார். இவர் ஏதேதோ சொல்ல முயன்றும் முடியவில்லை. கேட்க மட்டுமே செய்தார்.
மனைவி காபியை கொண்டு வந்து மேஜையில் வைக்கிறார். பார்த்ததும் அவருக்குள் வேகம் வந்தது. மீண்டும் ஏதோ பேச முயன்றார்.
"நான் சொல்றதை நீங்க கேளுங்க சார்... நீங்க பாஸா நான் பாஸா.....?" என்றார் முதலாளி சத்தமாக.
அவர் அதை மனைவிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். மனைவியும் கேட்டும் கேட்காதது போல நடக்கலானார்.
#தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக