Pages - Menu

Pages

டிசம்பர் 23, 2015

அம்மாவின் எக்ஸ்ரே



                     

     அம்மாவுக்கு கொஞ்ச நாளாக தலை வலி. என்னை பெற்றுவிட்டதால் வந்திருக்க வேண்டிய வலி. பல ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது. மருத்துவமனைக்கு சென்றாக வேண்டிய நிலை. இதோ போகலாம் அதோ போகலாம் என நேரத்தை ஒத்திப்போட்டபடியே அம்மா வலியை பேசிக்கொண்டிருந்தார்.

    எங்களுக்கு வலியென்றால் அம்மா மருந்து கொடுப்பார். அம்மாவுக்கே வலியென்றால் யாரால் என்ன செய்ய முடியும். எப்படியும் நாங்கள் சொல்லும் மருந்து அம்மாவுக்கு வேலை செய்யப்போவதில்லை. சொல்லும் அறிவுரைகளும் அம்மாவின் காதுகளுக்கு எட்டப்போவதில்லை

     ஆனால் அம்மாவின் வலியை எங்களால் தாங்க முடியாது. அம்மா அப்படி செய்வார். அப்பாவும் நானும் ஒரு நாள் ஆழமான யோசனையில் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது. மருத்துவ பரிசோதனையில் தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது. எங்களை அம்மாவில் வலியில் இருந்து காப்பாற்றுவது.

    அதற்கு முன்னரே அம்மாவுக்கு சரியாகிவிட்டதாக தெரிந்தது. அம்மாவே சொன்னார். ஆனால் எங்களுக்கு வலியின் காரணம் தெரிய வேண்டும் போல இருந்தது. அதெப்படி இத்தனை நாளாக அம்மாவின் மூலம் எங்களை படுத்தியெடுத்த தலைவலி எங்கே இருந்தது, எங்கே போனது என தெரிந்துக்கொள்ளாமல் விடுவது. அதற்கான பதில் தெரிந்தால்தான் எங்களுக்கு நிம்மதி என்கிற நிலமைக்கு வந்தோம். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அம்மாவுக்கு தலை வலி வரலாம். அதற்கு என்ன மருந்தென நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
     அம்மாவுக்கு எப்படி சரியானதென அம்மாவும் சொல்ல விரும்பவில்லை. தினமும் அம்மா எங்களை பார்த்து இன்னிக்கு தலை வலிக்கவில்லை என சொல்வதில் என்னமோ இருப்பதாக அப்பாவும் நானும் உணர்ந்தோம். அதன் பிறகு அப்பா அடிக்கடி எதையோ யோசித்துக் கொண்டே இருந்தார். கையில் கிடைக்கும் இரும்பு துண்டுகளை ஒன்றோடு ஒன்று இடிக்க அதன் இசையிலிருந்து எதையோ கண்டுக்கொள்ள முயல்பவராக தெரிந்தார். முன்னரே திட்டமிட்டிருந்தபடி அம்மாவை எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

     அம்மாவுக்கு எப்படியெல்லாம் வலிக்கும், எந்த பகுதியை அழுத்தினால் வலி கொஞ்சம் குறையும் என்பது போன்ற விபரங்களை அம்மாவைவிட அப்பாதான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தார். மருத்துவர் அம்மாவையும் பார்க்கிறார் அப்பாவையும் பார்க்கிறார். உண்மையில் யாருக்குதான் பிரச்சனை என்பதில் குழம்பினார், பின்னர் தன்னிடம் வந்திருந்த பெயரட்டையை பார்த்து அம்மாவின் பெயரை சொல்லி உறுதி செய்துக் கொண்டார்.

    நல்லவேளையாக நான் வாயே திறக்கவில்லை. மருத்துவர்களின் வழக்கமான கேள்வியான ; “உடம்புக்கு என்ன செய்யுதுஎன்ற கேள்விக்கு பதிலாகரெண்டு பேரில் யாருக்கு தலை வலிஎன்றார்.

    இப்போது அம்மா அவரது தலைவலி அனுபவத்தை சிரத்தையுடன் பகிர்ந்துக் கொண்டார். ஆனால் தற்போது ஒன்றும் தலை வலிக்கவில்லை, அப்பாதான் தேவையில்லாமல் அழைத்து வந்ததாக சொன்னார்.

   அன்று மருத்துவருக்கு சம்பள நாள் என்று நினைக்கிறேன். கூடவே வந்த போனஸை விட்டுவிட மனமில்லாமல் எதற்கும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கவேண்டும் என்றார். எக்ஸ்ரே என்ற வார்த்தை அம்மாவை பீதியடைய செய்திருக்க வேண்டும். அதுவெல்லாம் எங்களுக்கு பெரிய வார்த்தை. சொல்லப்போனால் புற்றுநோய் ,ஏய்ட்ஸ் போன்ற வார்த்தைகளைக்கூட நாங்கள் சொல்ல மாட்டோம். பிறகெப்படி பேசுவோம் என்றுதானே கேட்கிறீர்கள். ரொம்ப சிம்பிள். புற்றுநோய்க்கு அந்த நோய் என்றும், ஏய்ட்ஸ்க்கு இந்த நோய் என்றுதான் பேசுவோம். அப்போதுதான் அந்த நோயும் இந்த நோயும் நம்மிடம் வராது என நம்பவைக்கப்பட்டோம். நம்பினோம்.

    எக்ஸ்ரே எடுக்கச் சென்ற அம்மா பயத்துடன் வந்தார். மருத்தவர் அதைவிட பீதியுடன் வெளிபட்டார். கையில் அம்மாவில் தலை எக்ஸ்ரேவாக இருந்தது. அப்படியும் இப்படியும் பார்க்கிறார் மருத்துவர்.

     பதட்டத்துடன் மருத்துவர் அப்பாவிடம் சொன்னார், “உங்க மனைவி தலையில ஆணி மாதிரி என்னமோ இருக்கு… அது என்ன எப்படின்னு..??!!!…” டாக்டர் புருவத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கி அதையே பார்த்துக் கொண்டிருந்தார். 

என்னால் நம்பவே முடியவில்லை. அம்மாவின் தலையில் ஆணியா?

   அப்பா சிரித்துக் கொண்டே, “அடிப்பாவி கொண்டைல ஆணிய குத்தாத குத்தாதன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்.. இன்னுமா திருந்தல… உன்னால பாரு டாக்டரு பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டாரு….”
    






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக