Pages - Menu

Pages

டிசம்பர் 21, 2015

மாயமான்கள்


   நம் நாட்டு உணவங்களில், திரையரங்கு வாசலில், வங்கி, நம்பர் எழுதும் கடை, கோவிலுக்கு அருகில் என மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் கையில் பிளாஸ்டிக் பையுடன் தோளில் பள்ளிப் பையுடன் பாவ முகத்துடன் ஒரு குரல் கேட்கும். வேண்டா வெறுப்பாகவும், இளகிய மனதுடனும் நம்மிடம் இருக்கும் சில்லறைகளை கொடுத்துவிட்டு வழக்கத்திற்குத் திரும்புவோம். சில்லறையைப் பெற்றுகொண்ட அந்தப் பாவ முகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் முடிந்தவரை வசூல் பெற்று சென்றுவிடும். நடப்பது அவ்வளவுதான்.  

   ஆனால் உண்மையில் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதையும் தாண்டி சில இருக்கின்றன. அதனை கண்டறிய எங்களின் ஒலிப்பதிவு கருவியை பிறர் கண்ணில் படாதவாரு வைத்துக்கொண்டு சாப்பாட்டு கடையில் அமர்ந்திருந்தோம். சாப்பாடுக்காக அல்ல அந்த சிறுவனுக்காகக் காத்திருந்தோம். சில்லறைக் காசுகளை வேண்டுமென்றே சாப்பாட்டுத் தட்டுக்கு அருகில் வைத்திருந்தோம். யாரெல்லாம் சில்லறையைப் போடுவார்கள் என அந்தப் பரிதாப முக சிறுவர்களால் யூகிக்க முடியும்.
நினைத்ததுபோலவே எங்களிடம் வந்து நின்றான் அந்தச் சிறுவன். ஒலிப்பதிவுக் கருவியை தயாராக்கிவிட்டேன்.

  “அண்ணே பேனா வாங்கிக்கிறீங்களா அண்ணே, ரெண்டு வெள்ளிதான். நான் ஸ்கூலு படிக்கிறேன். அப்பா இல்ல அம்மாக்கு சீக்கு. ஒரு தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க. நான்தான் மூத்த பையன். இப்படிப் பொருள் வித்துதான் சாமாளிக்கறோம். நீங்க வாங்கினா எனக்கு உதவியா இருக்கும் உதவி செய்யுங்க அண்ணே…”

   நான் கொண்டு வந்திருந்த ஒலிப்பதிவு கருவிபோலவே சரியாகச் சொல்லவேண்டியதை சொன்னான். அண்ணன், அக்கா இதுதான் மாறுமே தவிர வேறெதுவும் மாறாது. இவ்வளவையும் கேட்டு பணம் கொடுப்போம் அல்லது முடியாதென்போம். ஆனால் நாங்கள் கேள்வி கேட்டோம்.

தம்பி உன்னோட பேரு என்ன

என் பேரு குமாரு

அப்பா பேரு

ம்…”

அப்பா இருக்காருதானே

இல்ல அப்பா செத்துட்டாரு…”

தெரியும் தம்பி. அப்பா செத்துட்டா பேருமா செத்துடும், அப்பாவுக்குன்னு பேரு இருக்கா  
இல்லையா…”

அப்பா பேரு சிவராமன்

அம்மா பேரு?”

ஏன் அண்ணா கேட்கறீங்க

காசு வெணூமா வேணாமா..?”

அம்மா பேரு பாக்கியம்

என்ன படிக்கற

நாலாவது

எங்க படிக்கற..”

தமிழ் ஸ்கூலு

அதான் தம்பி ஸ்கூலுக்குன்னு பேரு இல்லையா..?”

ஞாபகம் இல்ல…”

நாலு வருசமா படிக்கறஸ்கூல் பேரை மறந்துட்டயா..?”

ம்..”

சரி வீட்டுல போன் இருக்கா…”

இருக்கு

நம்பர் கொடு

ஆச்சரியமாக இருந்தது. அந்த மாணவன் கொடுத்தது கைபேசி எண். இது யாருடைய கைபேசி என கேட்டோம்.
 
என்னோடதான் அம்மா வாங்கி கொடுத்தாங்க

சரிஸ்கூலு டீச்சர் நம்பர் இருக்கா

இல்லநம்பரு இல்லஅம்மாவ கூப்பிடத்தான் நம்பரு இருக்கு
  
   கேள்விகள் அவனை உளரச் செய்ததைப் புரிந்து எங்களின் எண்களைக் கொடுத்து ஸ்கூலு சம்பந்தமா ஏதும் உதவி வேணும்ன்னா கூப்பிடச் சொல்லி அனுப்பினோம். இதுவரை நடந்ததெல்லாம் உங்களுக்கும் நடந்திருக்கலாம். இனிதான் முழு விபரமும் இருக்கிறது. இப்படியே இரண்டு வாரங்கள் தேடி அலைந்ததில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வேன் வந்து நிற்கும். அதிலிருந்து சில சிறுவர்கள் தோளில் பள்ளிப் பையுடன் கையில் பிளாஸ்டிக் பொருட்களுடன் இறங்குவார்கள்

   இரவு அதேபோல வேன் வந்து நிற்கவும் இறங்கியவர்கள் வரிசையாக ஏறுவார்கள். உண்மையில் இவர்கள் சொல்லும் கதையெல்லாம் இவர்கள் மனனம் செய்த கதைகள்தான். இது ஒரு வகை வியாபாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அனாதைப் பிள்ளைகளை அல்லது பெற்றோருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பின்னர் பிள்ளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை வியாபாரம்தான் இது. வெறுமனே சில்லறையைப் போடுவதாலும் உதாசீனம் செய்வதாலும் இதனைத் தவிர்க்க முடியாது. பேசவேண்டும். உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். முடிந்தவரை சிக்கியிருப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக