Pages - Menu

Pages

ஜனவரி 16, 2020

#கதைவாசிப்பு_2020_8 'கிருஸ்ணபிள்ளை'


#கதைவாசிப்பு_2020_8
கதை  கிருஸ்ணபிள்ளை
எழுத்துஅம்ரிதா ஏயெம்
புத்தகம்விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் 
(சிறுகதை தொகுப்பு)




       இச்சிறுகதை தொகுப்பில் வந்திருக்கும் 3-வது சிறுகதை. ‘கிருஷணபிள்ளை’. இப்பெயரை இரண்டாக பிரிக்கலாம். கிருஷ்ணன் என்றால் கடவுள் என்றும் பிள்ளை என்றால் மகன் என்றும் நினைத்துக்கொள்வோம். ஆக இது கடவுளில் குழந்தை என இப்போது புரிந்துக் கொண்டோம். சரியா? நாம் யாரையெல்லாம் கடவுளின் குழந்தை என்போம்? ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளை, தாய் தந்தை யாரென அறிந்திடாத குழந்தைகளைத்தானே கடவுளின் குழந்தைகள் என்போம். எத்தனை முரண். கடவுளில் குழந்தை என்றாலும் அது சக்தி வாய்ந்த குழந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை இவ்வாறான குழந்தைகளாகவும் இருக்கலாம்.

    ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ தொகுப்பில் இதுவரை படித்த மூன்று கதைகளிலுமே கதைக்கும் அதன் தலைப்பிற்கும் அத்தனை பொருத்தமாக அமைந்துவிட்டிருக்கிறது.

    இக்கதை நேரடியாக சிறுவன் ஒருவன் தன் நிலமையைச் சொல்லிச்செல்வதாக அமைந்திருக்கிறது.

   கிருஸ்ணபிள்ளை , விடுதி உணவகத்தில் வேலை செய்யும் பத்து வயது சிறுவன். தொடக்கமே அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் வழி தாம் எவ்வாறான சூழலில் வாழும் சிறுவன் என்பதை வாசகர்கள் புரிந்துக்கொள்ள முடிகிறது. 

    இங்கும் பல இடங்களில் சிறுவர்கள் வேலை செய்வதைப் பார்க்கலாம். கூடுதலாக அச்சிறுவர்கள் அவர்களுக்காக அல்லாமல் வேறு யாருக்காகவோ வேலை செய்பவர்களாக இருப்பார்கள். தனக்கென்று குடும்பமோ கல்வி அறிவோ கிடைக்க பெறாதவர்கள். ஒரு ‘சின்டிகேட்’ இருக்கிறது. ஆதரவற்ற இடங்களில் இருந்து பிள்ளைகளைத் தத்தெடுக்கிறார்கள். அல்லது வேறு ஏதோ வழியில் பிள்ளைகளை கடத்தி வருகிறார்கள். அவர்களுக்கான அடையாளங்களை அழிக்கிறார்கள். அடி உதையில் அந்த பிள்ளைகள் அடிமைகளாக ஆகிவிடுகின்றார்கள். அவர்களிடம் சில பொருட்களை கொடுத்து விற்பனை செய்ய அனுப்புகிறார்கள். அவர்களும் தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை அப்படியே சந்திக்கின்றவர்களிடம் ஒப்புவித்து கருணை மழையை பொழிய வைக்க முயற்சிப்பார்கள்.

“அப்பா செத்துட்டாரு”

“அம்மாக்கு கேன்ஸர்”

“வீட்டுல கஷ்டம்”

“நான் தான் ஊதுபத்தி சாம்பராணி வித்து குடும்பத்தை பார்த்துக்கறேன்”    

“அக்கா ப்ளீஸ் கா சாப்ட கூட காசு இல்லக்கா…”

“ஸ்கூலுக்கு போறேன், பார்ட் டைம்ல ஜாகன் விக்கறேன்”

      இப்படியாக தாங்கள் அடி வாங்கி மிதி வாங்கி பயந்து பேசிய வார்த்தைகள் எல்லாம் கொஞ்ச நாளில் அவர்களுக்கு பழக்கமாகிவிடுகிறது. அதில் பிள்ளைகளின் சம்பாத்தியம் முழுக்க அவர்களை கண்காணிக்கும் கும்பலுக்கு போகிறது. இருந்தும் இவர்களுக்குக் கொடுக்ககூட ஊக்கத்தொகை இந்த தொழிலில் அவர்களை மேலும் திறன் படசெய்ய வைக்கிறது.

      குறிப்பிட்ட காலத்திற்கு பின், அந்த பிள்ளைகள் இளைஞர்களாகி இதைவிட சில மோசமான வழிகளை த்ததம் வருமானத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

       அது ஒரு புறம் இருக்க, இவர்கள் சொல்லும் போலி வார்த்தைகள் எல்லாமே உண்மையாகவே சில பிள்ளைகள் சொல்லுகிறார்கள். அவர்களின் கெட்ட நேரம், போலிகளின் எண்ணிக்கைகளால் இவர்கள் குரல் எடுபடுவதில்லை. தக்க உதவிகளும் சரியான சமயங்களில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

    அப்படியான உண்மை குரல் கொண்ட பிள்ளைகளில் ஒருவன் தான் இந்த கிருஸ்ணபிள்ளை.  தான் பிறந்த அதே நாளில்தான் தனது அப்பாவும் 153 பேர்களில் ஒருவராக  கத்தியில் குத்தப்பட்டு இறந்திருகிறார்.

    அம்மாவின் மறுமணத்தில் கிடைத்த அப்பாவும் போதையில் யாரையோ கத்தியால் குத்திவிட்டு போய்விட்டார். குடும்பத்தைக் காப்பாற்ற அம்மாவும் வெளியூர் வேலைக்குச் செல்கிறார். கிருஸ்ணபிள்ளைக்கு பாட்டி மட்டுமே தனக்காக இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அம்மாவிடம் இருந்து எந்த கடிதமும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லையா  கிடைக்காமல் செய்துவிட்டார்களா என்பதை புரிந்துக்கொள்ள முடியாத  வயதில் இந்த பிள்ளை என்னதான் செய்யும்.

    ஒரு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருக்க என்னென்ன காரணங்களைச் சொல்லுவான்?

    ஒரு நாள் விடுப்பு என்றால், இருக்கவே செய்கிறது ‘வயிற்று வலி’. இதனை சொல்லிவிட்டால் பெரிதாக எந்த அடையாளத்தையும் காட்டவேண்டிய அவசியம் இருக்காது. நாமே நம் வயிற்றில் கையை வைத்துக் கொண்டு நம்பவைத்துவிடலாம். ஆனால் கிருஸ்ணபிள்ளைக்கு அப்படி இல்லை.

    பாடநேரத்தில், துப்பாக்கி வேட்டுசத்தம் கேட்கிறது. கூரையில் ஏதோ பட்டு ஓடு உடைத்து நண்பனின் தலையில் விழுகிறது. அடுத்தது சக மாணவனின் காலில் ஏதோ வெடித்து இரத்தம் தெரிக்கிறது. அதுவெல்லாம் பிள்ளைக்கு பீதியை கொடுத்து பள்ளிக்கூட பக்கமே போகாமல் ஆக்குகிறது.

     கதையின் நிறைவாக யாரெல்லாம் கிருஸ்ணபிள்ளையாக இங்கே இருக்கிறார்கள் என சொல்லும் அந்த சிறுவனின் வார்த்தைகள் அவன் மீது இரக்கத்தை மட்டுமல்ல, இரக்கமற்ற போரின் விளைவுகளையும் சிந்திக்க வைக்கிறது.

    தொலைக்காட்சி பெட்டிகளில் போரையும் அதன் வேட்டு சத்தங்களையும் கேட்டு கடந்துவிடக்கூடிய நமக்கு, அந்திலிருக்கும் சிறு வலியைக்கூட வாசிக்கையில் தாங்க முடியவில்லை. அவர்கள் எப்படி யுத்தங்களின் பெருவலியைத் தாங்கி வாழ்வை நகர்த்துகிறார்கள்.? என்கிற ஐயப்பாடு இயல்பாகவே ஏற்படுகிறது.



 இவ்வாறு போலி வார்த்தைகளைச் சொல்லி பொருட்களை விற்கும் கும்பலைப் பற்றி 'மாயமான்கள்' என்ற பத்தி எழுதியிருந்தேன். சிலவற்றைக் குறித்து அதில் விரிவாக இருக்கும்.   https://tayagvellairoja.blogspot.com/2015/12/blog-post_49.html -இங்கு சுட்டி அந்த பத்தியை வாசிக்கலாம். நான் எழுதிய 'ஒளிபுகா இடங்களின் ஒலி'  புத்தத்திலும், 'மாயமான்கள்' பத்தி இடம் பொற்றுள்ளது.

-          தயாஜி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக