Pages - Menu

Pages

மே 23, 2020

அனாதை



   ரேணுகா தனியாய் இருந்தாள். அவளுக்கு அம்மாவின் மீது அத்தனைக் கோவம். ஏன் இந்த அவசரம். "இப்படி அனாதையாய் விட்டுப்போகவா பெத்துப்போட்டாய்", என அவள் மனம் கொதித்தது. யார் யாரோ அழுதார்கள். ஆனால் அவளுக்கு அழுகை வரவேயில்லை. அம்மா தன்னை அனாதையாக்கி இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    கோவிட் 19 காரணமாய் எல்லா இடத்திலும் ஊரடங்கு. நன்கு அறிமுகமான அம்மாவின் இறுதி நாளில் இருபது பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர். பலரால் வரமுடியவில்லை என்ற தகவல்கள் மட்டுமே தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன.

   அம்மாவின் இறுதி சடங்குகளெல்லாம் முடிந்தன. வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாக விடைபெற்றார்கள்.  ஆயிரம்தான் இருந்தாலும் இறப்பு நடந்த வீட்டில், ஒரு பெண் பிள்ளையை தனியாய் விடுவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. இந்த வட்டாரத்தில் சில திருட்டு பயல்கள் இருப்பதை அறிந்திருந்தார்கள். அதற்காகவே அருகில் வசிக்கும் உறவினர்களை சில நாட்களுக்கு இங்குத் தங்கச்சொல்லி பேசிமுடித்தார்கள்.

   என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இன்று தங்குவதாக வாக்களித்தவர்களும் கடைசி நேரத்தில் ஏதோ காரணம் காட்டி காலையில் வருவதாகச் சொல்லி கிளம்பிவிட்டார்கள்.

   வெளியில் இருந்து, வீட்டில் நடப்பதையே சில கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இப்போது வீட்டில் ரேணு மட்டுமே. 

      பின்னிரவு மணி 1. வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. எழுந்தவள் கைபேசியை எடுத்தாள். 'ச்சார்ச்' போட மறந்திருந்தாள். பேட்டரி இன்னும் 2 சதவீதம் மட்டுமே இருந்தது.

    மெல்ல எழுந்தாள். அறைக் கதவில் காதை வைத்து கவனமாகக் கேட்டாள். யாரோ நடமாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்கு வியர்த்தது. அம்மா தன்னை அனாதையாக்கிய முதல் நாளிலேயே இப்படியொரு ஆபத்தா.! மீத வாழ்க்கை என்னாகுமோ? இனி என்ன நடக்குமோ? என அவளின் மனம் பதட்டம் கொண்டது.

     பேச்சுக்குரல் கேட்க ஆரம்பித்தது. எந்த இடத்தில் என்ன இருக்கிறது என நன்கு தெரிந்த ஆட்கள்தான் போல இருந்தார்கள். ஆனாலும் அந்த குரலை அவளால் அடையாளம் காண முடியவில்லை.

    வீட்டு வரவேற்பறையில் அம்மாவின் புகைப்படம் உள்ளது. அதன் கீழ் அம்மாவின் அனைத்து நகைகளையும் உறவினர்கள் கொடுத்த உதவிப்பணத்தையும் வைத்திருந்தாள். 

     பொருட்கள் உடையும் சத்தம் கேட்கிறது. பக்கத்து அறை கதவை உடைத்து திறக்கிறார்கள். அடுத்து அவளது அறைக்குத்தான் வருவார்கள்.

    'படீர்'. எதைக்கொண்டோ கதவை அடித்தார்கள். கதவு திறந்துக் கொண்டது. ரேணுகா அப்படியே பின்னால் விழுந்தாள். ஒருவன் உள்ளே நுழைந்தான். கையில் நீண்ட கத்தியை வைத்திருந்தான். நேராக அவளது கழுத்தில் வைத்து அவளை வெளியே வரவைத்தான்.

    வரவேற்பறையில் ரேணுகாவை நிற்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளும் தன் அம்மாவிடம் செல்லப் போவதை நினைத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

    "ஐயோ...!!" அலறல் சத்தம். அவனது கத்தி கீழே விழுந்தது. ரேணுகா கண்களைத் திறக்கிறாள். முகமூடி அணிந்த இரு உருவங்கள் எதையோப் பார்த்து தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

    அவள் அம்மாவின் நகைகளைப் பார்க்கிறாள். அவை பணத்துடன் அங்கேயே இருந்தன. ஆனால், அம்மாவின் புகைப்படம் மட்டும் வைத்த வாக்கில் இல்லாமல், அவர்கள் ஓடிய திசையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

   இனி எப்போதும் ரேணுகா தான் அனாதையல்ல என்பதைப் புரிந்துக்கொண்டாள். அவள் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

#தயாஜி

2 கருத்துகள்:

  1. உடல் சிலிர்த்து விட்டது ; கதையின் இறுதிப்பகுதியில்.
    தத்வரூபமான கதையோட்டம்...

    இப்படிச் சில அம்மாகள் தெய்வங்களாய் மறைந்தும் நம்மோடு வாழ்கிறார்கள்!��

    உருக்கமான கதை தயாஜி! வாழ்த்துகள்����

    #கதை பின்னலில் அண்மையில் மறைந்த உங்கள் அத்தையின் நிழல் தெரிகிறது தயாஜி#

    பதிலளிநீக்கு
  2. உடல் சிலிர்த்து விட்டது ; கதையின் இறுதிப்பகுதியில்.
    தத்வரூபமான கதையோட்டம்...

    இப்படிச் சில அம்மாகள் தெய்வங்களாய் மறைந்தும் நம்மோடு வாழ்கிறார்கள்!🙏

    உருக்கமான கதை தயாஜி! வாழ்த்துகள்👏👏

    #கதை பின்னலில் அண்மையில் மறைந்த உங்கள் அத்தையின் நிழல் தெரிகிறது தயாஜி#

    பதிலளிநீக்கு