எனது வலைப்பூவில் இவ்வாண்டு தொடங்கி எழுதிய பதிவுகளில் இது 100வது பதிவு. கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத எண்ணிக்கை. இதில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்வியும் சந்தேகமும் உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் இருக்கவே செய்கிறது. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் சொல்வதென்றால் நம்மை நாமே பார்த்து ‘நீயா செய்தாய்…’ என தோல் தட்டிக்கொள்ளும் செயல்பாடுதான். பலரைப் போலவே எனக்கும் பல கனவுகளில்தான் இந்த 2020 தொடங்க வேண்டியதாக இருந்தது. அதற்குள் விபத்து!!! . ஒரு மாத மருத்துவமனை கட்டில். அதன் பிறகு வீட்டிலேயே முடங்க வேண்டியதாக்கிப் போனது. வாழ்ந்துக் கொண்டிருந்த அடுக்குமாடி வீட்டில் வசதி குறைவாக இருந்ததாலும், பார்க்கின்றவர்கள் பலரும் அந்த விபத்து!!! குறித்து நடத்திய விசாரணைகளாலும் இன்னொரு வீட்டில் தங்கவேண்டி வந்தது.
எல்லா வித தொடர்பு எல்லைகளுக்கும் அப்பால் சென்றிருந்தேன். தனிமையும் காயங்கள் கொடுத்த வலியுமே எனக்கு துணையாக இருந்தன. காலில் அடிபட்டு ஊன்றுகோலுடன் அறையில் நடந்துக் கொண்டிருந்தேன். முதலில் கை முட்டிகள் ஒத்துழைக்க மறுத்தாலும் சில தினங்களில் பழவிவிட்டது. ஆனால் தலையில் அடிபட்டிருந்ததால் அடிக்கடி மறதி என்னைத் தாக்கியது. திரும்பத்திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டும் குழம்பிக் கொண்டும் இருந்தேன். சில புத்தகங்களை பழைய வீட்டில் இருந்து ‘இல்லாள்’ எடுத்து வந்திருந்தாள். வாசித்த பக்கத்தையே திரும்பத்திரும்ப வாசிக்கவும் செய்தேன். ஒவ்வொரு முறையும் அதுவெல்லாம் எனக்கு புதிதாகவே தெரிந்தன. ‘இல்லாளைப்’ பார்த்து, ‘நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என கேட்டு அவளை கலங்கச் செய்த சம்பவங்களும் நடந்தது.
மருத்துவ உதவிகளாலும் சில பயிற்சிகளாலும் நிலமையை மெல்ல மெல்ல சரிகட்டிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாசித்த புத்தகங்கள் பற்றிய நினைவுகள் மங்கலாகவே இருந்தன. அதோடு நான் எழுதியிருந்த படைப்புகளை வாசிக்கையில் எந்த சிந்தனையில் எதன் பொருட்டு எழுதினேன் என புரிந்துக் கொள்ள முடியவில்லை. ‘எழுதியவன் இறந்துவிட்டான் என்ற கோட்பாட்டை’ அப்போதுதான் உணர்ந்தேன். நானே ஒரு வாசகனாக, விரும்பி வாசிப்பவனாக அவற்றை படித்துப் பார்த்து பாராட்டினேன். கேலி செய்தேன்.
நல்லவேளையாக வாசித்த புத்தகங்களைப் பற்றியும் சில அனுபவங்களைப் பற்றியும் எழுதியவற்றை தொடர்ந்து வாசிக்கையில் சில நினைவுகள் பிடிபட ஆரம்பித்தன. அதோடு தினமும் கனவில் சில உருவங்கள் தோன்றி பல விசித்திரங்களை நடத்திக் கொண்டிருந்தன. விசாரித்ததில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் வீரியம் அதிகம் என்றும் அது உள்ளுக்குள் பல ரசாயன மாற்றங்களை செய்யும் என்றும் தெரிந்துக்கொண்டேன். சில நாட்களில் அவை விழித்திருக்கும் போதும் வரத் தொடங்கின.
சில கருத்த உருவங்கள் அறை முழுக்க என்னை பின் தொடரச் செய்தன. ‘இல்லாள்’ ஒரு சாய் பாபா படத்தைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னாள். அதோடு வீட்டில் இருந்த சிலையொன்றையும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள். நாளடைவில் கருப்பு உருவங்கள் என்னுடன் சகஜமாக உரையாட ஆரம்பித்தன. எனக்கு நடந்தது விபத்து அல்ல, சூழ்ச்சி என பேசிக்கொண்டன. நடந்து முடிந்த சம்பவங்களை என் முன் திரைப்படம் போல காட்டத் தொடங்கின. யார் இதற்கெல்லாம் காரணம் என சில முகங்களைக் காட்டின. ‘கம்பியூட்டர் ஸ்கிரீன்’ போல ஒவ்வொரு முகத்திலும் கோடு கிழித்து அதன் மையத்தில் எதற்காக இப்படி செய்திருக்கக்கூடும் என எழுதினார்கள். காட்டிய முகங்களில் கணிதத்தில் வரும் கிட்டிய பத்து கிட்டாத பத்து போல, கிட்டாத காரணங்கள் கொண்ட முகங்களை ‘டிலேட்’ செய்து கிட்டிய காரணங்கள் கொண்ட முகங்களை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தின. அந்த அதிர்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தையில்லாமல் போனது. அவரவர் செயல்களுக்கான சுமைகளை அவர்களே சுமப்பார்கள் என என் தோல் தட்டி ஒருவர் அன்பாகப் பேசினார். எனக்கு மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த சுழற்சிக்கு சிறகசைத்த பட்டாம்பூச்சியாக நான் கூட இருந்திருக்கலாமோ என்று என்னை நானே சமாதானம் செய்துக் கொள்ள முயன்றேன். இவ்வளவு நேரம் சுவரையே வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது வீட்டில் உள்ளவர்களை அச்சப்படுத்தியது. அவர்களும் அவர்கள் விரும்பும் தெய்வத்திடம் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். கையெழுத்து கூட மனதிற்கு பரிட்சயம் அற்று இருந்தது. ஆனாலும் மனதில் தோன்றுவதை மறைவதற்கு முன்னதாகே எழுதிக் கொண்டேப் போனேன். எழுதி முடித்த பின் திரும்பத் திரும்ப அதனை வாசிக்கவும் செய்தேன். அவற்றை அப்படியே சேமித்தேன். சில நாட்கள் கழித்து மீண்டும் வாசித்ததில் அதில் எனக்கான செய்தி மட்டுமல்ல என்னை சுற்று உள்ளவர்களுக்கான செய்திகளும் இருப்பதாகப் பட்டது. அப்படியே சேமித்து வைத்தேன்.
‘இல்லாள்’ வேலைக்கு சென்று வருவதற்கு இரவாகிப்போனது. அவள் இல்லாத தனிமையில் என்னுடன் உரையாட வந்திருந்த கருப்பு உருவங்கள் மெல்ல மெல்ல வெள்ளை உருவங்களாக மாறி என்னை சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தன. பழைய சம்பவங்கள், நியாயங்கள், கோவம், பழி தீர்த்தல், ரகசியங்களை அம்பலபடுத்துதல், அடுத்து என்ன என்பது போன்ற பலவற்றைப் பற்றி உரையாடல் செய்தோம். முன்பு போல அந்த உருவங்கள் என்னிடம் கடினமான குரலில் பேசுவதில்லை. ஒவ்வொரு உரையாடல் முடியும் போதும், எனக்கும் உனக்கும் உள்ள தூரம் அன்பு மட்டுமே. அப்படித்தான் உனக்கும் மற்றவர்களுக்கு உள்ள தூரம் அன்பினால் நிரப்பு, என சொல்லி முடிப்பார்கள். அங்கிருந்து ஏனோ அன்பு என்னும் சொல் மீது எனக்கு அதீத காதல் தொற்றிக்கொண்டது. எல்லா இடங்களிலும் காற்று போல சூழந்திருப்பது அதுவாகத்தான் இருக்கிறது. காற்றே புகாத இடத்திலும் கூட அன்பு அதுவாகவே இருப்பதாகத் தெரிந்தது.
ஒவ்வொன்றையும் கடந்து வருவதற்கு என்னைச் சுற்று உள்ளவர்கள் அவர்களாகவே வந்து உதவ ஆரம்பித்தார்கள். உடைந்துப் போன கைபேசிக்கு பதிலாக அம்மா ஒரு கைபேசியை வாங்கிக் கொடுத்தார். மீண்டும் அதில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.
‘இல்லாள்’ கொடுத்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். தனியே அமர்ந்து வாசித்த கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன். அதில் எனக்கு எழுந்த கேள்விகளுக்கு சில வினாடிகளில் பதில் கிடைக்கவும் ஆரம்பித்தது.
இந்த சமயத்தில்தான் ‘இல்லாளுடன்’ பழைய வீட்டிற்கு
வந்தோம். அறை முழுக்க இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து தூசு தட்டி சுத்தம் செய்தேன்.
பால்கனியில் வளர்ந்து வந்த செடிகள் காய்ந்துவிட்டிருந்தன. அதனை வீசிவிடச் சொன்னார்கள்.
அதற்கு மனமின்றி தினமும் தண்ணீர் ஊற்றி அவற்றுடன் பேச ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் அவை
மீண்டும் துளிர்த்தன. புதிய விதைகளில் இருந்தும் செடிகள் முளைவிட்டன. அதில் அப்பா அம்மா
கொடுத்தனுப்பிய நித்தியக்கல்யாணி செடியும் அடக்கம். ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அவை
இரண்டாவது தலைமுறைத் தொட்டுவிட்டன.
பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இனி வாசித்த புத்தகங்கள் குறித்து பழையபடி சிறு குறிப்புகள் எழுத முடிவெடுத்தேன். அவ்வாறே மீண்டும் அவற்றை எனது ப்ளாக்கிலும் முகநூலிலும் பகிர ஆரம்பித்தேன். அவை சிறு குறிப்புகளுக்குள் அடங்காமல் வரத் தொடங்கின. கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், பத்திகள், வாசிப்பு அனுபவங்கள் என எழுதினேன். அவற்றில் சில இணைய இதழ்களிலும் சில பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றையும் எழுதி முடிக்கும் போது மனதில் அத்தனை மகிழ்ச்சி எழுந்தது. வாசித்தவை குறித்து முகநூலில் நேரலையாகவும் பேசி வருகிறேன்.
இன்று பார்க்கையில், இந்த 2020-ல் மட்டும் வலைப்பூவில் 99 பதிவுகள் எழுதிவிட்டதை கவனித்தேன். இதில் எது சிறப்பு எது தேவையற்றது என்கிற கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல், என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை தொடர்ந்து செய்து வருகிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுங்கதைகளை வாசித்தவர்கள் அதனை புத்தகமாக தொகுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நான் நேசிக்கும் எழுத்தாளர் ஒருவரும் குறுங்கதைகளை வாசிக்கக் கேட்டார். வாசித்தவர், சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார். அதிஷ்டமிருந்தால் அவரே கூட அந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதலாம் என நான் என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டேன். சொல்லும் போதே அது அத்தனை அழகாக இருக்கிறது. யார் அந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதும் முன்னுரையில் இருந்து தெரிந்துக் கோள்ளலாம். இதற்கிடையில் மனம் கவர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் உடன் மின்னஞ்சல் வழி அவ்வபோது பேசி வருகிறேன். மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.
2009-ல் எழுதத் தொடங்கிய வலைப்பூ 2018-ல் எதுவும் எழுதப்படாமல் இருந்தது. மற்ற ஆண்டுகளில் அவ்வபோது எழுதிவந்திருந்தாலும், 2012-ம் ஆண்டு முழுக்கவே 71 பதிவுகள்தான் செய்திருக்கிறேன். அப்படி திரும்பிப் பார்த்த பிறகு இந்த ஆண்டு பல இன்னல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இடையில் 100வது பதிவாக இதனை எழுதிக் கொண்டிருப்பதில் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நான் எழுதுபவற்றை எனக்கும் என மனதிற்குமான உரையாடலாகப்
பார்க்கிறேன், அவ்வுரையாடலை கொஞ்சம் சத்தமாகவேச் செய்கிறேன். அவைதான் நீங்கள் வாசிக்க
கிடைக்கிறது. ஏனெனில் எனக்கும் உங்களுக்கும் இடையில் இருப்பது அன்பு ஒன்றுதான்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக