‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது
கட்டுரையை முன் வைத்து
தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
மூன்றாவது கட்டுரையாக, ‘பாலுணர்வின் கிளர்ச்சி’ என்ற தலைப்பில் எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.
எம்.ஏ.இளஞ்செல்வன், மலேசிய தமிழ் இலக்கியத்தில் எத்தனை முக்கியமானவர் என்பதை கட்டுரையின் முதல் பக்கத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம். இங்கு புதுக்கவிதை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு ஆதரவாக மரபு கவிஞர்களின் விமர்சனத்திற்கு கடுமையான எதிர்வினையாற்றியவர்.
அவர் பற்றிய மேலதிக விபரங்களை கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். அவை ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. அவரின் காலகட்டத்தில் அவர் ஓர் நட்சத்திர எழுத்தாளராக அறியப்பட்டவர். அதற்கான பின்னனியைக் கட்டுரையாசிரியர் சொல்கிறார். அது உண்மையும் கூடதான். எனக்கு நினைவு தெரிந்து வாசிக்க ஆரம்பித்த பொழுதில் எம்.ஏ.இளஞ்செல்வன் ஒரு இலக்கிய நட்சத்திரம் எனவே சொல்லப்பட்டார்.
அவருக்கும் கட்டுரையாளருக்குமான ஆத்மார்த்தமான உறவை ஆசிரியர் கட்டுரையில் சொல்கிறார். ஆனால் அதுவெல்லாம் தன் ரசனை விமர்சனத்திற்கு ஒரு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை. விமர்சனம் என்பது ஒரு பொறுப்பு. அதனை பழக்கமான முகங்களுக்காகவும் பழகிக்கொண்டதற்காகவும் அடகு வைத்துவிடக்கூடாது. இங்கு படைப்புகளின் பலவீனத்திற்கு முதல் காரணமாக இருப்பது மேம்போக்கான விமர்சனங்கள்தான். மருந்து கசக்கும் என்பதால் சீனி கலந்து கொடுப்பார்கள். ஆனால் மருந்து கசக்கக்கூடாது என்பதற்காக வெறும் சீனியையே கொடுத்து வந்தால் என்ன ஆகும்? அதுதான் இன்றைய பல படைப்புகளின் நிலை.
எம்.ஏ.இளஞ்செல்வன் பெற்றிருக்கும் வாசகர் பரப்பிற்கு பாலியலை தனது குறுநாவல்களில் அவர் ஆதாரமாக் கொண்டிருப்பதுதான் காரணம் என ஆசியர் கருதுகிறார். நிச்சயம் இதனை வாசிக்கையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.
ஆனால் அந்த அதிர்ச்சியை தனது அடுத்தடுத்த விமர்சனம் கொண்டு கலையச் செய்கிறார் ஆசிரியர்.
நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு நன்றியுணர்ச்சி அவசியம் இல்லை, ஆனால் பொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு அவசியம் என கட்டுரை காட்டுகிறது.
ஒருவேளை இக்கட்டுரையை வாசித்திருந்தால் ஆசிரியர் சொல்வது போல எம்.ஏ.இளஞ்செல்வன் மென்புன்னகையுடன் வரவேற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை நானும் உணர்ந்துள்ளேன்.
#தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக