(ஒன்பதாவது கட்டுரையை முன்வைத்து...)
தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
*ஒன்பதாவது கட்டுரையாக 'சுந்தர ராமசாமி : அதீதப்பிரக்ஞையில் நழுவும் கலை எழுச்சி' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
சுந்தர ராமசாமி கதைகளைப் பற்றி கூறும் போது, 'கதைகளை மிகமிக கவனமாகத்தான் உருவாக்கியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கதைகளாக அமைந்துவிட வேண்டும் என்ற காதலுடன் தான் கதைகளை எழுதியிருக்கிறார்'
என்கின்றார்.
ஆனால் சு.ராவின் படைப்புகளில் அவர் தவறவிட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக ஆழமாக அலசுகின்றார். ஒரு படைப்பாளயின் படைப்புகளை அணுகும் போது பொதுபுத்தி சார்ந்த பார்வை கொண்டிருக்காமல், தன் வாசிப்பின் அனுபவம் கற்றுக்கொடுத்த்திருக்கும் தெளிவில் இருந்து அணுகவேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது.
சு.ரா அவர்கள் தனது கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றில் வெவ்வேறான பரிணாமங்களை கொண்டிருப்பது வாசகர்களுக்கு புலப்படும் வண்ணம் கட்டுரை இருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.
சு.ராவின் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனம் அவரின் நவீன இலக்கியத்தளத்திற்கான பங்களிப்பை கெடுக்காதவாறு கட்டுரையாசிரியர் எழுதுயுள்ளார்.
படைப்பாளியின் படைப்புகள் மீது விமர்சனம் வைக்கும் அதே வேளையில் அவர் மீதான தேடலை புதியவர்களுக்கும் மீள் வாசிப்பாளர்களுக்கும் கொடுக்கும் வண்ணமே கட்டுரையை இயற்றியுள்ளார்.
ஒரு பக்கம் பலவீனங்களை சொல்வதோடு இன்னொரு பக்கம் அப்படைப்பு எப்படி தனக்கான இடத்தை அடைகிறது என கோடிட்டு காட்டுகிறார் கட்டுரையாளர் சு.வேணுகோபால்.
எழுதிய காலகட்டம் தொட்டு இன்றுவரை சர்ச்சையைக் கொடுக்கும் 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சு.ராவின் சிறுகதைப் பற்றிய தனது பார்வையை, அக்கதையை அணுகவேண்டிய இன்னொரு சாத்தியக்கூறுகளை முன் வைப்பதன் வழி இக்கட்டுரை படைப்பாளியின் படைப்புகள் மீதான அக்கறையை காட்டுகிறது.
முந்தைய கட்டிரைகள் போல இக்கட்டுரையிலும் எழுத்தாளரின் முக்கியமான ஆக்கங்களை குறிப்புகளாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக