Pages - Menu

Pages

மார்ச் 11, 2016

’எங் கதே’ - அத்தனை பேரின் ரகசியங்கள்



எங் கதெ –  அத்தனை பேரின் ரகசியங்கள்





   சமீபத்தில் இமையம் எழுதிய ’எங் கதெ’ நாவலை படித்து முடித்தேன். இயல்பாகவே புத்தகங்கள் வாசிப்பதில் வேகம் கொண்டவன் நான். சில அழுத்தங்கள் காரணமாய் முந்தைய வாசிப்பு வேகம் அதே வேகத்தில் இல்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வாசிப்பதால் மட்டுமே அதன் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதை நம்பி , செய்துக்கொண்டிருக்கிறேன். 

   வாசிப்பதற்காய் அவ்வபோது வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் கூடிக்கொண்டே போகிறது. அலமாரியில் இருக்கும் புத்தகங்களை மனதில் தொன்றும் விருப்பம் காரணமாய் இப்போது படிப்பது அல்லது எப்போதாவது படிப்போம் என்பதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

   படித்த புத்தகங்கள் குறித்த நினைவுகளுக்கு அதனை குறித்து அவ்வபோது எழுதி வைக்கிறேன். அவ்வகையில் தற்போது வாசித்து முடித்த இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவலை குறித்து எழுதுகிறேன்.
விநாயகத்தின் பார்வையில் தானே சொல்வதாக நாவல் பயணிக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களை படிக்கையில் எனக்கு திகில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருந்த மனநிலையை அந்நாவலில் கண்டதுதான் காரணம். படித்து முடித்து தற்காலிகமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் என்னை ஈர்த்தார். காதலா காமமா என நூல் அளவே வித்தியாசத்தில் கொஞ்ச நாள் இந்த பக்கமும் கொஞ்ச நாள் அந்த பக்கமும் இருந்தேன். என்னை விட ஏழு வயது வித்தியாசம் கொண்ட அந்த பெண் என் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என பிரார்த்தனைகள் கூட தொடர்ந்தன. அந்த பெண் எனக்கான வாழ்வு எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதை கோடிட்டு காட்டினார். மேலும் அவர் குறித்து அவருடனான நாட்கள் குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல அதற்கு காலமும் அதிக தூரமில்லை என நம்புகிறேன். நாங்கள் பரிமாறிய முத்தகங்களுடன் அவர் குறித்த நினைவுகளை கொஞ்சம் தள்ளி வைக்கிறேன்.

   ’எங் கதெ’ நாவல் முழுக்க காதலில் சிக்குண்டவனின் மனநிலை ஆழமாக பதிகிறது. யாருக்கு காதல் வரலாம், யார் மீது காதல் வரலாம் போன்ற கட்டுபாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து காதல் மட்டுமே என பயணிக்கிறது நாவல்.

   இரண்டு குழந்தைகளுடன் கணவனை இழந்த பெண் - கமலா, அவள் மீது காதல் கொள்கிறான் விநாயகம் . விநாயகத்தின் மனப்போராட்டமும் அவனது மனசாட்சியின் உரையாடலும்தான் ’எங் கதே’-யில் நெடுங்கதையாக விரிந்துச்செல்கிறது. இன்னொரு பக்கம் கமலாவின் மௌனம். ஒரு பெண்ணின் மௌனம் எத்தனை ஆழமானது எத்தனை ஆபத்தானது என நினைக்கையில் நமக்குள்ளே இருக்கும் விநாயகம்கள் கண் கலங்குகின்றார்கள்.

   நாவல் முழுக்க பேச்சு மொழியிலேயே செல்கிறது. அது நாவலுக்கு பலத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அதோடு ஒன்றை சொல்வதற்கு இன்னொன்றை உதாரணாமக சொல்வதும் இயல்பாய் கைகூடியுள்ளது கதைசொல்லிக்கு;
உதாரணமாக;

‘பாம்பு ஒரு கொத்திலேயே பூரா விசத்தயும் கொட்டதான செய்யும்? அப்படிதான் கொட்டினா கமலா..’ 

‘கருவாட்டு குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாயிதான் நான்’

‘காத்தடிக்கவே காத்திருந்த எல மாரி விழுந்துட்டேன்’

’மண் புழுவால நெளியத்தான முடியும்.? சீற முடியாதுல்ல?’

’தவளைக்கி வாழ்க்க வளையிலதான..’

   இப்படியாக விநாயகம் நன் நிலையை மிக துள்ளியமாக புரிந்துக் கொண்ட பின்னரும் மனம் மாறவில்லை. கமலாவை மறக்கவுமில்லை. கமலா கமலாதான் எல்லாம். ஆனாலும் கமலாவை கல்யாணம் செய்வதை விநாயகம் தவிர்க்கிறான். கமலாவும் ஒரு முறைக்கு மேல் அவனிடம் திருமணம் குறித்து பேசுவதாய் தெரியவில்லை. 

   ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கலை மனப்பிறழ்வு சாயலில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். யாரது மனப்பிறழ்வு என யோசிக்கையில் நமக்கு ஒன்றும் தெரியாது என ஒதுங்கிவிட முடியாது. நம் மனசாட்சிக்கு நெருக்கமானவனாக ஆகிவிடுகிறான் விநாயகம்.

   விநாயகத்துக்கும் அவனது தங்கைகளுக்கும் இருக்கும் பாசம் நம் மனதை கணக்க செய்கிறது. இயல்பான குடும்ப சூழலை கண் முன் காட்சியாக நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர். 

   நமக்கு தெரிந்த அருணகிரிதாரின் கதை, பெண் பித்து பிடித்தவரை தொழுநோய் தாக்குகிறது. இருந்தும் பெண் பித்து பிய்த்து தின்கிறது. தொழுநோய் காரணமாக எந்த பெண்ணும் அவரை நெருங்கவில்லை. காமம் தலைக்கேறிட அலைகிறான், வீட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் கொண்டு சென்றாவது பெண்ணை அனுபவிக்க திண்டாடுகிறார். எல்லாம் கைவிட்ட நிலையில் உனக்கு பெண்தானே வேணும் நானும் பெண் தானே என்னை அனுபவி என , அவர் முன் நிற்கிறாள் அவரது சகோதரி. அது அவனுக்கு பேரிடியாயாக விழுகிறது. அந்த பேரிசைச்சல் அவர் காதை கிழிக்கிறது. இனியும் தான் வாழக்கூடாது என கோவில் கோபுரத்தில் ஏறி தன்னை மாய்த்து கொள்ள குதிக்கிறார். சட்டென எம்பெருமான் முருகன் தோன்ற , அவருக்கு அருள் பாலிக்க, அவர் அருணகிரிநாதராகி திருப்புகழ் பாடுகிறார். 

அருணகிரிநாதருக்கு அருளும் முருகன்


   இக்கதையே ’எங் கதெ’ நாவலில் உள்ளாடுவதாக பார்க்கிறேன். பெண் பித்து பிடித்த அருணகிரிதார். கமலா பித்து பிடித்த விநாயகம். தன்னை அனுபவி என்கிற அக்காவால் தன்னை மாய்த்துக்கொள்ள புறப்படுறார் அருணகிரி. கமலாவை செயல் சந்தேகத்தை கொடுக்க , அவளை கொலை செய்ய புறப்படுகிறான் விநாயகம். தற்கொலைக்கு சில நொடிகளில் தோன்றி அருள் பாலிக்கும் முருகன் அருணகிரிநாதருக்கு இன்னொரு வாழ்க்கையை கொடுக்கிறார். கமலாவை கொலை செய்ய இருக்கும் சில நொடிகளில் தன்னை குறித்தும் வாழ்வு குறித்து ஞானோதயம் கிடைக்கும் விநாயகம் அவள் காதில் பேசிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறார்.  

நாவலாசிரியர் இமையத்துடன்
   ஞானமும் வாழ்வு குறித்த தெளிவும் கிடைப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல என்பதை இந்நாவல் சொல்கிறது. நான் இந்நாவலை அவ்வாறுதான் புரிந்துக் கொள்கிறேன். அதோடு என் மனதின் மறைத்து வைத்திருக்கும் ரகசியமும்  உங்கள் மனதில் மறைந்திருக்கும் ரகசியமும் இப்படி ‘எங் கதெ’ யாக வெளிப்படுவது யாருக்கும் தெரியாமல் நம்மை கொஞ்ச நேரம் அழவைக்கிறது. அதன் மூலம் வாழ்வு குறித்து ஒரு மாற்றுப்பார்வையாவது நமக்கு கிடைத்தால் இந்நாவலில் பிறப்புக்கு ஒரு காரணமாக அமையும்.

  இணையத்திலும் இலக்கிய பரப்பிலும் இந்நாவல் குறித்து பலவகையான கருத்துகள் உள்ளன. எனக்கும் அவ்வகையில் தோன்றியதை எழுதியுள்ளேன். நீங்கள் மாறுபடலாம். அது குறித்து உரையாடலாம். அதற்கு இமையத்தின் ‘எங் கதெ’ நாவலை வாசித்துவிட்டு வரவும்.


-தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக