கல்யாண மண்டபம். விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமக்கள் மேடையிலும் மற்ற மக்கள் கீழும் அமர்ந்திருந்தார்கள். நான் தான் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்.
சில பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இருந்தார்கள். ஒத்திகைக்கு ஏற்றவாறு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமக்களை வாழ்த்தவும் மொய் கொடுக்கவும் மேடைக்கு வரலாம் என்று அறிவித்தேன். வருசையில் நிற்கலானார்கள். சிலர் ஒரு பக்கம் சாப்பிடச் சென்றார்கள்
பாடகி பாடிக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக அப்போது ஏற்பட்டிருந்த இரைச்சலில் இந்த குயிலின் குரல் சரியாக கேட்கவில்லை. கேட்டிருந்தால், வந்தவர்கள் எல்லாம் கூவியிருப்பார்கள்.
அப்போதுதான் அந்த முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அந்த முகம் நாசுக்காக தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது. நான் யோசிக்கலானேன். அட ஆமாம்! அது என் நண்பன் பிரபா. காலேஜ் நண்பன். அப்போது நான் , பிரபா, ராஜன் தான் நல்ல நண்பர்களாக இருந்தோம். எத்தனை சேட்டைகள் எத்தனை திட்டுகள். நாங்கள் மூவரும் தான் எப்போதும் ஒரு கூட்டணியாக இருப்போம். ஒன்றாக இருந்தோம். நன்றாகத்தான் இருந்தோம்.
காலேஜ் முடிந்து நான் கோலாலும்பூர்க்கு வந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் எங்கள் தொடர்பு தடைபட்டுவிட்டது. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பிரபாவைப் பார்க்கிறேன். இப்போதே ராஜனையும் பார்த்துவிட வேண்டும் என தேடலானேன்.
பிரபா மணமேடையை நெருங்கிவிட்டான். இன்னமும் முகத்தை மறைப்பதிலேயே மும்முரம் காட்டிக்கொண்டிருந்தான். இப்போதுதான் கவனித்தேன். அவன் ஏதோ பெண்ணுடன் வந்திருக்கிறான். மனைவியோ காதலியோ அப்படித்தான் தெரிந்தது. இருவரும் ராஜா ராணி போல பொருத்தமான உடையணிந்திருந்தார்கள்.
அந்த பெண்ணும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் ஏன் என்னை இப்படி பார்க்கிறாள். பிரபா என்ன சொல்லியிருப்பான் என யூகிக்க முடியவில்லை. அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. இப்போது நான் என் முகத்தை மறைத்துக் கொள்ள இடம் தேடும்படி ஆனது.
மணமக்களை வாழ்த்தி இருவரும் கீழே இறங்க வந்தார்கள். நான் அங்கே நின்றுக் கொண்டிருந்தேன். சட்டென "பிரபா.." என அழைக்கவும் செய்தேன். இப்போதுதான் என்னை பார்ப்பது போன்ற பாவனையில் அதிர்ச்சியாகி ஏதேதோ உளறினான்.
நிலமையை சமாளிப்பதற்காக, "உன்னை பார்த்துட்டேன்.... ராஜனை எப்ப பார்ப்பேன்னு தெரியல...?" என்றேன்.
சட்டென " டேய் மணி நான் தாண்டா... என்னை தெரியலையா உனக்கு... " என்று கேட்டு பிரபாவுடன் வந்திருந்த பெண் சிரிக்கலானான். அந்த சிரிப்பும் குரலும் அப்படியே ராஜன் தான்.
#தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக