விளையாட்டாய் அழைக்கப் போய், பின்னர் குண்டு குமார் என்பதே அவனது நிரந்தர பெயராகிவிட்டது. வயதும் அறிவும் வளர வளர, நல்ல வேளையா ரெண்டும் ஒன்றாய் வளர்ந்து வந்தன. ஒருவரின் உடலையும் அவரின் முகத்தையும் நிறத்தையும் வைத்து நக்கல் செய்வதும் ஒரு வகையில் 'வன்பகடி' என புரிந்துக்கொண்டேன். உள்ளுக்குள் எத்தனை வேதனையை குமார் சுமந்து வெறுமையான சிரிப்பை எங்களுக்குக் கொடுத்திருப்பான். குமாரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றியது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு குமாரைச் சந்திக்க வந்திருக்கிறேன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் உணவகம். பழைய ஆட்களே இன்னும் இருந்தார்கள். குமார் வரத் தாமதமாகிக் கொண்டிருந்தது. அதற்குள் எனக்கு ஒரு இஞ்சி டீயை சொல்லிவிட நினைத்தேன். அழைத்தேன்.
வந்திருந்த பணியாளர் எனக்கு அறிமுகமானவர்தான். ஆனால் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். அன்று பார்க்கும் போது தடித்து வாட்டசாட்டமாக இருந்தார். இன்று துரும்பாகியிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது.
"என்ன அண்ணா... டயட்டா... இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க..?"
சிரித்துக் கொண்டே எனக்கான தேநீரை ஆடர் எடுத்துவிட்டுச் சென்றார். திரும்பி தேநீருடன் வந்தார். அவரிடம் டிப்ஸ் வாங்கி குமாருக்கு கொடுக்கத் தோன்றியது.
"அண்ணே... உடம்பு எளைச்ச டிப்ஸ் கொடுத்தா நானும் கொஞ்சம் சைஸ் குறைச்சிக்குவேன்ல..."
என்றவர் சிரித்துக்கொண்டே அடுத்த மேஜைக்குச் சென்றுவிட்டார்.
ஒருவர் சாப்பிடுவதை கேலி செய்வது வன்பகடியெனில், ஒருவருக்கு சாப்பிடக் கொடுக்காமல் வதைப்பது எத்தனை பெரிய வன்முறை.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக