என் தேவதை நீ
என்னால் துயர்படுகிறாய்
என் அதிசயம் நீ
எனனால் மனம் கணக்கிறாய்
என் இளவரசி நீ
என் பொருட்டு அடையாளம்
மறைக்கிறாய்
என் வாழ்நாளுக்கான வரம்
நீ
ஒரு தரமும் அப்படி ஆகிடாத
உன் வாழ்நாள் சாபம்
நானா
புரியவில்லை அன்பே
நினைத்துப்பார்ப்பது எல்லாமே
எளியதொரு வாழ்வையைத்தானே
எளிதிலும் எளிய வாழ்க்கை
மிக மிக எளிய வாழ்க்கை
நான்சுவர் மேலொரு கூரையும்
நாளுக்கு மூன்று முறை உணவும்
நாட்களுக்கான ஆடைகளும்தான்
அதுவும் கூடாதென்றால்
நான்சுரில் ஒன்றை இடித்துக் கொள்கிறேன்
மூன்சுவர் போதுமே
கூரையில் கூட ஓட்டைகளில் நட்சத்திரம்
பார்த்துக்கொள்கிறேன்
மூவேளை உணவில் எனக்கு
ஒருவேளையே போதும்
ஆனால் ஒருவேளையும்
நீ
இதில் பங்கெடுக்கக்கூடாது
அன்பே
மாளிகையில் வாழவேண்டியள்
நீ
வான் தொடும் கூரைகளுக்கு
சொந்தக்காரி
நீ
ஆறுவேளையும் அறுசுவை
உணவுகள் வாய்க்கப்படவேண்டியவள்
நீ
சுமக்கும் சுமைகள் போதாதென்று
நினைவுகளை அழித்தவனின்
சுமையையும்
இன்று உன்மீது சுமத்திவிட்ட
பாவி
நான்
நீ நேசிக்கும் இவன் மீது
ஏன் இவர்கள் அச்சம் கொள்கிறார்கள்
என் வாழ்வின் ஏன்
இப்படியொரு துயர் நாடகத்தை
அரங்கேற்றிவிட்டார்கள்
இயல்பாய் இருப்பது என்ன
அத்தனை குற்றமா
எதார்த்தமாய் இருப்பது என்ன
அத்தனை குற்றமா
நீயாவது சொல்
அன்பே
அப்படியென்ன இவர்களுக்கு
பயம் காட்டிவிட்டேன்
நீ சொல்லிவிட்டதால்
எத்தனையோ ரகசியங்களை
உள்ளுக்குள் புதைத்துவிட்டவனை
மண்ணுக்குள் புதைக்க
ஏன் நினைக்கிறார்கள்
உழைப்பையும் அன்பையும் தவிர
என்னால் ஏதும் கொடுக்க
முடியாதபோது
அத்தனையையும் மொத்தமாக
பெற்றுக்கொண்ட பின்
இந்த சக்கையை ஏன்
சாகடிக்கப் பார்க்கிறார்கள்
நீ சொல்வது எப்போதும்
சரியாகவே இருக்கிறது
அன்பே
நேரமெடுத்து யோசிக்கையில்
நான் பேசிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் பிரசுரித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் உண்மை முகத்தை ஊருக்குக்
காட்டிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் புகாரளித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
மொத்தத்தில்
நான் வளர்ந்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
வளர்தல் அத்தனை ஆபத்தா சொல்
ஒருவேளை அவர்கள் கண்டுகொண்டிருக்கலாம்
இழப்புகளை சந்தித்தவனிடம்
யார் குறித்தும் அச்சமிருக்காது
அன்பே
என் நம்பிக்கைப்போல
உனக்காகத் தொடங்கிய இந்த
வரிகள் கூட
எங்கெங்கோ சென்றுவிட்டன
எல்லாவற்றுக்கும் மேலாக
நீயும் வருந்துகிறாய் என்பதில்
என் சாத்தானில் கொஞ்சம்
கொம்புகள் முளைவிடும்
அடையாளக்குறி தென்படுகிறது
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக