அனு, அவள் பெயர். சின்ன பெயர். அதற்கு ஏற்றார் போல குட்டி உருவம். காதருகில் சுருள் முடி. 'ஸ்ப்ரிங்' போல அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் மேலும் கீழும் சென்று வருகிறது.
கண்களில் எதையோ தேடும் தீவிரம். எதனையும் பொருட்படுத்தாதப் பார்வை. சிரிக்கும் போது வலது கன்னத்திலிருந்து துருத்தித் தெரியும் சிங்கப்பல். இல்லை அவளுக்கு அது அணில் பல். தேர்ந்த கைகள் செதுக்கிய வடிவ முகம். அம்புகள் இல்லாமல் குத்திச் செல்லும் வில் புருவம்.
என் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் அவளை சந்தித்ததுதான். அப்போது நான் என் பெயரை பதிவு அட்டையில் எழுத வேண்டும். எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு வாசனை என்னை மயக்கியது. அந்த வாசனையை வர்ணிக்கத் தெரியவில்லை. அது வாசனை மட்டுமல்ல எனக்கான வசியம். திரும்பிப் பார்த்தேன். அவள் நின்றுக் கொண்டிருந்தாள். அடுத்ததாக அவள் பெயரை எழுத வேண்டும்.
வாசனையை முகர்ந்தபடியே வழிவிட்டேன். வகுப்பில் வலது மூலை நாற்காலி எனக்கும் ஒடது மூலை நாற்காலி அவளுக்கும் கிடைத்தன. படிவம் ஒன்றுக்கான வகுப்பு முழுக்க அவளின் வாசனையே நிறைந்திருந்தது.
இத்தனை நாட்களாய் பார்த்திருந்த தமிழ்ப்படங்கள், கேட்டிருந்த தமிழ்ப்பாடல்கள் ஏதும் பயனில்லாமல் போகவில்லை. அப்படியொரு தேவதையை எனக்கு அடையாளம் காட்டின. புத்தகப்பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். நடுப்பக்கத்தைக் கிழித்தேன்.
'அன்புள்ள அனுவுக்கு....' என்று தொடங்கி, கடைசியில் 'உன் அன்புக்காக மணி...' என முடித்தேன். இடைபட்ட இடம் முழுக்க கவி அருவிகளை ஓடவிட்டேன். அவை தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன. எழுதியவன் என்றுக்கூடப் பார்க்காமல் என் முகத்தைக் கூட அவை நனைத்தன.
பதிமூனாவது வயதில் என் வாழ்நாளில் நான் எழுதிய கவிதையும் காதல் கடிதமும் ஒன்றாக அமைந்தது எத்தனை அபூர்வம். அன்றைய முதல் நாள் வகுப்பு முடிந்தது. துள்ளி குதித்துக் கொண்டேன். அனுவிடம் சென்றேன். கடிதத்தைக் கொடுத்தேன். "படிச்சிட்டு நாளை வந்து சொல்லு.." என்றேன். தேவதை தலையாட்டினாள்.
மறுநாள். பள்ளி மணி அடிக்கப் போகிறது. அனு என்னைத் தேடி வந்தாள். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தாள். நேற்று நான் கொடுத்த அதே கடிதம். எனக்கு புரியவில்லை. நான் சட்டென 'இதயம்' முரளியாக மாறி, "என்னை உனக்கு பிடிக்கலையா....?" என்றேன்.
"இத்துல்லா என்னா எளுதிருக்கா.. என்க்கு தமிலு தெரியாது...." என்றாள்.
பள்ளி மணி அடித்தது. அனு செல்கிறாள். ஒரு தமிழ் துரோகியால் என் தேவதைக்கு ஒரு கவிஞனின் கடைசிவரை தெரியாமலேயே போனதை நினைத்து இன்றுவரை நான் வருந்திக்கொண்டு இருக்கிறேன்.
#தயாஜி
ஓவியம்- ஆதித்தன் மகாமுனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக