Pages - Menu

Pages

ஜூலை 17, 2016

கதை வாசிப்பு - 17 ' ராணி '

கதை வாசிப்பு - 17 ' ராணி '

    ஜூலை மாத காலச்சுவடு (2016) இதழில் சக்கரியாவின்  'ராணி' சிறுகதை இடம்பெற்றுள்ளது. மலையாளத்திலிருந்து சுகுமாரன் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

   பொதுவாக சிறுகதைகள் ஒரு சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும். அச்சிக்கலுக்கான தீர்வைதான் நாமும் தெரிந்துக்கொள்ள ஆவல் கொள்வோம். ஆனால் நவீன சிறுகதைகள் சிக்கல் இல்லாமல் கூட வாசகருடன் சேர்ந்து தன்னை நகர்த்திக்கொள்கிறது. மையங்கள் அற்ற நவீன சிறுகதைகளின் அடர்த்தியில் வாசகரும் சிக்கிக்கொள்கிறார் பின்னர் தன் மனநிலையை பொறுத்து அச்சிறுகதைக்கு ஓர் புரிதலைக் கொடுத்து, தன் வாழ்வின் சிக்கலை கண்டுகொள்ள எத்தனிக்கிறார்.
புறவய சிக்கலில் இருந்து அகவய சிக்கலை நோக்கி வாசகர் நகரத்தொடங்குகின்றார். அத்தகைய சாயலைத்தான் இக்கதையில் உணர முடிகின்றது.

கதை,

   ராணி, 24 வயதிலெயே குழந்தை பெற்று சீக்காளி ஆகிவிடுகிறாள். அப்போது தோன்றிய முதுகு வலி கணவன் கட்டியணைக்கும் போதும் தடையாகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வீட்டிற்கே மருத்துவரை அழைத்துவருகிறான்.
ராணி ஆடைகள் கழற்றப்பட கூச்சப்படுகிறார், ஆடைகள் கழற்றப்பட்டால்தான் உடல் நோயை தீர்க்க தைலம் உடல் முழுக்க தடவ முடியும் என கணவன் அவளை சமாதானம் செய்கிறான். ஆனாலும் ஒரு கையால் மார்புகளையும் மறு கையால் நாணமுள்ள இடத்தையும் மூடிக்கொள்கிறாள்.

   கணவனுக்கே அவளை அப்படி பார்க்கையில் ஏதோ பெண்ணென் தோன்றி ஆசை வருகிறது. அந்நேரம் பார்த்து மருத்துவர் மூலிகை இலை தேவைப்படுகிறதாக சொல்கிறார். தான் வழக்கமாக கொண்டு வந்தது எதிர்பாரா விதமாத தீர்ந்துவிட்டதை நினைத்து நொந்துக்கொள்கிறார்.

   கணவன் அந்த மூலிகை இலை பக்கத்தில் கிடைக்கும், தான் கொண்டுவருவதாக கூறி செல்கிறார் .தூரத்தில் இருக்கும் நண்பனின் பழைய வீட்டு பின்புறம் மூலிகை இலைகளை பறித்துவிட்டு திரும்பும்போது புதர் மண்டிய அவ்விடம் அவருக்கு பழைய நினைவுகளை கொடுக்கிறது.  பழைய வரந்தாவில் கொஞ்சம் அமர ஆசை வர அமர்கிறார். எதிர்பாராத விதமாக எண்ண ஓட்டத்தினால் உறங்கிவிடுகிறார். நினைவுகளை அவரை எங்கெங்கோ அழைத்து செல்ல விழித்துவிடுகிறார். கையில் வைத்திருக்கும் மூலிகை இலைகள் வாடி கிடக்கின்றன. அவசர அவசரமாக சாலைக்கு சென்று ஆட்டோ மூலம் வீடு செல்கிறார். வீட்டுக்கதவை ராணிதான் திறக்கிறாள். தாமதத்தின் காரண கேட்க எதும் சொல்லாமல் மருத்துவத்தை குறித்து கேட்கிறார்.

   மருத்துவர் அவருக்காக காத்திருந்ததையும் அதோடு நடுவில் எழுந்து போய் மருத்துவருக்கு தெநீர் கொடுத்தது வரை சொல்கிறாள்.

   அப்போதுதான் கணவனுக்கு நினைவுக்கு வருகிறது, "இப்போ உன் வலி எப்படியிருக்கு?" என்கிறார். ராணி கிறக்கம் நிறைந்த கண்களுடன் "ஓ அது காணாமப் போயிடுச்சு" என சொல்ல கதை அவ்விடத்தில் முடிகிறது.

நிறைவாக,

   வீட்டுக்கு தாமதமாக வந்த கணவனும் மனைவியும் உரையாடுவது இக்கதைக்கு அவசியமானதாக உள்ளது. ஏனெனில் அவ்விடம்தான் வாசகருக்கான வேலையை சக்கரியா கோடுத்துள்ளார்.
உதாரணமாக, மூலிகை இலை இல்லாம என்ன செய்தாரு என கணவன் கேட்க, இருக்கிறதை வச்சி காரியத்தை நடத்தலாம்னு வைத்தியர் சொன்னாரு என மனைவி கூறுகிறார்.

   ஆனால் கதையின் முடிவில் ஒரு நொடி யோசித்து மீண்டும் மேற் சொன்ன உரையாடல் முதல் அக்கடைசி உரையாடல்களை திரும்ப படிக்க வைக்கிறார்.

   என்ன நடந்திருக்கும் என யூகிக்க இடத்தையும் கொடுத்து அப்படி நடந்திருக்க கூடாது என வாசகரை எண்ணத் தூண்டுவதுதான் இக்கதையின் வெற்றி.

- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக