Pages - Menu

Pages

ஜனவரி 09, 2020

அன்பு செய்யவா ஆட்களில்லை….



       புத்தகங்கள் எனக்கு எப்போதும் விருப்பமானவை. ஒவ்வொரு முறை மனம் சோர்வடையும் போதும் எந்த பத்தகத்தையாவது எடுத்து புரட்டிக்கொண்டே இருப்பேன். அதன் வாசனை, அதன் மெல்லிய அட்டை, அதன் வண்ணம், எழுத்துகளின் அணிவகுப்பு என ஒவ்வொன்றாக கவனித்துக் கொண்டே பக்கங்களைப் புரட்டுவேன்.

       அப்போது சேர்ந்திருக்கும் சோர்வையும் மன அழுத்ததையும் அது கொஞ்சம் கொஞ்சமாக் குறைக்கும். இப்படியா எப்போதோ நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தேன்.

      கொஞ்சம் ஏளனமாகத்தான் பார்த்தார், குறுக்கு மூளை ஏதோ வேலை செய்திருக்க வேண்டும். சட்டென இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்றார். “புக்கை புரட்டுனா ஸ்ட்ரெஸ் குறையுமா? இன்னும் கூடதான் வரும்” என்றார்.

     அதனை சொல்வதற்கு அவர் தகுதியானவர்தான். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிகம் படித்தவர், அதற்கு ஏற்ற சம்பாத்தியத்தில் வேலை செய்பவர். அப்போதைய எனது உணவிற்கு அவர்தான் பணம் கட்டபோகிறார்.

     எனக்கு சிரிப்பு வந்தது. ஏன் சிரிக்கற என கேட்டுக்கொண்டே பதட்டமானார். தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரையும் எடுத்தார். விலை உயர்ந்த லைட்டர். சட்டென லைட்டரை பிடிங்கிவிட்டேன். அவர் கோவமாகிவிட்டார். லைட்டரை என் காற்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டேன். கைகளைக் கட்டிக்கொண்டேன். கால் மேல் கால் போட்டுக்கொண்டு. அவரைப்போலவே சிரிக்கலானேன்.

     அவருக்கு மேலும் பதட்டமானது. நான் ஏதோ செய்ய போகிறேன் என அவருக்கு தெரிந்திருந்தது. அவருக்கு இப்போதைக்கு அந்த லைட்டர் கிடைக்காது. சுற்றிலும் பார்த்தார். (முன் குறிப்பு – உணவகங்களில் புகைபிடிக்க தடை கொண்டுவரப்பட்டதற்கு முந்தைய சம்பவம்.) சில மேஜைகள் தள்ளி ஒருவர் சிகிரெட்டை புகைத்துக்கொண்டே உலகத்தின் தான் எத்தனையாவது மனிதனாக இருக்கக்கூடும் என வெற்றுச்சுவரைப் பார்த்து எண்ணிக்கோண்டே இருந்தார். நண்பர் எழுந்துச் சென்றார். எண்ணிக்கொண்டிருந்த கணக்கில் குறுக்கிட்டு, தனது ஒரு சிகிரெட்டை நீட்டினார். புகைப்பிடிப்பவர்களே உரிய உடல் மொழி போலும். அவர் அதனை புரிந்துக்கொண்டார். அந்த சிகிரெட்டை வாங்கி தன் சிகிரெட்டுடன் இணைத்தார். இரண்டுலும் புகை வருவதை உறுதிப்படுத்திக் கொண்டார். சிகிரெட்டை நண்பரிடம் நீட்டினார்.  பணக்காரனுக்கு சிகிரெட் பற்ற வைக்க நெருப்பு தந்துவிட்ட மகிழ்ச்சியில் அவருக்கு புல்லரித்திருக்க வேண்டும். முன்பு தான் செய்துக்கொண்டிருந்த கணக்கிற்கு விடை கிடைத்துவிட்டது போல் பாதி வாயில் சிரித்தார்.

    நண்பர் பழைய இடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டார். சில இழுப்புகளின் புகை அவரின் நுரையீரல் முழுக்க சூடேற்றி வெளிவந்தது. பதற்றம் குறைந்தது. நிதானமானார். அவர் பேச ஆரம்பிக்கும் முன்பாகவே நான் ஆரம்பித்தேன்.

    “என்னதான் விலை உயர்ந்த லைட்டர் உங்ககிட்ட இருந்தாலும் இப்போதைய தேவைக்கு உங்களுக்கு தேவை ஒரு கங்கு நெருப்பு தான?”

“அப்படியெல்லாம் இல்ல..?”

   எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. நெருப்பை பங்கு போட்டுக்கொண்ட சிகிரெட் நண்பரைப் பார்க்கும் படி செய்கை செய்தேன். பார்த்தார். அதிர்ந்தார்.

      அழுக்கு ஆடையுடன் தலை சொரிந்துக்கொண்டு சொந்தமாக எதையோ பார்த்து யார் கொடுத்த சிகிரெட்டையோ புகைத்துக் கொண்டிருந்தார் அந்த நபர். எனக்கு அவரை நன்றாக தெரியும். ஒவ்வொரு முறையும் காருக்கு பெட்ரோல் நிரப்ப செல்லும் இடத்தில் அவரைப்பார்ப்பேன். எல்லொரிடமும் ஒரு வெள்ளி கேட்டு தலையை சொறிந்துக் கொண்டிருப்பார். யாருக்கும் தொல்லை கொடுக்காதவர்.

     இப்போது பேச்சை தொடர்ந்தேன்.  அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி எல்லாம் அமைகிறது. உங்களுக்கு புகைப்பிடிப்பது எப்படி உங்களை ஆசுவாசப்படுத்துமோ எனக்கு அப்படி புத்தகங்களைப் புரட்டுவதும் படிப்பதும். ஆனால் இதில் ஒரு சிக்கல் தான் இருக்கிறது. எங்களைப்போன்றவர்களால் உங்களைப் புரிந்துக் கொள்ள முடியும். உங்களைப்போன்றவர்களால் எங்களை எப்போதும் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

     என்ன இருந்தாலும் மேஜையில் இருக்கும் விலை சீட்டிற்கு பணம் கட்டப்போகின்ற பெரிய மனிதர் அவர். அதிகம் அவர்களுக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்லுதல் கூடாது. ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்கவும் கூடாது.

   அவருக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. நல்லதுதான் சிலருக்கு  உடனே புரிந்துவிட்டால் எப்போதோ நம்மைவிட்டு பிரிந்து போயிருப்பார்கள்.

    புத்தகங்களை நேசிக்கும் எனக்கு என்னுடைய சொத்துகளாக இருப்பது , சேருவது, சேர்ந்துக் கொண்டு இருப்பது எல்லாம் புத்தகங்கள்தான். அறை முழுக்க புத்தகங்கள் இருந்தாலும் வாங்காமல் வந்த புத்தகங்கள் கொடுக்கிற வலி அதிகம். அதான் இவ்வளோ இருக்கே… அதில் எதையாவது எடுத்து படிக்க வேண்டியதுதானே என அவளும் கேட்கிறாள். அதெப்படி முடியும் இதென்ன சப்பாத்தி இல்லாட்டி பூரி சாப்டுக்கோ என  சொல்வது போல சாதாரணமா என்ன?

    தற்சமயம் பல நண்பர்கள் புத்தகங்களை வெளியீடு செய்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ புத்தக திருவிழாவிற்காகவும், மலேசியா வழக்கமான விற்பனைக்காகவும். முகநூலில் பார்க்கையில் அத்தனை ஆனந்தம். 

    அட்டைப்படங்கள் எழுத்துகள் என ஒவ்வொன்றும் ஓராயிரம் கற்பனைகளை தூண்டிவிடுகிறது. இரண்டு முறை தமிழகத்தில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு சென்றதாய் நினைவு. அது உண்மையில் தேவதைகளுக்கு மத்தியில் நடப்பது போல உணர்வைக் கொடுக்கும். யாருக்குத் தெரியும் சொர்க்கத்தின் வாசனை அப்படியாகக் கூட இருக்கலாம். பல நண்பர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் என கொண்டாட்டமாகவே அன்றைய நாட்கள் அமைந்தன. ஒரு முறை வல்லினம் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களில் எனது ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

   ஆலமரங்களில் நிழலில் கூட சில புற்களுக்கு சூரிய ஒளி படுவது போல அப்புத்தகங்கள் எனக்கு மிளிர்ந்தன.

   எப்படியும் (2019) இவ்வாண்டு இறுதியில் புத்தகம் வெளியிடலாம் என நண்பர்களுடன் பேசி முடிவெடுத்தோம். அதற்கான யோசனைகளையும் பகிர்ந்தோம். எல்லாம் கூடி வரக்கூடிய கால இடைவெளிக்குள்ளே நுழைவதற்கு முன்; எதிர்ப்பாராமல் நடந்தது அந்த சம்பவம். 
   
    சிலர் என்னை கடத்த முயன்று வேனில் ஏற்றி … அதில் அடியும் உதையும் வாங்கி.. கதவு மூடாமல் இருக்க காலை அதில் வைத்து… ஓடிக்கொண்டிருக்கும் வேனில் இருந்து கீழே குதித்து… கையில் அவர்கள் மாட்டியிருந்த கைவிலங்குடன்… சில மீட்டர் வரை தார்ச்சாலையில் இழுக்கப்பட்டு.. திமிரி விழுந்து… உடலில் பல இடங்களில் காயம்… ரத்தம்.. தலையில் இரும்பால் அடி.... மண்டைக்குள்ளே சில இடங்களில் ரத்தக்கசிவுகள்.. காலும் கையும் உடைந்து.. நினைவுகள் பிறழ்ந்து.. ஒரு மாதம் மருத்துவமனையில்… மூன்று மருத்துவமனை மாறினேன்…. நினைவுகளும்  கையில் இருந்த எல்லாமும் தொலைந்ததால்… யாரையுமே தொடர்பு கொள்ள முடியாமல்…. தலையில் அடிபட்டதால் ஆப்ரேசனை தவிர்ப்பதற்காக பல மருந்துகள்.. எப்போதும் மருந்தின் போதை.. நெஞ்சில் அவன் உதைத்த பூட்ஸ் அச்சு.. போதும்; என்னால் அழுகையை அடக்கிகொண்டு மெற்கொண்டு செல்வதற்கு இயலவில்லை. நான் பலவீனமானவன். 

     ஆனால் மருத்துவர்களின் குறிப்புகள் மற்றும் ஆச்சர்யங்களில் சொல்கிறார்கள்நான் அற்புதன். அத்தனை அதியங்கள் என் உடல் முன்னேற்றத்தில் காண்பதாக சொல்கிறார்கள்.

    புத்தகம் வெளியிடும் கனவு கலைந்தது. உண்மையில் என்னால் அந்த நிலையில் எதுவும் செய்ய முடியாது என்பதை எல்லாம் முடிந்த பிறகு வரவுகளின் தயக்கத்தால்,  செலவாக நான் முந்திக்கொண்டு சொல்லிவிட்டேன். இப்போது யாருக்கும் குற்ற உணர்ச்சி இருக்காது. 

      இடைபட்ட காலங்களில் பல புத்தக வெளியீடுகள் நடந்தன. மழைச்சாரல் இலக்கிய குழு மூலம் களரி இதழுக்கு கொடுத்திருந்த மலேசிய கவிஞர்களின் கவிதைகளில் என் கவிதையும் பிரசுரமாகியிருந்தது. அதன் வெளியிட்டிற்கு செல்ல முடியவில்லை. வல்லினம் குழுவில் நிகழ்ச்சிக்கும்  புத்தக வெளியீட்டுக்கு அழைப்பும் புத்தகமும் கைக்கு எட்டிடவே இல்லை. ஒரு வேலை அந்த சம்பவத்தில் நான் இறந்திருந்தால், நிச்சயம் குழுவில் இருந்து மலர் வளையம் வந்திருக்கும் . சரி விட்டுவிடலாம், ஆயிரம் சிக்கல்களின் மத்தியத்தை மரணம் மட்டுமே நிவர்த்தி செய்யும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் மிக சாதாரணமானவன் நான் எப்படி அதனை மாற்றுவேன். மறந்தே போனேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. அவர்களுடன் இல்லையா அவர்களில் இல்லையா?. மறந்துப்போன  நினைவுகள் திரும்ப கிடைப்பது எத்தனைப் பெரிய சாபம் பாருங்கள். கூடி மகிழ்ந்ததுதான் முதலில் வருகிறது. அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது; இல்லை, அதன் பிறகு அப்படி ஏதும் நடக்கவில்லை. என அதன் பின் நடந்த பிரிவுகள் என்பது ஆறிப்போன தாழும்புகளை மீண்டும் முதலில் இருந்து கிழித்துக்காட்டி. நினைவு இருக்கிறதா இப்படித்தான் கிழிந்தது என சொல்லிச்செல்வது போலானது. ஆனால் நான் இறந்திருந்தால் நான் விரும்பி அணியும் 'எழுத்துகள் பொறித்த' சட்டையை என் மீது போர்த்தியிருப்பார்கள். உயிரோடு வந்துவிட்டதால்…..

     இன்னொருவர் நன்றாக பேசிக்கொண்டும் பழகிக்கொண்டும் இருந்தார். ஏனோ அவரின் முகநூல் புறக்கணிப்பு கொஞ்சம் அதிகம் வலித்தது. அது புறக்கணிப்பா அல்லது அவரவருக்கே உள்ள எச்சரிக்கையா என பிடிபடவில்லை. அவரின் புத்தக வெளியீட்டுக்கும் அழைப்போ, ‘வா’ என்கிற ஒற்றைச்சொல்லும் கூட  எதிலிருந்து வரவில்லை. ஆனாலும் மனதில் போகவேண்டும் என தோன்றியது.  அப்போது யாரையும் பிடித்துக்கொண்டு நடக்கும் அளவிற்கு உடலில் முன்னேற்றம் இருந்தது. வெளியீட்டிற்கு சென்றேன். போக வேண்டும் என தோன்றியதே தவிர புத்தகம் வாங்குவதற்கு பணம் தேவை என்பதை மறந்திருந்தேன். (இப்படியாக எதையெல்லாம் மறந்துப்போயிருக்கிறேன் என நினைவுகளில் இல்லை!!). அழைத்துச் சென்று உதவிய நண்பர் கையில் பணத்தை கொடுத்து உதவினார். அவருக்கு நன்றாக தெரியும் ஆறு மாதங்களுக்கு என்னால்வேலைக்கு  செல்ல முடியாது. அதுவரை அந்த பணம் அவருக்கு திரும்பக் கொடுக்க முடியாது. பார்க்கலாம் இடைபட்ட காலத்தில் கூரையைப் பிய்த்துக்கொண்டு லட்சுமி கொட்டாமலா போய்விடுவாள். அப்போது கூடுதல் பணமாகவே கொடுத்துவிடலாம். ஆனால் வீட்டுக்கூரை சிமண்டுகளால் ஆனது. லட்சுமிக்கும் கஷ்டம்தான்.

      கடைசி வரை நிகழ்ச்சியில் அவர் என்னை பார்க்கவில்லை. நலம் விசாரிக்கவில்லை. ஆனால் என் நற்காலி முன் இருக்கைகளில் வந்து அமர்ந்தவர்களுக்கு வருகைக்கான நன்றியும் வாழ்த்துகளும் கூட அவரால் என்னை பார்க்காமலேயே சொல்ல முடிந்ததுதான் ஆச்சர்யம். நல்லது. எல்லாம் நல்லபடியாக நடந்தது. சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். பேசினார்கள். சம்பவம் குறித்த வருத்தத்தைப்ப் பகிர்ந்துக் கொண்டார்கள். அங்கிருந்த எனக்கு விருப்பமான கரிப்பாப்பை (சமோசா) சாப்பிடக் கூட முடியாத ஆளாய் கையில் புத்தகத்தையும் மனதில் பாரத்தையும் சுமந்துக் கொண்டு நடந்தேன்.

   யாரையும் குற்றம் சொல்லவோ, அவமானப்படுத்தவோ இதனை எழுதவில்லை. எனக்கு புத்தகங்களைப் பிடிக்கும் அதற்கானவர்களை நேசிக்கிறேன். திரும்ப அவர்கள் நம்மை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மை உற்சாகப்படுத்திய புத்தகத்தை திரும்பவும் மூடித்தானே வைக்கிறோம்.

    வாழ்வு அப்படித்தான் எது வேண்டுமானாலும் நடக்கும். எது வேண்டுமானாலும் நடக்காமல் இருக்கும். இந்த சுழலுக்கு மத்தியில் சூதானமாக இருந்துக் கொள்ள பழகுவதுதான்  சாதனை. எனக்கு நடந்த இந்த சம்பவம் எனக்கு நெருக்கமானவர்களை தூரமாக்கியது;எனக்கு தூரமானவர்களை நெருக்கமாக்கியது. மொத்தமாய்  எல்லோரையுமே என் அன்பிற்கானவர்களாய் மாற்றியது.

    வானிலிருந்து எப்போதும் குளிர்ந்த நீர் மட்டுமா தலையில் விழுந்துக் கொண்டிருக்க போகிறது. ஒரு நாள் எரி நட்ச்சத்திரம் கூட வந்து விழுந்துவிடலாம். நம்மை சுமக்க வந்த நான்கு பேரும் நம்மோடு புதைக்கப்படுவார்கள். அதற்கு முன்பாக . நான் இனி வரும் காலத்தையாவது எனக்காக என் அன்பிற்காக எனக்கு பிடித்த எழுத்திற்காக வாழ நினைக்கிறேன் ஆக முந்தைய என்னை மன்னித்துவிடுங்கள் அதுதான் முந்தைய உங்களையும்  மன்னிக்க எனக்கு ஏதுவாக இருக்கும். நன்றி.

-          தயாஜி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக