Pages - Menu

Pages

ஜனவரி 03, 2020

#கதைவாசிப்பு_2020_2 'புர்ரா'


#கதைவாசிப்பு_2020_2
கதை – புர்ரா
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் – அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது




      புறக்கணிப்பு. சிறிய சொல். ஆனால் இதன் வலி எல்லாவற்றையும் விட பெரியது. சிலருக்கு நம்புவதில் சிரமம் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் நடக்காமல் இருந்திருக்காது. சிலரின் வாழ்நாளுக்கான உந்துதலும் அதுதான் சிலருக்கு வாழும் வரை இதயத்தை குத்திக்கிழிக்கும் ஊசியும் அதுதான்.

     எங்கெல்லாம் புறக்கணிப்பு நடக்கிறது. எல்லா இடத்திலும். எவருக்கெல்லாம் புறக்கணிப்பு நடக்கிறது. எல்லாருக்குமேதான்.

     கருப்பாக இருப்பதால் குழந்தையிலிருந்தே புறக்கணிப்புக்கு ஆளானவர்கள் எத்தனை பேர். ஏன் புறக்கணிப்பு நடக்கிறது. உன்னை விட நான் உயர்ந்தவன் என்பதாலா? அதனால்தான் ஜாதி தூக்கிகளுக்கும் இதற்கும் அதிக தொடர்பு இருக்கிறா?

     என் வாழ்வில் பல வகைகளில் பல வழிகளில் புறக்கணிப்பிற்கு ஆளாகியுள்ளேன். இப்போதும் அது ஒரு மாதிரி வலியைக் கொடுத்தாலும், அன்றைய தினத்தில் அந்த வயதில் அழுகையும் வேதனையுமே பிரதானமாக இருந்தது.

     நம்முடன் போட்டிப்போட விரும்பாதவர்கள் ஒதுங்கிக்கொள்வார்கள். முடியாதவர்கள் நம்மை புறக்கணித்துக்கொள்வார்கள். அப்படி சொல்லி முடிக்கவும் முடியவில்லை. ஏமாற்றங்கள் துரோகங்கள் செய்தவர்களிடம் போட்டிப்போட விரும்பாமல் புறக்கணித்திருக்கிறேன். அதில் கொஞ்சமாய் நிம்மதி கிடைக்கிறது. அப்படியாயின் புறக்கணிப்பு நல்லதா?

     நம் எதிர்ப்பைக் காட்ட புறக்கணிக்கிறோம். நம் ஒற்றுமையைக் காட்ட புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம்.

இந்த யோசனையை இத்தனை யோசனைகளை யோசிக்க வைத்தது ‘புர்ரா’.

     மகளில் அர்த்தங்கள் அற்ற வார்த்தை தாய் தந்தையை கோவமடையச்  செய்கிறது. அதற்கான காரணத்தைத் தேடக்கூட நேரமில்லாமல். ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ‘கூடலிட்டுக்’ கொள்கிறார்கள். அவசர புறச்சூழல் மகள் மீதான கவனத்தைக் குறைக்கிறது. இருந்தும் அவளின் எதிர்காலம் கருதி சிறந்த பள்ளிக்கு சேர்க்கிறார்கள். அங்கும் அர்த்தமில்லாத சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள் என புகார்  வருகிறது. மகள் மீதான குறைந்த கவனம் நாளடைவில் புறக்கணிப்பாக மாறுகிறது. தங்களில் இயலாமைக்கு எல்லாம் இன்றைய நிலமைக்கு எல்லாம் முகள் தான் காரணம் என இருவரும் ஒரு கட்டத்தில் எண்ணவும் செய்கிறார்கள்.

     மகளுக்கு புதியப்பள்ளியில் நண்பர்கள் யாரும் இல்லை. அவளுக்கு அங்கு யாரையும் பிடிக்கவில்லை என்கிறாள். அதற்குக்கூட காரணம் கேட்காமல் மிரட்டி அதுவெல்லாம் தவறென்றும் நாளையே அவளுக்கு நண்பர்கள் கிடைக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறாள் அம்மா.

     இதற்கிடையில் எதிர்ப்பாராத விதமாக மனைவி வேலைக்குச் செல்லும் இரயிலில் கணவனும் செல்கிறான். அவனை அவள் கண்டுக்கொள்ளவேயில்லை. அவளுக்கான வட்டத்தில் அவள் அவனை உள்நுழைக்க விரும்பவில்லை. வீட்டைத் தாண்டிவிட்டடால் ஆளுக்கு ஆள்  தங்களுக்கான உலகத்தை கட்டமைத்து விடுகிறோம். சமயங்களில் சிலருக்கு அங்கே தனிக்குடும்பம் கூட அமைந்துவிடுகிறது.

     ஒரு முறை எதார்த்தமாக மகளிடன் அந்த அர்த்தமற்ற ‘புர்ரா’-வை அப்பா கற்றுக்கொள்கிறார். மகளிடமே அதனை சொல்லிக்காட்டுகிறார். அவரால் சரியாக சொல்ல முடியவில்லை. திரும்ப முயல்கிறார். அது ஒரு கொண்டாட்டமாக ஆகிறது. அப்பாவின் அழுத்தம் குறைகிறது. உற்சாகமாகிறார். வேலை முடிந்து அம்மாவும் வருகிறார். அம்மாவிடம் சொல்லவேண்டாம் அடிப்பார் என்கிறாள் மகள்.

     அர்த்தமற்ற வார்த்தைச் சொல்லி விளையாடியதில் மனம் இலகுவாகிவிட்ட அப்பா, அம்மாவை இழுத்து முத்தமிட முயல்கிறார். சட்டென கணவனை விலக்கி, ‘இப்போதான் வேலை விட்டு வந்தேன். நீங்க வேற உயிர வாங்கறிங்க ‘ என்கிறார்.

     அப்பாவின் முகம் மாறுகிறது. கோவத்தில் எழுந்து குளியலறை செல்கிறார். கண்ணாடி முன் நின்று ‘புர்ரா’ என்று கத்துகிறார். மனம் நிம்மதியாகிறது. இன்னுமின்னும் இப்படியான சொற்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.

     வாசித்து முடிக்கையில் ,கதை முழுக்கவும் புறக்கணிப்பை சுற்றியேதான் பயணித்தது தெரியவருகிறது. அந்த பயணம் அதன் வார்த்தைகளையும் தாண்டி நம் வாழ்க்கையிலும் புகுந்து நம்மையும் திரும்ப்பிப்பார்க்கச் செய்கிறது. அது வெறும் திரும்பிப்பார்ப்பதா அல்லது திருந்திப்பார்ப்பதா என்பது அவரவர் விருப்பம்.

-          - தயாஜி
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக