'கண்மணி அன்போடு காதலன்' கே.கவி நந்தன் இயக்கிய டெலிமூவி. நேற்றைய இரவு கண்மணியோடும் காதலோடும் கடந்தது.
தலைப்பிற்கு ஏற்ற படம். சொல்லப்போனால் தலைப்புதான் முழு கதையுமே. ஆண்கள் தொட்டாலே மயங்கும் விழுந்துவிடும் விசித்திர நோய் கொண்டிருக்கிறார் நாயகி. அதனால் அவருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது. தன் உடல் பருமனையும் அழகற்ற முகத்தையும் காரணம் காட்டிய காதல் தோல்வியால் மனமுடைந்துப் போகிறார் நாயன். திருமணம் எட்டா கனிதான் என நினைத்து அதனை வெறுக்கிறார்.
இப்படி இருவித மனப்போக்கு கொண்டவர்கள் சந்திக்கிறார்கள். நட்புகொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமல் காதல் இருவர்க்குள்ளும் நுழைகிறது.
நாயகன் நாயகியின் நோய்மையைப் புரிந்துக்கொள்கிறார். அவளுடன் வாழ்வை பகிர முடிவு செய்கிறார்.
ஆண்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்த நாயகி, நாயகனின் குழந்தைத்தனத்தாலும் அன்பாலும் ஈர்க்கப்படுகிறார்.
நாயகியின் ஆசைகளை நாயகன் நிறைவேற்றி பார்வையாளர்களையும் கவர்ந்துவிடுகிறார்.
இருவர்க்குள்ளும் இருக்கும் காதல் மெல்ல மெல்ல பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொழுது துரதிஷ்டவசமாக இருவர்க்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது.
மீண்டும் தனது தாழ்மையுணர்ச்சியால் நாயகன் ஒடிந்துப்போகிறார். நாயகியிடமிருந்து ஒதுங்குகிறார்.
அவர்களின் காதல் கைகூடியதா, காதலனும் கண்மணியும் சேர்ந்தார்களா என்பதுதான் மீதி கதை. சொல்லப்போனால் ஒரு சிறுகதை வாசித்த திருப்தியை உணர முடிந்தது.
நாயகன் நாயகி அறிமுகம். அவர்களின் எதிர்ப்பார்ப்பு. காதல் மலரும் தருணம். திடீர் சிக்கல். மீண்டும் சேர்வார்களா என்கிறா ஆவல் என கணக்கச்சிதமாகக் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
நாயகனின் பெற்றோர்கள், நாயகியின் அம்மா ஆகியோரின் நடிப்பும் வசனங்களும் மிக எதார்த்தம். நாயகனின் கடையில் வேலை செய்யும் உறவுக்காரப் பையன் கவனிக்க வைக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு அவரிடம் நன்றாகவே தெரிகிறது.
அடுத்து நாயகியின் தோழி. அவரின் கதாப்பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தேவையில்லாத பாத்திரம் போல காட்டப்பட்டாலும், இவர்தான் முக்கிய திருப்புமுனைக்கு காரணகர்த்தா.
நாயகி தன் கதாப்பாத்திரத்தை நன்கு உணர்ந்து தன்னை வெளிகாட்டியுள்ளார்.
வர்மன் இளங்கோவனின் இசை, காட்சிகளில் லயிக்க வைக்கிறது.
இயல்பாகவே, குறையுள்ள கதாப்பாத்திரத்தை வைத்து அழவைக்கும் காட்சிகளையும் சிரிக்க வைக்கும் காட்சிகளையும் வருந்தவைக்கும் காட்சிகளையும் எடுத்து விடலாம். ஆனால் அதற்கு அந்த கதாப்பாத்திர நடிகர் பாத்திரத்துடன் ஒன்றிப்போக வேண்டும். இல்லையென்றால் அவர் அழுகையில் நாம் சிரிப்போம். நம்மை அழ வைக்கவே அவர் சிரித்தும் வைப்பார். காதலன் பாத்திரத்தில் நடித்திருக்கும் குபேன் மஹாதேவனுக்கு ஒரு பெரிய சலியூட் போடலாம். எந்த வகையிலும் நாயகன் மீது பொய்யான கழிவிரக்கத்தை காட்டாமல் படமாக்கிய இயக்குனரைக் கட்டியணைத்துக் கை குலுக்கலாம்.
தோய்வில்லாத காட்சியமைப்பு, தகுந்த நடிகர்கள், சரியான திரைக்கதை, உருத்தாத இசை என தேவையானது தேவனையான அளவில் போடப்பட்டுள்ள டெலிமுவி இந்த ' கண்மணி அன்போடு காதல்.
நம் கலைஞனின் படம், என்பதைத் தாண்டியும் திறைமைசாலியின் படைப்பு என்று முன் நிற்கிறது.
இயக்குனர் கே.கவி நந்தன் |
நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம். ரசிக்கவும் சிரிக்கவும்
சக மனிதர்க்கும் மனமிருக்கு என்பதை புரிந்துக்கொள்ளாலாம்.
படக்குழுவினர்க்கு பாராட்டுகள். தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக