#கதைவாசிப்பு_2020_4
கதை – மிருகத்தனம்
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
‘நாம் எப்போது வேண்டுமானாலும் நம்மை நேசிக்கின்றவர்களுக்கு
தேவையில்லாதவர்களாக மாறிவிடலாம்…….!!!.’
இப்படியான ஒரு வார்த்தை இக்கதையில் எங்கும் சொல்லப்படவில்லை.
ஆனால் கதையை வாசிக்கையில் நம் காதுகளுக்கு யாரோ இதனைச் சொல்லிக்கொண்டே போகிறார்கள்.
இப்போதும் அதனை யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ‘உன்னை மாதிரி திறமைசாலி இல்ல’ ‘எதை
கொடுத்தாலும் பேசியே வித்துடற’, ‘உன்னை மாதிரி ஒரு நண்பன் யாருக்கும் கிடைகாது’ ‘நீ
என்னோட பாக்கியம்’, போன்ற வார்த்தைகளை தினமும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக
எல்லாம் மாறிக்கொண்டே வந்தது. ஒரு நாள் ஏதுமில்லாமல் தூக்கியெறியப்பட்டேன்.
இக்கதையில் ஒரு வாக்கியத்தை எஸ்.ரா எழுதுயிருப்பார்.
‘ஆனால் கடந்த சில வாரங்களாக நோவா குரைப்பதில்லை
என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். அப்படித்தான் ஒரு நாளில் நாம் எல்லாவற்றையும்
கண்டு பிடித்துக்கொண்டிருக்கிறோம். இனியும் கண்டுபிடிப்போம். பலருக்கு அதில் காலதாமதம்
ஆகிவிடுவதுதான் வேதனை.
‘மிருகத்தனம்’ என்னும் இக்கதை மூன்று பேரைப் பற்றியது.
மனைவி சியாமளா, கணவன் ராஜன், நோவா என்னும்
ஜெர்மன் ஷெப்பர்ட்.
நாய்கள் வளர்பதில் ஆர்வமும் அவை மீது பாசமும்
உள்ளவன் ராஜன். அப்படி இல்லாவிட்டாலும் ஏதோ பார்த்துக்கொள்கிறாள் சியாமளா. நோவாவும்
ராஜனும் எப்போது சினேகமாக இருப்பதை அவள் விரும்பதில்லை. அதன் பொருட்டு நோவாவை சமயங்களில்
திட்டவும் செய்கிறாள்.
கணவன் மனைவி பிரிந்து விடுகிறார்கள். அவளால்தான் அவனுடன்
வாழ முடியவில்லை. ஆனால், நோவாவை தானே வைத்துக் கோள்கிறேன் என்கிறாள். இவ்விடத்தை வாசிக்கும்
பொழுது மனம் குழம்பாமல் இல்லை. பிரிவின் பின் எந்த நினைவுகளும் கூடாது என்பதுதான் எழுதப்படாத
மனசட்டம். அப்படி வந்து நிற்கும் நினைவுகள் ஏற்படுத்தும் வலி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால்
தன்னாள் ராஜனிடம் வாழ முடியாது என்று முடிவெடுத்தப்பிறகு அவனை நேசிக்கும் அவனால் நேசிக்கப்படும்
நோவாவை தான் வைத்துக்கொள்ள நினைப்பது தனக்கான வலியை விட அவனுக்கு வலி அதிகம் வேண்டும்
என்பதாலோ.
கதையின் அடுத்த கட்டம் நம் மனத்திரையில் மெல்லிய
கீறல்களைப் போடுகிறது. அடுத்தடுத்து அந்த கீறல்கள் எல்லாம் சேர்ந்து மனத்திரையை மொத்தமாக
கிழித்துவிடுகிறது.
பிரிவிற்கான காரணம் மெல்ல தெரியவருகிறது. சாப்பாடு,
பணம், அதிகாரம், இந்த மூன்றையும் தவிர வேறெதிலும் ராஜனுக்கு நாட்டமில்லை. தன் தங்கை திருமணம் முடித்து தான்
தனியாக இருக்கும் சூழலை அவளால் எதிர்க்கொள்ள முடியாமல் காதல் போன்ற ஏதோ ஒன்றால் ராஜனை
ஆயிரம் ஆயிரம் கனவுகள் கொண்டு திருமணம் செய்துக்கொள்கிறாள். அவளின் கனவுகள் என்ன ஆனது என்பதை ஆசிரியர் இப்படியாக சொல்கிறார்;
அப்போதுதான் அவர்களுக்கு தேனிலவு முடிந்தது. வேலை முடிந்ததும் கனிணி முன் அமர்கிறார்
ராஜன், அந்த கடற்கரை நட்சத்திர விடுதி கதவை திறந்து வெளியில் வந்து அமர்கிறாள். ‘அவள்
நட்சத்திரங்களைப் பார்த்தபடியே அவன் தன்னை முத்தமிட்டானா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ஒரேயொரு
முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவுப்பொட்டலத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட நூலை
அவிழ்ப்பவனின் அவசரம் போன்றே இருந்தது…….’
இன்னொரு வருமானம் தேவை என்பதால்தன அவளை திருமணம்
செய்துக் கொண்டதாக அவன் சொல்லியும் விடுகிறான். மெல்ல மெல்ல இருவரும் மனவிலக்கு பெறுகிறார்கள். ராஜன்
பக்கத்திலேயே வேறு இடத்திற்கு வேலைக்குப் போகிறான்.
நோவாவை மட்டும் தான் வைத்துக்கொள்ளவதாக சொல்லிவிட்டாள்.
சாமயங்களில் நோவாவைப் பார்க்கையில் அவளை அறியாமலேயே அதன் மீது துக்கம் வந்து விடுகிறது.
மனிதனுக்கு தேவையான போது அவனுக்கு போர் அடிக்கும் போது பயன்படும் வளர்ப்பு பிராணிகல்
போல தானும் ஆகிவிட்டாலோ என்கிற துக்கமாகக்கூட இருக்கலாம்.
நோவா குரைக்காததைக் கண்டுபிடித்தவள் அதனை குரைக்க
வைக்க பலவகையில் முயல்கிறாள். ஒரு முறை ராஜனிடமும் அழைத்துச் சென்று ஆலோசனைக் கேட்கிறாள்.
கடைசியாக மருத்துவரை நாடுகிறாகள். அவருக்கும் சட்டென காரணம் பிடிபடவில்லை. ஒரு யூகமாக
, பெட்டைநாயுடன் சேராததும் கூட காரணமாக இருக்கலாம் என்றுசொல்கிறார். அதற்கு உதவ ஒருவரை
எண்களைக்கொடுக்கிறார். அப்போதே அவள் தொடர்புக்கொண்டு செல்வதற்கா நாளை முன்பதிவு செய்கிறாள்.
மறுநாள்
அங்கு செல்கிறாள். சிறிது நேரத்தில் அங்கு நோவாவிற்கு இணையான பெண் நாயை ஒருவர் கொண்டுவருகிறார்.
அரைமணிநேரம் முயன்றும். ஏதும் நடக்கவில்லை. பெண் நாய்தான் குரைத்ததே தவிர நோவா அதனைக்
குரைக்கவில்லை. பெண் நாயுடன் அதன் உரிமையாளர் புறப்படுகிறார். நோவாவின்
வலிமையான மௌனத்தை மீண்டும் சுமந்துக் கொண்டு அவர்கள் புறப்படுகிறார்கள்.
அவளுக்கு
வேறு வழி இல்லை. நோவாவை விட்டு பிரிவதுதான் சரியென முடிவெடுக்கிறாள். அதன் இருப்பு
தனை மட்டுமல்ல தனது திருமண ரணத்தையும் நினைவுப்படுத்தை தன் இயல்பையும் மாற்றிவிடுமோ
என அஞ்சிகிறாள். மாறுநாள் முகவர்களிடம் பேசி நோவாவை விற்பதற்கு ஏற்பாடு செய்கிறாள்.
நோவாவை வாங்குவதற்கு ஒரு வருகிறார். சியாமளா
அவரை மறுநாள் வந்து நோவாவை எடுத்துக் கொள்ளச்சொல்கிறாள்.
அன்று காலைமுதல் நோவாவுடன் ஊரைச் சுற்றுகிறாள்.
இரவு வீடு திரும்பியதும் வழக்கமான இடத்தில் நோவா படுத்துக்கொள்கிறது. சிறிது நேரத்தில்
விசும்பியப்படி நோவாவைக் கட்டியணைக்கிறாள். “என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது
உனக்கு தெரியுதுடா….” எனவும் புலம்புகிறாள். நோவா தன் நாக்கு ஈரத்துடன் அவள் கைகளைத்
தடவியது. அவள் உடைந்து அழுகிறாள். ஆனால் அப்போது நோவா மௌனமாகக் காதுகளை அசைக்கிறது.
அப்போதும்
கூட நோவா குரைக்கவோ மெல்லமாய் சத்தமிடவோ இல்லை? என்கிற கேள்விகள் எனக்குள் பன நினைவுகளை
தூண்டிவிடுகிறது. வாசர்களைக் இக்கதை தங்களில் செயல்பாடுகள் மீதான பாதிப்புகளை திரும்பிப்பார்க்க
வைக்கும் என நம்புகிறேன்.
தொடக்கத்தில்
இக்கதையில் இல்லாத ஒரு வாக்கியத்தை எழுதியிருப்பதாகச் சொல்லியிருப்பேன் அதனை இவ்வாறு
முடிக்க நினைக்கிறேன்.
‘நாம் எப்போது வேண்டுமானாலும் நம்மை நேசிக்கின்றவர்களுக்கு
தேவையில்லாதவர்களாக மாறிவிடலாம்… அவ்வாறே நாம்
விரோதித்த யாரோ ஒருவர் நம்முடன் சேர்ந்து நம்
துக்கத்தை பறிமாறிக்கொள்ளலாம்…’
-
தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக