தனிமையின் கொடுமை
அத்தனை சுமையானது அல்ல
மருத்துவமனையின்
அடுத்த அழைப்பிற்கு
காத்திருக்கும் வரை
காத்திருத்தலின் நேரம் சுமையாவது காதலில் சாத்தியமாகலாம்
மருத்துவமனை முன்பதிவுக்கு தாமதமாகிவிடுவதை காட்டிலும்
பெரிதாக முடியாது
உறவுகள் கொடுக்கும் வலி
கொஞ்ச நேர உரையாடலில் தெளிந்துவிடலாம்
மருத்துவர் ஒருவர்
தன் நோய் குறித்து சொல்ல
" கூட வேற யாரும் வரலையா?"
என கேட்டு புருவம்
சுருக்கி கொடுக்கும் வலி
இதயத்தில் சிற்சில குண்டூசிகளை குத்திக்குத்தி பார்ப்பதை
அத்தனை எளிதில்
தெளிவுப்படுத்த முடியாது
அவளின் எலும்புகள்
கொடுக்கும் வேதனையை
புரிந்துக்கொள்ள
உட்கார்ந்து அறிவியல் பேசுவதை விட
உடன் வந்து அவளை
தாங்கிப்பிடிப்பதுதான்
உத்தமமானது
உணர்வுப்பூர்வமானது
அவை எலும்புகள் அல்ல
யாரோ செய்துவிட்ட
பாவத்தில் பிரம்படியாகக்கூட
இருக்கலாம்
ஆனால்
ஏனே தானே சுமக்கும்படி சபிக்கப்பட்டிருக்கிறாள்
அடுத்தடுத்த தடுப்புகளில்
வந்து நிற்பவர்களில்
அவரவர்க்கான அன்பின்
பறிமாற்ற மொழிகள்
இவளின்
தனிமை தடுப்பில் மட்டும்
கூரம்புகளாய் புகுந்து
சிறிய காதுகளை
துளைக்காமல் விடுவதில்லை
அகல திறந்து கிடக்கும்
வார்டின் வாசல் கதவிற்கு வாயிருந்தால் சொல்லியிருக்கலாம்,
"நீ கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..
யாரும் வந்தா எழுப்பி விடறேன்"
உடல் பாரத்தைத் தாங்கும்
நவீன பட்டன் கட்டில் கூட
அவளின் மன பாரத்தை தாங்காது தவிக்கின்ற போது
அந்த வயது வந்த குழந்தை எப்படி தாங்கிக்கொள்ளும்
ஆயிரம் வேளைகளில்
அடுத்தவர் மீது அன்பு காட்ட
கொஞ்ச நேர இடைவெளி கிடைக்காதது
பணத்திற்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் சம்பாதிக்கவில்லை
வேலைக்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் செய்துவிடவில்லை
இயலாமைதான் காரணம் என்றால்
சரி ஒப்புக்கொள்ளலாம்
இது அன்பின் இயலாமை
அன்பிற்கே இயலாமையெனின் உறவுகளின் ஆணிவேர் எங்கணம் சென்று நீர் தின்று உயிர் பிழைக்கும்
கொஞ்சமாய் புன்னகை
அதைவிட கொஞ்சமான விசாரிப்பு
அதைவிடவும் கொஞ்சமான அக்கறை
அதைவிடவும் கொஞ்சத்தின் கொஞ்சமான அன்பு
மருத்துவமனை தனிமைச் சோகங்களை மெல்ல மெல்ல துடைத்துவிடட்டும்
ஏனெனில்
நாளை
நம் நாக்கு மறுத்துப்போகலாம்
நம் கண்கள் பார்க்க மறக்கலாம்
காதுகள் ஏனோ வலிக்கலாம்
கால்களின் எலுப்பு
முறிந்துக்கொள்ளலாம்
கொஞ்சமாக இதயம் தன் இசையை நிறுத்திச்சிரிக்கலாம்
#தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக