Pages - Menu

Pages

ஜூன் 08, 2020

வாங்க... வாங்க...



   ராணி இனி வரமாட்டாள். ராஜனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.  ஆனாலும் அவனால் அழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவனுக்கு ஆறுதலைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
    "வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க வாங்க என்ன சாப்டறீங்கனு கேட்பியே , இன்னிக்கு உன்னைப் பார்க்க இத்தனை பேரு வந்திருக்காங்களே ஏதும் கேட்கமாட்டியா...?" என ராஜன் அழுதான். வந்திருந்தவர்களும் அழுதார்கள். 

   இறப்பு சடங்குகள் முடிந்தன. வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக சொல்லிக்காமல் கிளம்பினார்கள். மூன்றாம் நாளில் ராஜன் தனியாள் ஆனான். அவனும் அதைத்தான் விரும்பினான்.

   கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று தெரியவில்லை. 

   வாசல் அழைப்பு மணி அடிக்கிறது. எழுந்தவன் தலைமுடியை சரி செய்துக் கொண்டான். கதவை திறந்ததும் யாரும் கவனிக்கிறார்களாக என ஒரு பார்வைப் பார்த்தான்.

செல்வியை உள்ளே அழைத்தான். 

   இருவரும் மிக நெருக்கமாக அமர்ந்தார்கள். தங்களின் திட்டப்படி எல்லாம் சுமூகமாக முடிந்தது பற்றி சிலாகித்தார்கள். கொஞ்ச நாளில் திருமணம் செய்துக்கொள்ளும் ஏற்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டார்கள்.

   செல்வி எழுந்தாள். "குடிக்க ஏதும் கொண்டு வரேன்" என்றவள் சமையலறைக்கு செல்கிறாள். 

   சில நிமிடங்களில் வாசல் அழைப்பு மணி சத்தம் கேட்கிறது. ராஜன் எழுந்து வாசலுக்குச் சென்றான். கதவை திறந்தான் அங்கு செல்வி நின்றுக்கொண்டிருந்தாள். அவனுக்கு அதிர்ச்சியானது. வெளியில் காட்டிக்கொள்ளாமல். அவளை உள்ளே அழைத்தான்.

   இருவரும் நாற்காலியில் அமர்கிறார்கள். அப்போது,  

"வாங்க.. வாங்க.. என்ன சாப்டறீங்க...?" என்ற குரல் சமையலறையில் இருந்து கேட்கிறது.

#தயாஜி

2 கருத்துகள்: